குழந்தைகளை சம்மர் கோச்சிங் அனுப்பப் போறீங்களா?

குழந்தைகளை சம்மர் கோச்சிங் அனுப்பப் போறீங்களா?

டான்ஸ், மியூசிக் , கராத்தே, நீச்சல், டென்னிஸ், கையெழுத்து பயிற்சி, ஓவியம் , விளையாட்டு என வழக்கமான பயிற்சிகளை தாண்டி இப்போது சம்மர் கோச்சிங்  வகுப்பு நடத்துபவர்கள் புதிது புதிதாக சிந்திக்கிறார்கள். காசு எண்ணும் பயற்சி, பூஜை செய்ய பயிற்சி, ஸ்லோகம் பயிற்சி, புத்தகம் படிக்கும் பயிற்சி, பறவை பார்க்க பயிற்சி, போட்டோ எடுக்க பயிற்சி, வீட்டில் பொருள்களை அடுக்க பயிற்சி , இசை கேட்க பயிற்சி, சாப்பிட பயிற்சி, களிமண் பொம்மை செய்ய பயிற்சி, குழந்தைகளோடு பழகுவதற்கு பயிற்சி என எது எதையோ சொல்லி தந்து பிள்ளைகளை வல்லுநர் ஆக்கி விட துடிக்கிறார்கள். 

அவர்களை என்ன மாதிரி கோர்ஸில் சேர்ப்பது நல்லது? 

குழந்தையின் சுய விருப்பமும் ஆர்வமும் ரொம்ப முக்கியம். உங்களுக்கு நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். 

தாத்தா பயன்படுத்திய புல்லாங்குழல் போன்ற பொருட்கள் வீட்டுப் பரணில் கிடக்கிறது என்பதற்காக குழந்தையை வதைக்காதீர்கள். ஆபீஸில் பிடிக்காத வேலையை பெரியவர்கள் வேறு வழியின்றி செய்யலாம். ஆனால் பிடிக்காத விஷயத்தை குழந்தை கற்றுக் கொள்ள வற்புறுத்தாதீர். 

வீட்டுக்கருகாமையில் பயிற்சி மையம் இருக்கிறது. குழந்தையைக் கூட்டிச் சென்று விட்டு திரும்ப கூட்டி வருவது ஈசி என்ற காரணத்துக்காக ஏதோ ஒரு பயிற்சியில் சேர்க்காதீர்கள். 

குறிப்பாக கம்ப்யூட்டர் தொடர்பான பயிற்சி வகுப்புகள் தான் புற்றீசல் போல நிறையப் பெருகி உள்ளது. எது உங்கள் குழந்தைக்கு பொருத்தமானது. எந்த நிறுவனத்தில் சரியாக கற்றுத் தருகிறார்கள் என்பதை அலசிப் பார்த்து சேருங்கள். 

நீச்சல் பயிற்சிக்கு அனுப்புகிறவர்கள் கவனமாக இருக்க வேண்டும் . அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்கிறார்களா? ஒவ்வொரு குழந்தையையும் தனியாக கவனிக்கிறார்களா? தண்ணீரை அவ்வப்போது சுத்தம் செய்யும் வசதி அந்த நீச்சல் குளத்தில் இருக்கிறதா ?என்பதை எல்லாம் உறுதி செய்து கொண்ட பிறகு அனுப்ப வேண்டும். 

தொடர்ந்து பயிற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிற கோர்ஸ் முக்கியம். வயலின் பயிற்சிக்கு சேர்க்கிறீர்கள் என்றால் வெறும் ஒன்றரை மாதத்தில் கற்றுக் கொண்டு யாரும் வயலின் மேதை ஆகிவிட முடியாது. தொடர்ச்சியான பயிற்சிகள், வீட்டில் வாசித்துப் பார்ப்பது எல்லாம் முக்கியம். பள்ளி துவங்கிய பின் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி விடுவதால் இந்த இரண்டு மாதங்களில் பயிற்சி பயின்ற விஷயங்களை குழந்தைகள் எளிதில் மறந்து விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அனைத்து பயிற்சிகளையும் தங்களது குழந்தை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதை விட, குழந்தையின் ஆரோக்கியத்தை புரிந்து அதில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் பயிற்சி செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உபயோகமாக இருக்கும். 

மேற்கூறிய விஷயங்களை சரியாக குழந்தைகளால் செய்ய முடியும் என்றால் சேருங்கள். இல்லையேல் விடுமுறையை பிள்ளைகள் ஓய்வாக கழிப்பது பயனுள்ள விஷயம்தான் என்பதை நினைவில் கொண்டு, விடுமுறையில் கிராமத்துக்குப் போகவோ வீட்டருகே விளையாடவோ விட்டு விடுங்கள்.

ஒரு நாளில் 24 மணி நேரம் இருந்தாலும் எல்லா நிறுவனங்களும் ஒரு மனிதனின் வேலை நேரம் 8 மணி நேரம்தான் என்பதை வரையறுக்கின்றன. அதற்கு மேல் ஈர்ப்போடு வேலை பார்ப்பது கடினம். பள்ளி நாட்களில் குழந்தைகள் ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு அதிகமாக பாடங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். பள்ளியில் படிப்பு. அது முடிந்ததும் டியூஷன். பிறகு ஹோம் ஒர்க், ஏதாவது ஸ்பெஷல் கோச்சிங் என பம்பரமாக சுழல்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வு கட்டாயம் தேவை. கோடை விடுமுறையில் ஓய்வு அவசியம் என்பதால் தான் விடுமுறை அறிவிக்கிறார்கள். இந்த ஓய்வுதான் அடுத்த ஆண்டு பிள்ளைகளை இன்னும் வலுவாக படிக்கும் எனர்ஜியை ஊக்குவிக்கும். ஆதலால் குழந்தைகளின் குறிப்பறிந்து கோச்சிங் கிளாசில் சேர்த்து விடுங்கள். குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை என்றால், மற்றவர்கள் சேர்த்து விடுகிறார்கள் என்பதற்காக அவர்களையும் சேர்த்து துன்புறுத்தாதீர்கள். அவர்கள் சுதந்திரமாக விடுமுறையைக் கழிக்க தடையாக இருக்காதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com