மன நிம்மதிக்கு கலர் சைக்காலஜி எடுபடுமா?

Colourful house
Colors
Published on

நல்ல வருமானம் இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் பலரும் நிம்மதி இன்றி தவிக்கின்றனர். மேலும் மன நிம்மதிக்கான வழி எதுவென அறியாமலும் இருக்கின்றனர். நமக்கான நிம்மதி எப்போதும் நம்மைச் சுற்றியே தான் இருக்கிறது. ஆனால் அதனை சிலர் உணராமலும், கண்டு கொள்ளாமலும் இருக்கின்றனர். நம்மில் பலருக்கு வீட்டை அழகாக வைத்துக் கொள்ளத் தோன்றும், சிலருக்கு வீட்டுத் தோட்டத்தில் கவனம் செலுத்த தோன்றும். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான விருப்பங்கள் இருக்கும். நமக்கு பிடித்ததைச் செய்யும் போது மன நிம்மதி கிடைக்கும். அதில் வேலைப்பளுவே தெரியாது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். நமக்குப் பிடித்த வண்ணத்தில் வீட்டிற்கு வர்ணம் பூச நினைப்போம். இது பலருக்கும் மன நிம்மதியை அளிக்கிறது. ஆம் வண்ணங்கள் கூட நம் மனதோடு தொடர்பு கொண்டுள்ளன.

வண்ணங்களின் தன்மை:

வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பச்சை மற்றும் நீல நிற வண்ணங்களை உங்கள் வீட்டிற்கு வர்ணம் பூசத் தேர்ந்தெடுத்தால், அது உங்களுக்கு ஒரு குளிர்ச்சியான உணர்வைத் தரும். மனதை அமைதிப்படுத்த நீல நிறம் உதவுகிறது. மேலும் இந்நிறம் நரம்புகளை அமைதிப்படுத்தி, உடலைத் தளர்த்துகிறது. மனதிற்கு புத்துணர்ச்சியையும், ஓய்வையும் அளிக்க வல்லது நீல நிறம்.

இயற்கையுடன் பின்னிப் பிணைந்த நிறம் பச்சை. இந்நிறம் உங்களுக்கு நிதானமான சூழலைத் தரும்.

படைப்பாற்றல், ஆன்மீகம் மற்றும் ஆடம்பரத்தை குறிக்கும் நிறமாக ஊதா இருக்கிறது.

நல்லிணக்க உணர்வை வழங்குகின்ற நிறங்களாக பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்கள் உள்ளன.

மகிழ்ச்சியையும், நேர்மறையான உணர்வுகளையும் தருவதற்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் உதவுகிறது.

உங்கள் வீட்டிற்கு எம்மாதிரியான நிறங்கள் வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

படுக்கை அறைக்கேற்ற வண்ணம்:

உங்களின் படுக்கை அறைக்கு எப்போதும் அமைதியைத் தரக் கூடிய நீலம், பச்சை மற்றும் லாவெண்டர் போன்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நிறங்கள் உங்களுக்கு ஓய்வையும், சிறந்த உறக்கத்தையும் தரும்.

இதையும் படியுங்கள்:
மன நிம்மதி எனும் பொக்கிஷத்தை அடைவதற்கான வழிகள்!
Colourful house

வேலை பார்க்கும் அறை:

உற்பத்தி திறனை பெருக்கும் வண்ணங்களை நீங்கள் வேலை பார்க்கும் அறைக்கு தேர்ந்தெடுக்கலாம். இங்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற ஆற்றல் நிறைந்த வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இந்நிறங்கள் உங்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிக்க உதவும்.

வீட்டிற்கு வர்ணம் பூச வண்ணங்களின் தேர்வில் நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். நாள்தோறும் வீட்டில் இந்நிறங்களைத் தான் காணப் போகிறோம். ஆகையால், இதில் முழு விருப்பத்துடன் செயல்படுங்கள். வண்ணங்களின் தன்மைகள் மற்றும் உங்களுக்குப் பிடித்த வண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டிற்கு வர்ணம் பூசுங்கள்.

எப்போதாவது நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, வீட்டில் பூசப்பட்ட வண்ணங்களைப் பார்த்தால், அது உங்கள் மனநிலையை மாற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வண்ணங்களின் சைக்காலஜி மனிதர்களின் மனநிலையோடு அதிகம் ஒத்துப் போவதால், வண்ணங்கள் மன நிம்மதிக்கான ஒரு வழி என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com