பெண்களுக்கு பல தளங்களில் சுதந்திரம் கிடைத்து விட்டாலும் அவர்களே அழகெனும் சிறையில் அகப்பட்டுக் கொண்டு தாங்களாகவே ஒரு கற்பனை கருத்தில் வாழ்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. அழகென்பது மன அழகு, புற அழகல்ல என பலவிதமான உதாரணங்களைக் கொண்டு சொன்னாலும் அழகையும் அதற்கான மெனக்கெடல்களும் அதிகமாகவே உள்ளன.
பாட்டிமார்கள் புழங்காத இடங்களில் நாம் புழங்குகிறோம். வேலை பார்க்கிறோம். ஆனால், கலாசாரம் எப்படி பல வரையறைகளை விதித்து நம்மை ஒடுக்கிறதோ அப்படி அழகு பற்றிய மாயையும் நம்மை ஒடுக்குகிறது. கலாசாரம் கூட வெளி அழுத்தம்தான். அழகு மாயை நம்மை அறியாமலேயே உள்ளுக்குள் அழுத்தி மேலே வர விடாமல் தடுக்கும் சக்தியாக உள்ளது.
அழகு மாயையில் சிக்கி அதிக பிரச்னைகளை சந்திக்கிறோம். இந்தத் தலைமுறைதான் இரத்த சோகையால் அவதியுறுகிறது. அழகு சாதனங்களின் வணிகம் பெருமளவில் கொடிகட்டிப் பறக்கிறது. உடல் உறுப்புகளை அழகாக்கிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஒல்லியாக இருக்க ஓயாமல் பாடுபடுகிறார்கள்.
‘அழகாக நம்மைக் காட்டிக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?’ எனக் கேட்கலாம். தவறில்லை. ஆனால், இது நம்மை ஒடுக்குகிறது. பெண்களின் ஆளுமையும், திறன்களும் அவர்களை வானத்துக்குக் கொண்டு சென்றாலும் அழகு பற்றிய மாயை பின்னுக்கு இழுத்து அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்கிறது.
நம்மைச் சுற்றி பின்னப்பட்ட மாய வலையில் சிக்கும் பெரும்பாலான இளம் தலைமுறையினர் அழகு பற்றிய புரிதலை பெறுவது அவசியம். காலத்தால் அழிந்து விடக்கூடிய அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் தராமல், ‘என் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? என் திறமைதான் பேச வேண்டும்’ என்ற தெளிவைத் பெற்று விட்டால் ஜெயிப்பது நிஜம். அழகென்பது பெருமிதமல்ல, கற்பிதம் என்பதை உணர்வோம்.