உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது எது என்று கேட்டால் நம்மில் பலரும் நிலம், வீடு, தங்கம் என பலவற்றைச் சொல்லுவார்கள். ஆனால், உண்மையான சொத்து நமது உடல் ஆரோக்கியம் மட்டுமே. இதற்கு நிகரான சொத்தும் இல்லை; ஆரோக்கியம் தரும் மகிழ்ச்சிக்கு நிகரான சந்தோஷமும் இல்லை.
ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனம் தொடர்புடையது. சிலர் அதிக உணவுப் பிரியர்களாக இருப்பார்கள். இது இயல்பான ஒன்றுதான். அதில் தவறு இல்லை. ஆனால், நாற்பது வயதை நெருங்கியதும் ஒருவர் தனது உணவை கட்டுப்படுத்தி சாப்பிடத் தொடங்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.
நாற்பது வயதிலேயே நமது கட்டுப்பாட்டிற்குள் நமது உணவு வந்து விட வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் நிச்சயம் அதை குறைத்தாக வேண்டும். அசைவத்தில் வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக குழம்பு வைத்து சாப்பிடலாம். இதனால் பயன்படுத்தும் எண்ணெயின் அளவு கணிசமாகக் குறையும்.
முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடப் பழகுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். ஓட்டல்களில் பழைய அசைவப் பொருட்களைப் பயன்படுத்தலாம். சுவையைக் கூட்ட ஏதேனும் பொருட்களைச் சேர்க்கலாம். அவர்களைப் பொறுத்தவரை வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். நமது ஆரோக்கியம் என்பது அவர்களைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம்தான்.
ஒரே சமயத்தில் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்த்து மூன்று வேளை என்பதை ஆறு வேளையாக மாற்றி ஒவ்வொரு முறையும் அரை வயிறு அளவிற்குச் சாப்பிடலாம். இதில் ஒரு முக்கியமாக நன்மை என்னவென்றால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
காலை வேளைகளில் ஓரளவிற்கு வயிறு நிறைவாக உண்ண வேண்டும். ஏனென்றால், இரவு முதல் காலை வரை சுமார் பத்து மணி நேரம் ஏதும் சாப்பிடாமல் இருப்போம். அதனால்தான் காலை உணவை தவிர்க்காமல் நன்றாக சாப்பிட வேண்டும் என்பார்கள். காலை உணவில் பாதி அளவே மதியம் சாப்பிட வேண்டும். இரவு உணவை மிகவும் குறைவாக உண்ண வேண்டும். அதையும் இரவு எட்டு மணிக்கே சாப்பிடப் பழக வேண்டும். சாப்பிட்ட பின்னர் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கழித்தே தூங்கச் செல்ல வேண்டும்.
சிப்ஸ், பக்கோடா, சமோசா முதலான எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆசைப்பட்டால் சிறிது சாப்பிடலாம். நாட்டுக் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கொய்யா, பப்பாளி, வாழைப்பழம் முதலான பழங்களை சாப்பிடலாம். சுண்டல் முதலானவற்றை சாப்பிட்டால் அது பசியைக் கட்டுப்படுத்தும்.
தினந்தோறும் காலை வேளைகளில் கட்டாயம் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சைக்கிளில் ஓட்டுவதில் விருப்பம் இருந்தால் அதைச் செய்யுங்கள். அரை மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டினால் போதும். நல்ல பலன் கிடைக்கும்.
ஐம்பது வயதிற்கு மேல் நிலம், நகை முதலானவற்றின் மீது ஆர்வம் காட்டாதீர்கள். ஏனென்றால், ஆசைக்கு எல்லையே இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது சுற்றுலா செல்லுங்கள். சுற்றுலா உங்கள் மனதைத் திறக்கும் மந்திரச் சாவி என்பதை மறவாதீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். கோபம் நிச்சயம் உங்கள் ஆயுளைக் குறைக்கும். எல்லோரிடமும் அன்பாக இருக்கப் பாருங்கள். தினம் யாராவது ஒரு உறவினரிடம் தொலைபேசியில் உரையாடும் வழக்கத்தைக் கடைபிடியுங்கள். எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள்.
பிறந்து விட்டோம். வாழ்ந்துதான் ஆக வேண்டும். பிறருக்குத் துன்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தவரை உதவி செய்து வாழப் பழகுங்கள்.