நாம் அவ்வப்போது குடும்பத்தோடு உறவினர்களின் வீடு மற்றும் சுற்றுலா என வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுண்டு. இரண்டு அல்லது மூன்று நாட்கள், ஒரு வாரம், பத்து நாட்கள் என குடும்பத்தோடு வெளியூர்களில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுண்டு. கோடை விடுமுறையில் நம்மில் பெரும்பாலோர் சொந்த ஊர்களுக்கு மாதக்கணக்கில் செல்லுவதும் உண்டு. அப்படிச் செல்லுவதற்கு முன்னால் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகச் செய்து விட்டு ஊருக்குப் புறப்பட்டால் நிம்மதியாக ஊரில் இருந்து விட்டுத் திரும்பலாம்.
நம்மில் பெரும்பாலோருக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டதும் வீட்டை சரியாகப் பூட்டினோமா? இல்லையா என்ற சந்தேகம் எழுவது இயற்கை. பயணம் முழுக்க நமது மனம் இதை நினைத்தபடியே இருக்கும். இந்தக் கவலையைப் போக்க ஒரு எளிய வழி இருக்கிறது. வீட்டைப் பூட்டியதும் அதை உங்கள் மொபைலில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு புறப்படுங்கள். பூட்டினோமா இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டால் மொபைலில் உங்கள் வீட்டின் பூட்டிய கதவின் புகைப்படத்தைப் பார்த்து நிம்மதி அடையலாம்.
பூட்டிய வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்தால் அவர்களுடைய முதல் மற்றும் முக்கியமான டார்கெட் உங்கள் வீட்டு பீரோ. அதில்தான் மொத்த நகைகளும் இருக்கும். அதனால் ஊருக்குப் புறப்படும் முன்னால் பீரோவிலிருந்து நகைகளை எடுத்து இரண்டு அல்லது மூன்று எவர்சில்வர் டப்பாக்களில் போட்டு சமையல் அறை அல்லது புத்தக அலமாரியினுள் வைத்து விட்டுச் செல்லலாம். இதனால் திருடர்களை திருதிருவென முழிக்க வைக்கலாம்.
ஊருக்குச் செல்லும்போது பூட்டிய வீட்டில் எக்காரணத்தை கொண்டும் பணத்தை வைத்து விட்டுச் செல்லாதீர்கள். வங்கியில் செலுத்திவிட்டுச் செல்லுங்கள். வந்து எடுத்துக் கொள்ளலாம்.
பொது இடங்களில் நின்று மொபைல் மூலமாகவோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களிடமோ நீங்கள் குடும்பத்துடன் ஊருக்குச் செல்லவிருக்கும் விஷயத்தைப் பற்றிப் பேசாதீர்கள். நான்காவது நபர் இதைக் கேட்கக் கூடும்.
ஒரு வாரத்திற்கு மேல் வெளியூர் செல்வதாக இருந்தால் ப்ரிட்ஜில் உள்ளவற்றை காலி செய்து ப்ரிட்ஜை திறந்து வைத்து விட்டுச் செல்லுங்கள். தேவையில்லாமல் அத்தனை நாட்கள் ப்ரிட்ஜ் ஓட வேண்டாம். இது பாதுகாப்பானதும் கூட.
சமையில் அறையில் காஸ் சிலிண்டரை மறக்காமல் மூடி விடுங்கள். காஸ் அடுப்பின் நாபுகளும் மூடியுள்ளனவா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சோதித்து உறுதி செய்து கொள்ளுங்கள். இது மிக முக்கியமான பாதுகாப்பு விஷயமாகும்.
வீட்டிற்குள் உள்ள அனைத்து குழாய்களும் சரியாக மூடப்பட்டுள்ளனவா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சோதித்துக் கொள்ளுங்கள். குழாயை மூடாமல் சென்றால் வீட்டிற்குள் தண்ணீர் நிரம்பி பொருட்கள் சேதமாகலாம். தண்ணீரும் வீணாகும்.
வீடு முழுவதும் இருட்டாக இருக்கக் கூடாது. பாத்ரூம் மற்றும் பால்கனியில் சிறிய மின்விளக்குகளை எரிய விட்டுச் செல்லுங்கள். மின்சாரமும் குறைவாக செலவாகும். இரவு நேரங்களில் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு வீட்டிற்குள் ஆட்கள் இருப்பது போலத் தோன்றும்.
வீட்டின் ஒரு சாவியை உங்கள் பகுதியில் வசிக்கும் நெருங்கிய உறவினரிடமோ அல்லது நம்பகமான நண்பர்களிடமோ கொடுத்து விட்டுச் செல்லுங்கள். ஒரு வேளை ஊரில் வீட்டின் சாவியை மறந்து வைத்து விட்டு ஊருக்குத் திரும்பினால் உங்கள் வீட்டிற்குள் நுழைவது சிரமமாகிவிடும். பூட்டைத் திறக்க தேவையில்லாத செலவும் ஆகும்.
தற்போது வைஃபை மூலமாக உங்கள் மொபைலில் இருந்து உங்கள் வீட்டைப் பார்க்கக்கூடிய கண்காணிப்புக் கேமிராக்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. விலையும் நாம் வாங்கக்கூடிய அளவில்தான் இருக்கிறது. இந்த வசதி உள்ள சிசிடிவி கேமிராவை உங்கள் வீட்டின் முன்னும் பின்னும் பொருத்தி விட்டால் உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் அங்கிருந்து உங்கள் வீட்டைத் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம்.