
அன்றாட வாழ்க்கையில் தினசரி குளியல் என்பது தினசரி கடமையாகும். தற்போது ஓடி கொண்டிருக்கும் காலத்தில் பலரும் தன் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அன்றைய காலகட்டங்களில் என்ன தான் வேலை இருந்தாலும் தங்களது உடலில் அக்கறை செலுத்துவார்கள். அப்படி ஒரு செயல் தான் தலைமுடிக்கு சாம்பிராணி காண்பிப்பது.
ஒரு சிலர் இது நல்லது என்று கூறினாலும் பலர் இது சுவாச பிரச்சனையை உண்டாக்கும் உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் தலை குளித்த பின் சாம்பிராணி காட்டுவது ஏன், அதனால் என்ன நன்மைகள் என்பது குறித்து பார்க்கலாம்.
அன்றைய காலத்தில் பெண்களுக்கு தலைமுடி நீளமாக இருந்ததால், வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு குளித்த பின் சாம்பிராணி புகை போடுவார்கள். இதை செய்வதால் வீடு முழுவதும் அந்த புகை பரவும். இதனால் வீட்டில் உள்ள பூச்சிகள், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழியும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் சாம்பிராணி ஒரு நோய் தடுப்பு மருந்தாக செயல்படுகிறதாம்.
சாம்பிராணியின் நன்மைகள்:
பிரங்கின் சென்ஸ் எனும் ஒரு மரத்திலிருந்து வடியும் பிசின் தான் இந்த சாம்பிராணியாம். இந்த பிசின் எளிதில் பற்றக்கூடிய தன்மையை கொண்டதாக இருக்கிறது. இதன் புகையை தலைமுடியில் காட்டுவதால் தலையில் உள்ள ஈரம் காய்வதோடு கூந்தல் மணம் வீசும். தற்போதைய நாகரிக உலகத்தில் ஷாம்பு உள்ளிட்ட வாசனை பொருட்கள் அதிகரித்துள்ளது. ஆனால் அக்காலத்தில் அது போன்று எதுவும் இல்லாததால் தலைமுடிக்கும் மணமூட்ட இந்த சாம்பிராணி விற்பனை செய்யப்பட்டது.
இதில் இருந்து வரும் புகையால் வீட்டில் லட்சுமி கடாட்ஷம் வரும் என நம்பப்படுகிறது. இந்து மதம் மட்டுமின்றி அனைத்து மத ஆலயங்களிலும் சாம்பிராணி முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் அது அந்த இடத்தில் உள்ள தீய சக்திகளை அகற்றும் என சொல்லப்படுகிறது.
அந்த வகையில் பெண்கள் தலைக்கு சாம்பிராணி காட்டுவதன் மூலம் அவர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்குவதாக ஐதீகம். சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாவதாகவும், உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய் தொற்றுகளை அது தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் சாம்பிராணி புகையால் தலை முடியில் நரை பிரச்சனை இல்லாமல் கருமையாக வளரும் எனவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே அக்கால பெண்கள் பலருக்கும் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்ததாம். சாம்பிராணி பிசினில் உள்ள வேதி பொருட்கள் புற்றுநோயை குணப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே கடைகள், கோயில்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் சாம்பிராணி புகை போடப்படுகிறது.
இதே போன்று சாம்பிராணி கட்டியை பொடியாக்கி சின்ன வெங்காயத்துடன் சேர்த்து அரைத்து உடலில் உள்ள கட்டிகளில் தடவினால் வீக்கம் குணமடையும் எனவும் சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி சாம்பிராணி கொசுவை விரட்டவும் உதவுமாம். இந்த சாம்பிராணியுடன் நொச்சி இலையோ, வேப்பிலையோ சேர்த்து புகைய விட்டால் கொசு ஒழிந்து விடுமாம். கொசு வர்த்தி செய்வதில் கூட சிறிது சாம்பிராணி பிசின் சேர்க்கப்படுகிறதாம்.