வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கிறீங்களா?

வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கிறீங்களா?

“எனக்குத் தெரிஞ்ச ஒரு வரன் இருக்கு. அமெரிக்காவிலே கைநிறைய சம்பாதிக்கிறான்” என்றபடி ஒருவர் வந்தால், பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஓர் ஆர்வமும் ஏற்படும். அதோடு சேர்த்து நெருடலும் உண்டாகும். கண் காணாத தேசத்துக்கு மகளை அனுப்பப் போகிறோமே என்கிற கவலையும், மகளுக்கு வளமான வாழ்க்கை கிடைத்தால் நல்லதுதானே என்கிற ஆசையும் ஒரு சேர எழும். ஆசைதான் வெற்றி பெறும். வெளிநாட்டு வரனில் மும்முரம் காட்டத் தொடங்குவார்கள்.

இருந்தாலும், நடுநடுவே தாங்கள் படித்த, கேட்ட ‘ஏற்கெனவே திருமணமாகி அதை மறைத்து வேறொரு கல்யாணம் செய்துகொண்ட வெளிநாட்டு மாப்பிள்ளை’ ‘திருமணம் என்ற பெயரில் அழைத்துச் சென்று வேலைக்காரியாக நடத்திய வெளிநாட்டு ஆசாமி’ என்பது போன்ற செய்திகள் அவர்கள் கண்முன் வந்து போகும்.

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மகளைக் கொடுப்பதற்கு முன் பெற்றோர்கள் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை என்ன?

வெளிநாட்டில் இருக்கும் நபர் அங்கு படிப்புக்காக சென்றிருக்கிறாரா? அல்லது வேலைக்குதானா? என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். தவிர எந்த வகை விசாவை வாங்கிக்கொண்டு அவர் வேலைக்குச் சென்றிருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

‘LI விசா வாங்கிக்கொண்டு அமெரிக்கா போயிருக்கிறேன்’ என்று ஒருவர் சொன்னால் அது வேலைக்கான விசா அல்ல. வணிகத்திற்கான விசா. இதே போன்ற சுற்றுலாப் பயணி என்று விசா வாங்கிச் சென்றிருந்தால் விசா காலம் முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான். டூரிஸ்ட் விசா பெற்றுச் சென்றால், எந்த நாடாக இருந்தாலும் அங்கு நிரந்தர வேலை தேடிக் கொள்வது, சட்டத்துக்குப் புறம்பானது.

பல நாடுகளிலும் இந்தியர்கள் ஏதாவதொரு அசோஸியேஷன் அமைத்திருப்பார்கள். தெரிந்தவர்கள் மூலமாகவோ வலைப்பின்னல் மூலமாகவோ, வெளிநாட்டு வரன் ஏற்கெனவே திருமணமானவரா அவரது ஒழுக்கம் எப்படி என்பதை விசாரிக்கலாம்.

வெளிநாட்டு மாப்பிள்ளை எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, இந்தியா விலுள்ள அவரது நிறுவனக் கிளையிலோ அல்லது நிறுவன தலைமையகத்திலோ அவரைப் பற்றி விசாரிக்கலாம்.

Linked-in போன்ற ப்ரொஃபஷனல் வலைத் தொடர்புகளில் வருங்கால மாப்பிள்ளையும் நீங்கள் உறுப்பினர்கள் என்றால் அவரைப் பற்றிய தற்போதைய பணி மற்றும் அவர் இதற்கு முன்பாக பணியாற்றிய நிறுவனங்கள் போன்ற விவரங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

இப்போதெல்லாம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனும் மணமகளும் ‘சாட்டிங்’ செய்து கொள்கிறார்கள். இதிலும் ஏதாவது முக்கிய தகவல்கள் வெளிப்படலாம்.

இந்தியாவிலுள்ள, பிள்ளையின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களை நேரில் சென்று பார்த்து பேசி கணியுங்கள்.

வெளிநாட்டில் மிக அதிகம் சம்பாதிப்பதுதான் ஒருவரனைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் என்றால், அவர் நேரடியாக வெளிநாட்டில் வேலைக்குச் சேர்ந்தாரா, அல்லது ‘ஆன்சைட்டில்’ இருக்கிறாரா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவிலுள்ள ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்துக்கு (பெரும்பாலும் இரண்டு வருடம்) வெளிநாட்டு புராஜெட்களுக்காக ஊழியர்களை அனுப்புவதை ‘ஆன்லைட்’ என்கிறார்கள். அப்படி இருந்தால் இந்தியா திரும்பும்போது அவரது சம்பளம் குறைவாக இருக்கும். அதாவது அவரது இப்போதைய வெளிநாட்டு ஊதியம் என்பது நிரந்தரமானது அல்ல.

திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மகளுக்கு இருந்தால், வரன் வசிக்கும் வெளிநாட்டில் அவளுக்காக வேலை வாய்ப்புகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை முதலில் விசாரிக்கவும்.

வெளிநாட்டில் கணவனுடன் வசிக்கச் சென்றாலும் அங்குள்ள இந்தியத் தூதரகம் எங்கே இருக்கிறது என்ற விவரம் அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் மகள் மட்டுமே கூட இயக்க முடியும் என்கிற வகையில் அங்கு அவளுக்கு வங்கிக் கணக்கு இருப்பது நல்லது.

மற்றபடி சிலர் பயப்படுவதுபோல “இந்தியாவில் கல்யாணம் செய்துகொண்டு வெளிநாட்டில் விவாகரத்து செய்துகொண்டால்?’ என்பது தேவையில்லாத பயம். அதுபோன்ற விவாகரத்து நடந்தால், அது இங்கு செல்லாது.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து எல்லா நாடுகளும் நெருங்கிவிட்டன என்பது உண்மைதான் என்றாலும்கூட வெளிநாடு ‘வெளி’ நாடுதான். எனவே, உரிய எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்வது நல்லது மட்டுமல்ல, அவசியமும்கூட.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com