நம் வீட்டை பாதுகாக்கும் அதிர்ஷ்ட தேவதைகள், வாஸ்து தேவதைகள், மகாலட்சுமி ஆகியோர் தலைவாசல் கதவில் குடியிருப்பதாக ஐதீகம். வீட்டின் நிலைப்படி என்பது மரத்தால் ஆனது. அதை தங்கம், வெள்ளி போன்ற நவரத்தினங்களை வைத்து, மகாலட்சுமி அங்கே வீட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்று நிலைப்படியை பொருத்துவார்கள். தினமும் அந்த இடத்தை துடைத்து கோலமிட்டு அழகாக வைத்துக் கொள்ள வேண்டும். நிலைப்படியில் உட்காரவோ, அங்கு நின்று கொண்டு பணம் கொடுப்பதோ, பொருள் கொடுப்பதோ, சாப்பிடுவதோ கூடாது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு வீட்டின் பிரதான கதவு குடும்பத்திற்கான நுழைவுப் பாதை மட்டுமல்ல, சக்தியின் நுழைவுப் பாதையும் கூட. மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் வீட்டிற்குள் கொண்டு வரும் நேர்மறையான ஆற்றலின் ஓட்டத்தை அனுமதிக்கும் இடம் அது. பிரதான நுழைவாயில் நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கும். எனவே, அங்கு காலணிகளையும், உடைந்த நாற்காலிகள், குப்பைத் தொட்டிகள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் முன் வாசல் அருகே துளசிச் செடியை வைப்பது மிகவும் நல்லது. நம் வீட்டு தலைவாசல் வழியாகத்தான் மகாலட்சுமி தாயார் வீட்டிற்குள் வருவதாக ஐதீகம். எனவே, அந்தப் பிரதான வாசலில் நின்று தலை வாருவதோ, தலைவாசல் படியில் தலை வைத்துப் படுப்பதோ கூடாது என்று சொல்லப்படுகிறது. தலைவாசல் படியின் அருகில் அமர்ந்து இப்படிச் சில விஷயங்களை செய்வதால் நம் வீட்டின் செல்வம் குறைந்து வறுமை ஏற்படும்.
நாம் வசிக்கும் வீட்டிற்கு தலைவாசல் மிகவும் முக்கியமாகும். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்கவும், காலில் உள்ள தூசிகளை துடைத்து விட்டு வரவும் மிதியடிகளை வாசல் படிக்கு அருகில் போட்டிருப்போம். அந்த மிதியடி சிவப்பு நிறமாக இருந்தால் பாஸிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் விஐபிக்களை வரவேற்க ரெட் கார்பெட் விரித்து வரவேற்கும் பழக்கம் உருவானது.
வாசற்படியில் உட்காரக் கூடாது என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். இதற்குக் காரணம் தலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம். ஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்ட லட்சுமி வாசம் செய்வது போல் தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் வீட்டு பெரியவர்கள் ‘கதவை சத்தம் போட்டு அறைந்து சாத்தாதே’ என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல, குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டி சத்தப்படுத்தும்பொழுது, ‘அப்படி செய்யாதே’ என்று கண்டிப்பதற்கும் காரணம் இதுதான். வீட்டு நிலைவாசல் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவதும் தெய்வங்களை போற்றுவதற்குதான்.
முன்பெல்லாம் வீட்டின் வாசல் கதவுகள் உயரம் குறைவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். காரணம் வீட்டின் தலைவாசலின் இரு புறங்களிலும் தேவதைகள் குடி கொண்டிருப்பதாகவும் அதனால் வீட்டிற்குள் நுழையும் பொழுது தேவதைகளை வணங்கி குனிந்து செல்வதற்காகத்தான் உயரம் குறைவாக கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயில்களில் வாசல் படியை மிதிக்காமல் தாண்டித்தான் உள்ளே செல்வோம். அதுபோல்தான் வீட்டின் நிலைப்படியில் கால் வைக்காமல் அதைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். நிலைப்படியின் இரு புறங்களிலும் விளக்கேற்றி வைப்பதும் இதனால்தான்.
வீட்டில் செல்வம் கொழிக்க தங்கக் காசுகளை பொழியும் மகாலட்சுமி புகைப்படத்தை வீட்டு வாசலில் வீட்டிற்குள் பார்ப்பது போல் மாட்டி வைப்பது நல்லது. அதிர்ஷ்டத்தை தேடித் தரும் ஸ்வஸ்திக் அடையாளத்தை வீட்டின் நிலை வாசலின் மேல்புறம் வைக்கலாம். மாவிலைத் தோரணங்களை விசேஷ நாட்கள் மட்டுமின்றி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கூட தோரணமாகக் கட்டித் தொங்க விடலாம். இவை அனைத்தும் வீட்டுக்கு நல்ல நேர்மறையான சக்திகளை கொண்டு வருவதுடன், குடும்பத்தை சுபிட்சமாக வைத்துக்கொள்ள உதவும்.