அயல்நாடு செல்வோர் கவனத்திற்கு...

அயல்நாடு செல்வோர் கவனத்திற்கு...

டல் கடந்து அயல்நாடு செல்வோர், நடுவிலே சில விமான நிலையங்களில் இறங்கி மற்றொரு விமானத்தில் ஏறிச் செல்ல வேண்டியிருக்கும். வயதானவர்கள் தங்கள் மகன் அல்லது மகள் இல்லத்திற்குச் செல்லும்போது அவர்கள் கொண்டு செல்கின்ற உடைமைகளும் அதிகமாக இருக்கும். ஆகையால், அவர்கள் இந்தியாவில் எந்த விமான நிலையத்திலிருந்து கிளம்புகிறார்களோ அந்த விமான நிலையத்திலேயே தாங்கள் செல்லுகின்ற இடத்திற்கு உடைமைகளைப் பதிவு செய்வதுடன், நடு வழியில் விமானம் மாறும்போது அதற்குத் தேவையான பயணச் சீட்டையும் புறப்படும் இடத்திலிருந்தே பெற்றுக் கொள்ள விழைகிறார்கள். இது அவர்கள் பயணத்தை எளிதாக்குகிறது.

இதை மனதில் கொண்டு நானும் என் துணைவியாரும் கனடாவின் டொராண்டோ நகருக்குச் செல்வதற்கு “கத்தார் ஏர்வேஸ்” மூலமாகப் பயணச்சீட்டு எடுத்துக் கொண்டோம். ஒரே மின்னணு பயணச்சீட்டில் சென்னை-தோஹா-கேட்விக் (லண்டன்)-டொராண்டோ என்று இருந்தது எங்கள் பயணச்சீட்டில். “கத்தார் ஏர்வேஸ்” இந்தியாவின் “இண்டிகோ ஏர்லைன்ஸ்” மற்றும் கனடாவின் “வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ்” ஆகியோருடன் “கோட் ஷேர்” என்ற வியாபாரத் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே எங்களது பயணம் சென்னை-தோஹா “இண்டிகோ ஏர்லைன்ஸ்”, தோஹா-கேட்விக் “கதார் ஏர்வேஸ்” கேட்விக்-டொராண்டோ “வெஸ்ட் ஜெட்” என்று பயணச்சீட்டு கொடுத்தார்கள்.

பயணச் சீட்டு வழங்கும்போது, சென்னையில் எங்களது உடைமை டொராண்டோவிற்கு பதிவு செய்யப்படும் என்றும், தோஹா, கேட்விக் விமான நிலையங்களில் வேறு விமானத்தில் ஏறுவதற்கான சீட்டு சென்னையிலே வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்கள். லண்டன் விமான நிலையத்தில் இறங்குவதற்கு யு.கே.விசா தேவையில்லை என்றும் கூறினார்கள்.

சென்னை விமானநிலையத்தில் நுழையும் போது வலதுகாலை முன்வைத்து நுழையவில்லையோ என்னவோ எங்கள் பிரச்சனை தொடங்கியது. எங்களுக்கு பயணச்சீட்டு கேட்விக் வரை மற்றுமே கொடுக்கப்பட்டது. உடைமைகளும் கேட்விக் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டது. கேட்டால் எங்களுக்கு “வெஸ்ட் ஜெட்” நிறுவனத்திடம் வியாபாரத் தொடர்பில்லை என்றார்கள். பலத்த வாக்கு வாதங்களுக்குப் பிறகு, “நாங்கள் கதார் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பேசி விட்டோம். தோஹாவில் அவர்கள் உங்கள் பிரச்சனை சரிசெய்து விடுவார்கள்” என்றார்கள். இது பொய்யான வாக்குறுதி என்பது பின்புதான் தெரிந்தது.

தோஹாவிலும் இதே நிலை. “இது சென்னையில் இண்டிகோ செய்த தவறு. நாங்கள் மேலதிகாரிகளிடம் சொல்லி விட்டோம். டொராண்டோவிற்கான பயணச்சீட்டு கேட்விக் நிலையத்தில் கொடுக்கப்படும். உங்கள் உடைமைகள் டொராண்டோ சென்று விடும். கவலைப்பட வேண்டாம்.” மறுபடியும் பொய் வாக்குறுதி.

கேட்விக் விமானநிலையத்தில் “கதார் ஏர்வேஸ்” சேர்ந்த ஒருவரும் எங்களைச் சந்திக்கவில்லை. விமான நிலையத்தில் குடியேற்றத்தில் இருந்த அதிகாரிகளைக் கேட்ட போது “நீங்கள் குடியேற்றம் முடித்து, உடைமைகளை எடுத்துக் கொண்டு, சுங்க சோதனை முடித்து, வெளியே சென்று புதிய விமான நுழைவுச் சீட்டு பெற்று உடைமைகளை டொராண்டோவிற்குப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு உங்களுக்கு யு.கே.விசா தேவை. அது இல்லாததால் உங்களை அனுமதிக்க முடியாது” என்றார்கள். எங்களைப் போலவே மேலும் மூன்று இந்தியக் குடும்பங்கள்.

எங்களின் நிலை கண்டு பரிதாபப்பட்ட அதிகாரி, அவரின் மேலதிகாரியைக் கூட்டி வந்தார். எங்களின் கதையைக் கேட்ட அவர் எங்களுக்கு ஒரு நாள் விசா கொடுத்தார். எங்கள் உடைமைகள் சாமான்கள் இறக்கப்படும் இடத்தில், திருவிழா கூட்டத்தில் பெற்றோரைப் பிரிந்த குழந்தை போல அனாதையாக இருந்தது. நாங்கள் சென்ற சிறிய வண்டியில் உடைமைகளை ஏற்ற முடியாததால் பெரிய தள்ளு வண்டியெடுத்து “ஐலஸா” பாடியபடி தள்ளிச் செல்லும் பொறுப்பு என் தலையில். எழுபதைத் தாண்டிய எனக்கு இது தேவையா என்று விதியை நொந்த வண்ணம் பயணச் சீட்டு பெறும் இடம் வரை தள்ளிச் சென்றேன். ஒரு வழியாக உடைமைகளை டொராண்டோவிற்கு பதிவு செய்து, விமானம் ஏற பயணச் சீட்டும் பெற்றுக் கொண்ட பின்பு தான் மனம் நிம்மதி அடைந்தது.

நிறைய பயணிகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் மற்ற விமான நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொள்ளும் நிறுவனங்கள், அதற் கேற்றவாறு கட்டமைப்புக்களை மேம்படுத்துவதோ, பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வதோ இல்லை. ஆனால், பொறுப்பை தட்டிக் கழிக்க மற்றவர்கள் மேல் பழியைப் போடுவதும், அரசியல்வாதிகள் போல பொய் வாக்குறுதி தருவதும் செய்து நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறார்கள்.

நாங்கள் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதிலில்லை.

நீங்கள் வெளிநாடு செல்லும் போது, பல விமான நிறுவனங்கள் மூலம் பயணம் செய்வதாக இருந்தால், நீங்கள் பயணம் ஆரம்பிக்கும் விமான நிலையத்திலேயே, எல்லா பயணச் சீட்டுகளும் தரப்படுமா, உங்களது உடைமைகள் நீங்கள் கடைசியில் சேரும் இடத்திற்கு பதிவு செய்யப்படுமா என்பதை நன்கு விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அப்படி நடக்காது என்று சிறிய சந்தேகம் வந்தாலும், அந்த விமானப் பயணத்தைத் தவிர்த்து, வேறு நிறுவனம் மூலம் செல்ல முயற்சி செய்யவும்.

நாங்கள் பெற்ற துன்பம், பெறவேண்டாம் மற்றவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com