நீங்கள் சுவரா? பாலமா?

Are you wall? or bridge?
Are you wall? or bridge?https://archives1.thinakaran.lk

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சுவர்களையே அதிகமாகப் பார்க்கிறோம். எனவே, அவ்வப்போது பறக்கும் பாலங்கள், தொங்கும் பாலம் என்று பல பாலங்களைப் பார்க்கும்போது வியப்பு ஏற்படுகிறது. சுவர்களைக் கட்டுவது பாலத்தைக் கட்டுவதை விட சுலபமானது. தான் என்ற இறுமாப்புடன் உள்ளது சுவர். சுவரின் பணி பிரிப்பது. சுவர்களுக்குள்ளே முடங்கிப்போகும் வாழ்க்கை முடமான வாழ்க்கையாகும். சுவர்கள் மனித வளர்ச்சியின், முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்.

சுவர்களுக்கு மாற்றாக நாம் கட்டவேண்டியது பாலங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன் மீது ஏறி பயணம் செய்ய பாதை தருவது பாலம். இடிந்து போகும்போது மேலே விழுவது சுவர். ஆனால், இடிந்தாலும் தன் மீது இருப்போர் மேல் விழாமல், அப்போதும் அவர்ளைத் தாங்குவது பாலம். பாலம், ஒரு இடத்தை மற்றொரு இடத்துடன் சேர்க்கும், இணைக்கும், பிணைக்கும். பாலத்திற்கு பிரிக்கவே, பிளக்கவோ தெரியாது.

பாலங்கள் உலகில் மிகவும் குறைவு. ஆனால், சுவர்களோ அதிகம். உலகில் இன்றைய சூழலில் இணைக்கும் சக்திகளை விட, பிரிக்கும் சக்திகளே பெருகி வருகின்றன. ஒரே வீட்டில் வாழ்பவர்கள் கூட தனித் தீவுகளைப் போல் வாழ்கிறார்கள். பணம், பதவி, செல்வாக்கு போன்றவற்றை வைத்தும், அலைபேசி, கணினி, இணையம், முகநூல் என்று பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமும் நம்மைச் சுற்றி வலுவான சுற்றுச் சுவர்களைக் கட்டி வருகிறோம். சுவர்களுக்குள்ளே ஆபத்து நிகழ்ந்தால் உதவிக்குக் கூட எவராலும் வர முடியாது. பாதுகாப்பு வளையம் என்று நினைத்து மலர் வளையத்தை நமக்கு நாமே வைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்றைய உலகம் உறவை ஒதுக்கி, பிளவைப் போற்றுகிறது. இவை எல்லாம் மூளை வீங்கி, இதயம் சுருங்கிப்போனதால் ஏற்பட்ட விளைவுகள். வீட்டுக்கு முன்பு வெறும் புள்ளிகள் வைத்தால் மட்டும் போதாது. அழகான கோலத்திற்கு கோடுகள் வளைந்து நெளிந்து இருக்க வேண்டும். அதேபோல், புள்ளிகளாய் சிதறிக் கிடக்கும் நம்மிடம் முழுமையோ நிறைவோ வராது. வளையும் நெளியும் கோடுகள் பிறரைத் தொட்டு உரசிச் செல்லும்போதுதான் அதில் அருமையான ரசனைக்குரிய கோலம் உண்டாகும். இன்றைய உலகில் உறவுப் பாலங்களைக் கட்ட அன்பு எனும் சுத்தியல் கொண்டு சுவர்களை உடைத்தெறிந்து பாசத்தினால் பாலங்களைக் கட்டுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com