
இன்றைய வாழ்க்கை முறையில் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. பொதுவாக பூனைகள், நாய்கள், கிளிகள் போன்றவற்றை வளர்ப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், தற்போதைய சூழலில் பல விதமான வித்தியாசமான விலங்குகளையும் செல்லப்பிராணிகளாக வளர்க்க முன் வருகின்றனர்.
அந்த வகையில், பார்ப்பதற்கே அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு விதமான செல்லப்பிராணியை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக 'பால் பைதான்' (Ball Python) என்று அழைக்கப்படும் பந்து மலைப்பாம்பு, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறிய வகை மலைப்பாம்பு ஆகும். இவை பயப்படும் போது தங்களை பந்து வடிவமாக சுருட்டி கொள்வதால், ‘பந்து மலைபாம்பு’ என அழைக்கப்படுகின்றன.
தோற்றம் மற்றும் பாதுகாப்பு
இவை அமைதியான தோற்றம் மற்றும் பராமரிக்க எளிதான இயல்பைக் கொண்டவை. மனிதர்களிடம் சுலபமாக பழகும் தன்மை உடையதால் உலகளவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த வகை பாம்புகளை மிகவும் ஆர்வமாக வளர்த்து வருகின்றனர். முதன்முறையாக பாம்புகளை செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புபவர்களுக்கு இவை ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன.
பந்து மலைபாம்புகள் பலவகையான நிறங்களில் தோன்றுவதால் விற்பனையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
பராமரிப்பு
இவற்றை பராமரிக்க அதிக சிரமம் தேவைப்படுவதில்லை. சரியான வெப்பநிலையில் ஒரு சிறிய இடத்தில் வைத்து வளர்க்கலாம். வாரத்தில் ஒரு முறை மட்டுமே சிறிய இரைகளை உணவாக வழங்கினால் போதுமானது. எந்தவித சத்தமும் எழுப்பாத இயல்பை கொண்டுள்ளதால் வீட்டில் அமைதியை விரும்பும் நபர்களுக்கு இது சிறந்த செல்லப்பிராணி ஆகும்.
அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் இயற்கை பற்றிய புரிதலை எளிமையாக வளர்க்க இந்த வகை பாம்புகளை வளர்ப்பது ஒரு பயனுள்ள முயற்சியாகக் கருதப்படுகிறது.
ஆகவே, இது போன்ற பந்து மலைப்பாம்புகளை நீங்களும் செல்லப் பிராணியாக வளர்க்க விரும்பினால், முதலில் உங்கள் பகுதியில் உள்ள சட்ட விதிகள் மற்றும் உரிமங்களை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.