உங்கள் பிள்ளைகள் கல்லூரி விடுதியில் தங்குபவர்களா?

உங்கள் பிள்ளைகள் கல்லூரி விடுதியில் தங்குபவர்களா?
Published on

விடுதிகளில் தங்கிப் படிக்க வேண்டிய குழந்தைகள் நிலை? இந்த நிலையில் உள்ள பெற்றோர்தான் மேலும் கவனமுடன் இருக்க வேண்டும். பெரியவர்களின் (வீட்டுப் பெரியவர்கள்) நேரடிப் பார்வையில் மகனோ, மகளோ இல்லாதபோது என்ன நடக்கும்? எதுவும் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. வளர்ப்பு சரியானதாய் இருந்தால்.

விடுதி வாழ்வு மாணவர்களுக்குப் பல சுதந்திரங்களையும் அளித்த அதே நேரம் பல கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது.  பெற்றோரிடம் மிகவும் பாசம் வைத்து, வீட்டுப் பறவைகளாய் வாழ்ந்த குழந்தைகள் விடுதியை நரகமாய் நினைக்கிறார்கள். (They feel home sick) இது தற்காலிகப் பிரிவு.  அவர்களால் ஜீரணிக்கப்படக் கூடியதாய் இல்லை. அதனால் உணவு சரியில்லை, அது தவறு, இது தவறு என்று ஏதோ காரணம் கூறி, திரும்பி விட முயற்சி செய்கின்றனர். எந்த உணர்ச்சியையும் அளவாகப் பிரயோகம் செய்யக்கற்றுத் தாருங்கள். ஒரு நல்ல காரணத்திற்காக விடுதியில் இருக்கிறோம். நம் இடத்தில் இந்த வசதி இல்லாததால் நம் எதிர்கால வாழ்வு வெளிச்சமாய் இருக்க வேண்டி இதைச் செய்கிறோம் என்று மனத்தில் மறுபடி மறுபடி சொல்லச் சொல்லுங்கள். சிறு தியானம், ஒழுங்கான வாழ்க்கை முறைகள், நல்ல தோழர்கள் அருகாமை இவற்றால் பெற்றோரைப் பிரிந்து வந்த வருத்தம் மறைந்து போகும். சீரான வாழ்விற்கு விடுதியில் இருப்பது உதவிதான் செய்யும். அநேகமாக ஆண்கள் இந்த உணர்வுத் தடுமாற்றங்களுக்கு (emotional disturbance) ஆளாவதில்லை. பெண்கள் இப்போதே இதைச் சரி செய்து கொள்வது, வரப்போகும் மணவாழ்விற்கும் ஒரு முன்னோடிபோல் அமைகிறது. பெண்களும் ஒரு நேரம் மணமாகி, கணவனுடன் செல்ல வேண்டியவர்கள் அல்லவா?

இதற்கு நேர்மாறாக, மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பச் சூழலில் இருந்து விடுதிக்கு வருவோர், விடுதி, தரும் சுதந்திரங்களை  பயன்படுத்திக் கொள்கிறார். ஒத்த எண்ணம் கொண்ட சக மாணவர்களுடன் ஒரு குழு அமைத்துக் கொள்கிறார்கள். இத் தோழர் குழாம் சரியாக அமையவில்லை எனில், சிகரெட், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் அபாயம் நிறைய உண்டு. ஆண்களுக்குப் பெண்களைவிட பய உணர்ச்சியும் குறைவு என்பதால், அதிகமாகப் பாதிக்கப்படுவதும் அவர்களே.

உங்கள் கல்லூரி செல்லும் மகன் / மகளின் தோழர்களை அறிமுகம் செய்துகொள்வது மிகவும் நல்லது. என்றேனும் ஒருநாள் அவர்களை உங்கள் வீட்டில் கூடச் செய்து ஒரு சிறு விருந்து தரலாம். அவர்களுடன் ஒரு நண்பர் போலப் பழகுங்கள். இது உங்கள் மகனை மிகவும் மகிழ்ச்சிப் படுத்தும். மேலும் நமக்குள்ள அனுபவத்தால் நாம் நல்ல நண்பர்களை இனம் பிரித்தறிவோம் என்பது அவனுக்குத் தெரியுமாதலால், தன் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பான்.

இவை அனைத்தையும் மனத்தில் இருத்தி, குழந்தை களைக் கல்லூரி வாழ்க்கைக்குத் தயார் படுத்துங்கள். பெற்றோர் தராத ஒன்றை வேறு யாரோ குழந்தைக்குத் தருவது எங்ஙனம் சாத்தியம்? குழந்தைகள் சரியான பாதையில் செல்ல உதவ வேண்டியது நம் கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com