அட்சய திருதியை... அள்ளுனாங்க தங்கத்தை!

அட்சய திருதியை... அள்ளுனாங்க தங்கத்தை!

ட்சய திருதியை என்கிற வார்த்தை நம் மக்கள் இடையே தங்க நகை வாங்கிக் குவிக்கும் பேரார்வம் (பேராசை என்று சொன்னால், பெண்கள் நம்மை அடிக்க வந்து விடுவார்கள்) எப்போது வந்தது? குறைந்தது சமீபத்திய இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளாகத் தான் அட்சய திருதியை என்கிற வார்த்தையே மிகவும் பிரபலமானது. சரி. அதற்கு முன்பெல்லாம் அட்சய திருதியை வந்ததே இல்லையா? வந்தது. அப்போதெல்லாம் என்ன செய்தார்கள் நம் மக்கள்?

கிராமங்களில் அட்சய திருதியை அன்று ஒரு படி நிறைய நெல் வாங்கி வந்து வீட்டில் சாமி மாடம் அருகே வைப்பார்கள். நகரங்களில் ஒரு படி நிறைய உப்பு வாங்கி வந்து வைப்பார்கள். சில வீடுகளில் ஒரு படி நிறைய பருப்பு வாங்கி வந்து வைப்பார்கள். அட்சய திருதியை அன்று நாம் எந்தப் பொருள் வாங்குகிறோமோ அந்தப் பொருள் பல்கிப் பெருகும். வீட்டில் மங்கலம் நிறையும் என்பது நம்பிக்கை.  

இத்தனைக்கும் இந்தத் திருதியை திதி என்பது ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வந்து போகும் திதியாகும். சரி. இந்த அட்சய திருதியை அதில் எப்போது வருகிறது? சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளில் வருகின்ற திருதியை திதி தான் அட்சய திருதியை ஆகும். இதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?

முதல் யுகமான கிருத யுகத்தில் இந்த உலகத்தினை பிரம்மன், இந்த அட்சய திருதியை திதி நாளில் தான் தோற்றுவிக்கிறார். அதாவது இந்த உலகத்தினைப் படைக்கிறார். இப்போது சொல்லுங்கள். இந்த அட்சய திருதியை முக்கியமானதா இல்லையா? அது மட்டுமல்ல. இந்த அட்சய திருதியை நாளுக்கு இன்னும் பல்வேறு சிறப்புகள் நிறையவே உள்ளன.

வனவாச காலத்தில் பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் கிடைக்கப் பெற்றது இந்த அட்சய திருதியை நாளில் தான். குபேரர் நிதி கலசங்கள் பெற்றுக் கொண்டதும் இந்த நாளில் தான். அவ்வளவு ஏன்? ஐஸ்வர்ய லெட்சுமியும் தான்ய லெட்சுமியும் அவதரித்தது இந்த நன்னாளில் தான். இவைகள் போதாதா? ஐஸ்வர்ய லெட்சுமி அவதரித்த நாள் அன்றைக்குப் பொன்னும் பொருளும் நம் வீட்டுப் பெண்கள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் இல்லையே.

2௦23ஆம் ஆண்டு அட்சய திருதியை வந்து ஏப்ரல் 22 சனிக்கிழமை காலை 9.18   மணி முதல் மறுநாள்  ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை காலை  9.27   மணி வரை. அதனால் இந்த ஆண்டு சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் நம்முடைய நகைக் கடைகளில் அட்சய திருதியைக் கொண்டாடப்பட்டது. இதில் மிகப் பெரிய நகைக் கடைகளில் முன் பதிவு வேறு செய்து கொண்டார்கள். தவிர்க்கவே இயலாமல் தங்கத்தின் மீது நம் மக்களுக்கு அத்தனை மோகம். ஒரு கிராம் தங்கம் முதல் பவுன் கணக்கில் தங்க நகைகள் வாங்கியவர்கள் நிறைய. அவர்களது கணிசமான பார்வை அப்படியே வெள்ளி நகைகள் மீதும் படர்ந்தது.

இருபத்தி நான்கு கேரட் பியூர் கோல்டு ஒரு கிராம் ஆறாயிரம் ரூபாய்க்கும், இருபத்திரெண்டு கேரட் ஸ்டான்டார்ட் கோல்டு ஒரு கிராம் ஐந்தாயிரத்து அறுநூறு ரூபாய்க்கும் விலை மதிப்பாகின. சென்னையில் மட்டும் சிறிய நகைக் கடை, பெரிய நகைக் கடை என ஐந்தாயிரம் நகைக் கடைகள் உள்ளன. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதுமாக சிறிய மற்றும் பெரிய அளவிலான நகைக் கடைகள் சுமார் நாற்பத்தைந்தாயிரம் கடைகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவைகளில் கடந்த 2௦22ஆம் ஆண்டில் அட்சய திருதியை நாளில் மட்டும் சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. இந்த ஆண்டு 2௦23 அட்சய திருதியை வியாபாரமாக சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் விற்பனை ஆகியுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அட்சய திருதியை நாளில் அள்ளினார்கள் தங்க நகைகளை நம் தமிழ்க் குடும்பத்தினர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com