இன்றைய இளம் தலைமுறையினரிடையே தற்போது டாட்டூ போடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. முந்தைய காலங்களில் பச்சை குத்திக்கொள்ளுதல் எனும் பெயரில் தங்களுக்குப் பிடித்தவரின் பெயர்கள், சிறு சிறு முத்திரைகள் என பலரும் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருந்தது. ஆனால், தற்போதுள்ள இளைஞர்கள் உடல் முழுவதும் வண்ண வண்ண டாட்டூக்களை குத்தி வருகின்றனர்.
உடலை வருத்தி போடப்பட்டும் இந்த டாட்டூக்களில் அதிகம் கெமிக்கல் கலக்கப்படுகிறது. இதை ஒரு சிலரின் உடல் ஏற்றுகொண்டாலும், பலருக்கும் இது ஒவ்வாமையையே ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி, உடலில் அரிப்பு போன்ற அலர்ஜியையும் உண்டாக்குகிறது. இன்னும் ஒருசிலரின் உயிரையும் அது குடித்துவிடுகிறது. சமீபத்தில் இதுபோன்ற பல செய்திகளைக் கேட்டிருப்போம். அதனால் பொதுவாக, டாட்டூ போடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
‘டாட்டூ போட்டுக்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவசியம் நான் டாட்டூ போடத்தான் போகிறேன்’ என நினைப்பவர்கள், குறைந்தபட்சம் உடலின் எந்த இடத்தில் டாட்டூ போடப்போகிறோம் என்பதை முதலில் கவனமாக முடிவு செய்துகொள்ளுங்கள். உடலின் மென்மையான நரம்புகள், முக்கியமான பகுதிகளுடன் தொடர்புடைய நரம்புகள் உள்ள இடங்களில் டாட்டூ போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக, டாட்டூ போடப் பயன்படுத்தப்படும் ஊசி புதிதாக எடுக்கப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்துங்கள். ஏற்கெனவே ஒருவருக்கு டாட்டூ போட பயன்படுத்திய ஊசியை உங்களுக்கும் பயன்படுத்தும்போது, அதனால் பல நோய்கள் வரக்கூடும். ஆகையால், அதில் கவனம் செலுத்துவது அவசியமாகும். ‘சிறியதாக ஒரு ஸ்டார்தான் வரைந்தேன்’ என்று கூறினாலும், அதற்கு நீங்கள் அனுமதியளிக்கக் கூடாது.