பொதுவாக, சிலர் எல்லா செயல்களையும் தானே தனியாக செய்ய நினைப்பார்கள். பிறர் செய்வது அவர்களுக்குப் பிடிக்காது. அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி அல்லது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி. தானே ஒன்றை பார்த்து பார்த்து செய்தால்தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும். ஆனால், இந்த ஒன் மேன் ஆர்மி மனநிலை நல்லதல்ல. ஏன் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிறர் செய்யும் செயல்கள் ஒருவருக்குப் பிடிக்காமல் போவதற்கு முக்கிய காரணம் தான், செய்வது மட்டுமே சரி என்று நினைக்கும் மனநிலைதான். பிறருக்கு ஒன்றும் தெரியாது, தான் மட்டுமே 100 சதவீதம் சரி என்று நினைப்பவர்கள் இவர்கள்.
எனவே, பிறர் செய்யும் செயல்களில் மிக எளிதாக குற்றம் குறை கண்டுபிடித்து அவற்றை கடுமையாக விமர்சிப்பார்கள். இதனால் அவர்களுடைய இயல்பான குணமே மாறி மிகவும் கடுமையானவர்களாக மாற்றிவிடும். சிறிய தவறு செய்தாலும் அதை பெரிதுபடுத்தி பேசுவார்கள்.
இவர்களுக்கு ஈகோ மிகவும் அதிகமாக இருக்கும். எனவே, பிறரை துச்சமாக மதிப்பார்கள். ’உனக்கெல்லாம் ஒண்ணுமே தெரியாது’ என்று கடுமையாக விமர்சனம் செய்து மனம் புண்பட பேசுவார்கள்.
பிறரை தாழ்வாக நினைப்பதால், இவர்களுக்கு உயர்வு மனப்பான்மை (சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்) வந்துவிடும். இந்த மனப்பான்மையினால் பிறர் உதவி வேண்டாம் என்று விலக்குவார்கள். காலப்போக்கில் பிறரையே வேண்டாம், அதாவது மனிதர்களே வேண்டாம் என்று விலக்கி விடுவார்கள்.
உயர்வு மனப்பான்மை அதிகரித்துக் கொண்டே போகும் அதே சமயத்தில், பிறர் மேல் இருக்க வேண்டிய இயல்பான கரிசனம் கருணையுணர்ச்சி இவர்களை விட்டு விலகிவிடும். எம்பதி என்று சொல்லப்படும் பிறர் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்க்கும் குணம் இவர்களுக்கு என்னவென்று தெரியாமல் போய்விடும்.
மிகுந்த சுயநலக்காரராக மாறிவிடுவார்கள். தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். பிறரைப் பற்றி துளி கூட யோசிக்கத் தோன்றாது.
யாரையெல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, யாரையெல்லாம் வாழ்வில் இழக்கக்கூடாது என நினைக்கிறார்களோ, அவர்களை எல்லாம் இழந்து விடுவார்கள். அல்லது அவர்களுக்குரிய முக்கியத்துவத்தை தர மாட்டார்கள்.
தன் மேல் பிரியம் வைத்திருப்பவர்களையும், பிறரையும் பிரித்து உணரத் தெரியாமல் போய்விடும். இதனால் அவர்கள் வாழ்வில் தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலை வரும். உயர்வு மனப்பான்மை அதிகமாகி, பிறரை எப்போதும் அடக்கியாளத் தொடங்குவர். ஆனால், முரண்பாடாக தன் மனதையே திருப்தி செய்யாமல் ஒரு கட்டத்தில் போய்விடும். எனவே, பேராசைக்காரர்களாக மாறி விடுவார்கள்.
இதற்கெல்லாம் மூல காரணம், தான் செய்வது மட்டுமே சரி, தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனப்போக்குதான் காரணம். எனவே, ஒன் மேன் ஆர்மியாக எல்லா வேலையும் தான் மட்டும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாமல் சுற்றியுள்ளவர்களுக்கு பிரித்துக் கொடுத்து அவர்களை இந்த வேலையை செய்ய வைத்து அழகு பார்ப்பதுதான் நல்லது. அவர்கள் வேலையில் சிறு தவறுகள் செய்தாலும், அதைப் பெரிதுபடுத்தாமல் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தால் சொல்லித் திருத்தலாம். இல்லை என்றாலும் ஒன்றும் பாதகம் இல்லை. ஏனென்றால் இந்த உலகில் மனிதர்களை விட, மனித உறவுகளை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லைதானே?