தாகம் தீர்க்கும் இலைகள்... தாகம் தணிக்கும் நிழல்! புளிய மரத்தின் மகத்துவம் தெரியுமா?

tamarind-trees
tamarind-trees
Updated on

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் சாலைகளில் வாகனங்களிலோ, நடந்தோ செல்லும்பொழுது சற்று ஒதுங்கி நின்று இளைப்பாற நிழல் மிகுந்த மரத்தடியை தேடாதவர்கள் எவரும் இல்லை. சாலையோரம் புளிய மரங்கள் நடப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் அடர்ந்த நிழல், நீண்ட ஆயுள், வறட்சியைத் தாங்கும் திறன் மற்றும் மின்னலை ஈர்த்து தரைக்கு கடத்தும் அதன் தனித்துவமான திறன் போன்றவையே முக்கிய காரணங்களாகும்.

வறட்சியை தாங்கும் திறன்:

மானாவாரி பகுதிகளில் வறட்சியைத் தாங்கி பலன் கொடுக்கும் பழ மரங்களில் புளியமரம் மிகவும் முக்கியமானது. குறைவான நீரைக் கொண்டு வறண்ட காலங்களிலும் புளியமரம் செழித்து வளரும். புளி மருந்து, உணவு, உடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகவும், ரசாயனப் பொருட்களை தயாரிக்கவும் பயன்படுகிறது. பழுத்த புளியம் பழத்தில் 55 % கூழ், 33% விதை மற்றும் 12% நார் பொருட்கள் உள்ளன.

நிலத்தடி நீர்மட்டம்:

புளிய மரத்தின் வேர்கள் மிகவும் வலுவானவை. மிக ஆழமாகச் செல்லும் தன்மை கொண்டவை. இவை பூமியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, நிலத்தடி நீர்மட்டத்தை பராமரிக்க உதவுகின்றது. வறட்சியைத் தாங்கி மரத்தை உறுதியாக நிலை நிறுத்துவதுடன், மழைக்காலங்களில் மண்ணரிப்பைத் தடுத்து மண்ணின் நிலைத்தன்மையை மேம்படுத்துகின்றன. புளிய மரம் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளில் இருந்து மீண்டும் முளைக்கும் அபாரத்திறன் கொண்டவை.

இதையும் படியுங்கள்:
வீட்டின் தலைவாசல் இப்படி இருந்தால் செல்வம் கொழிக்கும்! மகிழ்ச்சியை ஈர்க்கும் வாஸ்து ரகசியங்கள்!
tamarind-trees

நிழல் மற்றும் குளுமை:

அடர்ந்த இலைகளைக் கொண்ட புளியமரம் கோடைக் காலத்தில் வழிப்போக்கர்களுக்கும், பயணிகளுக்கும் வெயிலின் தாக்கத்தை குறைத்து குளுமையான நிழலைத்தருகிறது. கடும் வெயிலிலும் இதன் அடியில் குளுமையான சூழல் நிலவுவதால் இளைப்பாற ஏற்ற இடமாக உள்ளது. கோடையில் நீண்ட தூரம் பயணிக்கும் பொழுது இதன் இலை மற்றும் பிஞ்சுகளை மென்று நீர் தாகத்தையும், பயணக் களைப்பையும் முற்காலத்தில் போக்கிக்கொண்டனர்.

இதன் இலை மற்றும் பிஞ்சுகளை கடித்து சுவைக்கும் பொழுது அதிக அளவு உமிழ் நீர் பெருகுவதால் தாகம் தணிந்து களைப்பையும் போக்கும். புயல் வீசும் போதும் கிளைகள் எளிதில் முறிவதில்லை. சில பாரம்பரிய மருத்துவ முறைகளில் புளிய மரத்தின் வேர் பட்டை ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

மின்னல் பாதுகாப்பு:

புளிய மரங்களுக்கு இயற்கையாகவே மின்சாரத்தை கடத்தும் திறன் அதிகம். மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்கும்பொழுது, அது சாலையோரம் உள்ள புளிய மரங்கள் வழியாக பூமிக்குள் சென்று விடும். இதனால் அருகில் உள்ள வீடுகளும் மக்களும் பாதுகாக்கப் படுகின்றனர். ஆனால் இடி மின்னலின் பொழுது அதன் அடியில் நிற்பது மிகவும் ஆபத்தானது என்பதை மறக்கவேண்டாம்.

பொருளாதாரப் பயன்:

முற்காலத்தில் சாலையோரப் புளிய மரங்களில் இருந்து கிடைக்கும் புளியம்பழங்களை ஏலம் விடுவதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்தது. அத்துடன் கிராம மக்களும் தங்கள் சமையல் தேவைக்காக இவற்றை சேகரித்துக் கொண்டனர். முதிர்ந்த புளிய மரம் ஆண்டுக்கு 100 கிலோவிற்கும் அதிகமான காய்களை தருகிறது. புளியங்கொட்டையிலிருந்து பசை தயாரிக்கப்படுகிறது.

மேலும் இது துணி மற்றும் சணல் தொழிற்சாலைகளில் பதப்படுத்துதலுக்கும் பயன்படுகிறது. இதன் மரக்கட்டைகள் மரத்தாலான பொருட்கள் செய்யவும், இலைகள் மற்றும் பழக்கூழ் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வெப்பத்தைத் தடுத்து நறுமணம் வீசும் வெட்டிவேர் திரைச்சீலைகள் - கோடைக்கேற்ற வரப்பிரசாதம்!
tamarind-trees

குறைவான நீர் இருந்தாலும், கடும் வறட்சியைத் தாங்கி உறுதியாக நிற்கும் திறன்கொண்ட இந்த மரத்தின் பழம், இலைகள், விறகு ஆகியவை பெருமளவில் பயன் படுகின்றன. முற்காலத்தில் மக்கள் நீண்ட தூரம் நடப்பவர்கள் மற்றும் வண்டியில் செல்பவர்கள் நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதற்காகவே நெடுஞ்சாலைகளில் புளிய மரங்கள் நடப்பட்டன.

ஆனால் தற்பொழுது சாலை விரிவாக்க பணிகளுக்காக இத்தகைய பாரம்பரியமிக்க மரங்கள் அகற்றப்படுவது இயற்கை ஆர்வலர்கள் இடையே பெருத்த கவலையை அளிக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com