‘சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும்’ என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதனால்தான், ‘கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்’ என்ற பழமொழியே ஏற்பட்டது. ஒருவர் வீடு ஒன்றைக் கட்டுவதென்றால் அதற்கு முன்பு பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. வீடு கட்டும் கனவு நிஜமாக அதற்கான முன்னேற்பாடுகள் பல உண்டு. அதைத்தான் இப்போது பார்க்க உள்ளோம்.
1. முதலில் வீடு கட்டுவதற்குத் தேவையான பணத்தை திரட்ட வேண்டும். அதற்கு என்னென்ன வழிகள் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
2. எவ்வளவு பெரிய வீடு கட்டப்போகிறோம் என்று தீர்மானித்து, அதைக் கட்டி முடிக்க எவ்வளவு பணம் அல்லது செலவு பிடிக்கும் என்று வீடு கட்டும் நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
3. வீடு கட்டும் முயற்சியில் முதல் கட்டமாக தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு ஏற்ற வீட்டுமனையை வாங்க வேண்டும். முக்கியமாக குடும்பத்தினருக்கு பிடித்த வகையில்.
4. அடுத்து, வீடு கட்ட கடன் தேவை என்றால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஏனெனில், கடன் கேட்டு வங்கிகளில் மனு செய்தால் கடன் தொகை கையில் கிடைப்பதற்கு சற்று காலம் பிடிக்கும்.
5. கடன் தொகை கிடைப்பதற்குள் அஸ்திவாரம் போட நினைப்பவர்கள், துணையின் பரஸ்பர ஒப்புதலுடன் நகைகளை அடகு வைத்து பணம் திரட்டலாம்.
6. கடன் தொகை கிடைத்தவுடன் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விட வேண்டும். ஏனெனில் வீட்டு வாடகை பணத்தை கொண்டு கடன் தவணைகளை திருப்பிக் கட்ட வேண்டும் என்று சிலர் முடிவு செய்திருப்பார்கள். ஆகவே, காலதாமதமானால் நமக்குத்தான் நஷ்டம்.
7. குறிப்பாக, கடன் வாங்கி வீடு கட்டும்போது நம்மால் திரும்ப அந்தக் கடனை அடைக்க முடியுமா என உறுதி செய்த பின்பே வீட்டை கட்ட இறங்குவது நல்லது.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை:
1. பள்ளி, மருத்துவமனை, போக்குவரத்து, தண்ணீர் வசதி போன்ற அனைத்தும் கொண்ட ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்து வீட்டுமனையை வாங்க வேண்டும்.
2. வீடு கட்டுவதற்கான ஒரு தகுதி வாய்ந்த காண்ட்ராக்டரை அல்லது இன்ஜினியரை தேர்ந்தெடுக்க வேண்டும். சிலர் தாமதப் பணிகளினால் நமக்கு தீராத தலைவலியை தருவதும் உண்டு.
3. வீட்டின் பிளானை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு வீட்டின் உறுப்பினர்களையும் கலந்தாலோசித்தல் மிகவும் அவசியம். பெரியவர்கள் இருந்தால் அவர்களின் வசதிகளை கவனத்தில் கொள்வது அவசியம்.
4. கடன் கேட்டு வங்கியில் மனு அளிப்பவர்கள் கடன் கிடைப்பதற்கு முன்னால் எவ்வளவு பணம் திரட்ட முடியுமோ அதை திரட்டி கையில் வைத்துக் கொண்டு, பிறகு வீடு கட்டும் பணியை துவங்க வேண்டும். துவங்கிய பின் பணிகள் பணமின்றி தடைபடுவது சரியல்ல.
5. வீடு கட்டி முடித்தவுடன் நீங்களே சொந்தமாகவோ அல்லது நம்பிக்கை மிகுந்த நபர் ஒருவரையோ வாடகைக்கு குடி அமர்த்த வேண்டும். குடியமர்த்தும் நபரால் பிரச்னை வராமல் கவனமாக அக்ரிமெண்ட் போட வேண்டும்.
இப்படித் திட்டம் போட்டு செயல்பட்டால் மட்டுமே எந்தப் பிரச்னையும் இன்றி மகிழ்வுடன் ஒரு வீட்டிற்கு சொந்தக்காரராக நம்மை உயர்த்திக்கொண்டு சமூகத்தில் மதிப்புடன் வாழ முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.