எங்கோ காட்டிலோ மேட்டிலே, நதிக்கரையிலோ பிறந்தேன் வளர்ந்தேன், என் இனத்தாருடன் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தேன். இயற்கையை அனுபவித்தபடி இன்பமாக பாடிக் கொண்டிருந்தேன்.
இந்த மனிதர்கள் விடுவார்களா? சரக் சரக் என்று கத்தரித்து ஒன்றாக வைத்து இறுக்கி கட்டி ‘விளக்கமாறு’ என்று பெயர் சூட்டி, ப்ளாஸ்டிக் பேப்பரில் என்ன வெல்லமோ எழுதி அதில் என்னைச் சுற்றி கடையில் காசுக்கு விற்றுவிட்டார்கள்.
கடையில் எங்கள் இனத்தாருடன் ஒரு மூலையில் தகரடப்பாவில் நின்று கொண்டு போவோர் வருவோரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் என வண்டிகள் விரைந்தோடிக் கொண்டிருந்தன. வெயில் அதிகமான தால் கடையில் கூட்டம் அதிகமில்லை. தெருவை வேடிக்கை பார்த்துச் சலித்துவிட்டதால், கனவு காண ஆரம்பித்துவிட்டேன். விளக்குமாறுக்கென்று கனவுகள் இருக்கக் கூடாதா என்ன?
திடீரென்று விழித்துப் பார்த்தால், மாலையில் ஓர் அம்மா என்னை விலைக்கு வாங்கி கார் டிக்கியில் படுக்க வைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்றார் (கார் சவாரி கிடைத்ததில் குஷியோ குஷி!)
வீட்டிற்கு வந்ததும் சிட் அவுட்டில் காலி சிலிண்டர் தட்டு முட்டு சமான்கள் வைக்கும் இடத்தில் ஒரு மூலையில் என்னை நிறுத்தி வைத்து விட்டாள். (என் வாழ்க்கையே மூலையில் தானா?)
காலையில் எழுந்தவுடன் நான் தானே வேண்டும் வீடு வாசல் சுத்தம் செய்ய விசேஷ நாட்களிலும். (பிறகு மூலை வாசம்)
அதோடு அல்லாமல் என்னை கொலைகாரி ஆக்கிவிட்டாள் கரப்பான் பூச்சி, பல்லி, பூரான், எலிகளை அடித்துக் கொல்ல என்னை பயன்படுத்தியபின், என் தலையில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூலையில் வைத்தாள். இப்படியே நாளொரு ரூமும் பொழுதொரு வாசலுமாக உழைத்து தேய்ந்து கட்டையாகி விட்டேன். ஒரு நாள் என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டாள்.
வரும் போது கார், போகும் போது குப்பைத் தொட்டி அந்தோ பரிதாபம்; இதுவே என் கண்ணீர் கதை. ஆனாலும் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்த நிறைவு எனக்கும் உண்டு. என் சுயத்தை இழந்து சுற்றத்தை சுத்தமாக்கி இருக்கிறேன் அல்லவா?
இதோ... எங்களுக்குரிய சாஸ்திரம்:-
*வீட்டில் நுழையும் போது கண்ணில் படும்படி எங்களை வைக்கக்கூடாது.
*இரண்டு விளக்குமாறு சேர்த்து வைக்கக்கூடாது.
*விளக்குமாறை தலை கீழாக வைக்கக்கூடாது.
*வெள்ளி, செவ்வாய் மற்றும் விளக்கேற்றும் நேரத்தில் வாங்கி வரக் கூடாது.
*விளக்குமாறை மற்றவர் கையில் கொடுக்கக் கூடாது.
*விளக்குமாறை காசு கொடுக்காமல் இனாமாகப் பெறக் கூடாது.
*பெண்கள் பிறந்த வீட்டிலிருந்து விளக்குமாறு எடுத்துச் செல்லக் கூடாது.
*விளக்குமாறை காலால் தள்ளவோ, மிதிக்கமோ கூடாது.
*‘விளக்குமாறே’ என்றும் யாரையும் திட்டக் கூடாது.
*திருமணத்திற்கு பந்தக்கால் நட்ட பிறகு மணப்பெண் விளக்குமாறு தொடக்கூடாது.