
நம்முடைய வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் மாற்றுவதற்கு நாம் பல முயற்சிகள் செய்திருப்போம். அதில் ஒன்று தான் டீ.வி யுனிட்டை அமைப்பது. வீட்டிற்கு வருபவர்களின் கண்களில் முதலில் படக்கூடியது இதுவேயாகும். சுவரில் பொருத்தப்படும் டீ.வி யுனிட்டை விதவிதமாக அமைப்பதன் மூலமாக வீட்டின் தோற்றத்தை சிறப்பாக மாற்ற முடியும். இதில் எளிமையான சேமிப்பு அலமாரிகள் கொண்ட மாடல்கள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் எப்படிப்பட்ட டீ.வி யுனிட் வாங்குவது சிறந்தது என்பதைப் பற்றி காண்போம்.
முதலில் நமக்கு எதுப்போன்ற டீ.வி யுனிட் தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் டீ.வியை வைப்பதற்காக மட்டுமா அல்லது கம்பிகளை மறைப்பதற்காகவா? அலமாரிகள் கொண்ட சேமிப்பு இடங்கள் கொண்ட டீ.வி யுனிட் வேண்டுமா? அல்லது அலங்கார பொருட்களை வைத்து அழகுப்படுத்துவதும் தேவையா? என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றப்படி டீ.வி யுனிட்டை வாங்குவது எளிதாக இருக்கும்.
1. குறைந்த ஷெல்ஃப் கொண்ட டீ.வி யுனிட்
இந்த டீ.வி யுனிட் டிசைன் சிறிய அறைக்கு கூட கச்சிதமாக பொருந்தக்கூடியதாகும். இதை ஹால் மற்றும் பெட்ரூமில் பொருத்தினால் சரியாக இருக்கும். இந்த டிசைன் அறையை அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டும். ஷெல்ஃப்ல் புத்தகம், டிவிடி, அலங்கார பொருட்களை வைத்து அழகுப்படுத்தலாம்.
2. கார்னர் டீ.வி யுனிட் டிசைன்
கார்னர் டீ.வி யுனிட் டிசைன் ஒரு சிறந்த டிசைனாக கருதப்படுகிறது. வீட்டில் குறைந்த இடம் உள்ளவர்களுக்கு இது சரியான தேர்வாக அமையும். மூலையில் உள்ள இடத்தை பயன்படுத்தவும், அறையின் இடத்தை அதிகரித்துக் காட்டவும் இந்த டிசைன் உதவுகிறது. மேலும் எந்த இடத்தில் இருந்தும் டீ.வியை பார்க்க முடியும்.
3. மரத்தால் ஆன டீ.வி யுனிட் டிசைன்
மரத்தால் ஆன டிசைன்கள் எப்போதும் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகாது. மக்கள் எப்போதுமே இதை விரும்புவார்கள். மார்டனான வீட்டிற்கு கூட மரத்தால் ஆன டீ.வி யுனிட் பயன்படுத்துவது கச்சிதமாக பொருந்தும். தேக்கு போன்ற மரத்தால் செய்யப்பட்டிருக்கும் டீ.வி யுனிட் வீட்டிற்கு பாரம்பரிய அழகைத் தரும்.
4. கதவுகள் வைத்த டீ.வி யுனிட்
டீ.வி பயன்பாட்டில் இல்லாத சமயத்தில் மூடி வைக்க கதவுகள் கொண்ட டீ.வி யுனிட் சிறந்ததாக அமையும். இதனால் டீ.வியின் மீது தூசி படிவதை தடுக்கலாம். உங்களுடைய வீட்டின் ஹாலில் சூரிய ஒளி அதிகம் வரும் எனில் இந்த டீ.வி யுனிட் சூரிய ஒளியிலிருந்து உங்கள் டீ.வியை பாதுகாக்கும்.
டீ.வி யுனிட் மரம், உலோகம், சிமெண்ட், கிளாஸ், PVC போன்ற டிசைன்களில் இருக்கின்றன. இதில் உலோகம் நீடித்து இருப்பதோடு மட்டுமில்லாமல் தரமாகவும் இருக்கும். மார்டன் மற்றும் ஸ்டைலிஷான டீ.வி யுனிட்டிற்கு கண்ணாடியை தேர்வு செய்வது சிறந்தது. PVC டீ.வி யுனிட் விலை மலிவானது மட்டுமில்லாமல் சுத்தம் செய்வது எளிதாகும்.
உங்கள் அறையின் அளவு, நிறம் போன்றவற்றை கருத்தில் கொண்டு டீ.வி யுனிட்டை தேர்வு செய்வது அவசியமாகும். வெள்ளை மற்றும் வெளிர் சாம்பல் நிறம் அறையை விசாலமாக காட்டும். வால்நட் பிரவுன் இடத்திற்கு வெப்பத்தை தருகிறது. நேவி ப்ளு தனித்துவமான நவநாகரிக அழகைத் தருகிறது.