குவார்ட்ஸ் கிறிஸ்டல்களை பூஜை அறையில் வைக்கலாமா?

குவார்ட்ஸ் கிறிஸ்டல்களை பூஜை அறையில் வைக்கலாமா?
Published on

வரத்தினக் கற்களைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். நமது ராசி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கு ஏற்றவாறு உகந்தவை என இவற்றைத் தேர்ந்தெடுத்து அணிகிறோம். ஆனால், அனைத்துப் பேர்களுக்கும் உகந்ததும், மனநலம், உடல் நலம் இரண்டிற்கும் உதவுவதுமான குவார்ட்ஸ் கிறிஸ்டல் கற்களைப் பற்றி நம்மில் அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

குவார்ட்ஸ் கிறிஸ்டல்கள் பளிங்கு போன்ற ஸ்படிகக் கற்கள். மனித குலத்தின் நன்மைக்காகவும், ஆன்மிக மேம்பாட்டிற்காகவும் இவை இறைவனால் நமக்கு அருளிச் செய்யப்பட்ட அபூர்வ சக்தி படைத்த கற்கள். இவை ஆறு பட்டைகள் கொண்டதாகவும், உச்சி குவிந்தும் காணப்படும்.

சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற இக்கிறிஸ்டல்கள் பிரகாசமான வெண்மை ஒளிச் சக்திக்கு எடுத்துக் காட்டானவை. நமது ஆன்மாவின் பிரதிபலிப்பாக உள்ளவை. பொதுவாக இவற்றின் அடிப்பகுதி அடர்ந்தும், வளர்ச்சி பெறப்பெற உச்சிப் பகுதி ஒளி ஊடுருவிச் செல்லும் பளிங்கு போன்றுமிருக்கும். இதில் ஒரு தத்துவம் உள்ளது. மனித வாழ்க்கையில் நாம் நடத்திவரும் போராட்டங்களை இக்கற்களின் அடர்ந்த அடிப்பகுதி குறிப்பதாகவும், இதன் தெளிந்த மேற்பகுதி எப்படி பலவித போராட்டங்களுக்குப் பிறகு நாம் தெளிந்த அறிவினைப் பெறுகிறோமோ அதைக் குறிக்கும் வகையில் இருப்பதாகவும் உள்ளது.

பூமா தேவியின் கர்ப்பக் கிரகத்தில் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்து அழகிய ஆறு பட்டைகளுடனும் பிரபஞ்ச ஒளியை நாடிப் பெறுவதற்காக குவிந்த உச்சியுடனும் இவை வடிவமைந்துள்ளன. இவற்றின் உச்சிப் பகுதி படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலின் சக்தியை இரட்டிப்பாக்குவது போல் ஆறு பட்டைகளும் குவிந்து ஒரு பிரமிட் போலுள்ளன.

குவார்ட்ஸ் கிறிஸ்டல்கள் பளிங்கு போல் நிறமற்றதாகவும், பல வர்ணங்கள் கொண்டதாகவும் கிடைக்கின்றன. வயலெட் நிறத்துடன் வரும்போது அமிதிஸ்ட் (Amethyst – செவந்தி) என்றும் புகை படிந்த கருமையான நிறத்தில் புகைக் கிறிஸ்டல் (Smoky quartz) என்றும், மஞ்சள் நிறத்தில் சிட்ரின் (Citrine) குவார்ட்ஸ் என்றும், ரோஸ் நிறத்தில் தோன்றும்போது ரோஸ் குவார்ட்ஸ் (Rose Quratz) என்றும் இவை அழைக்கப்படுகின்றன. சிவம், சக்தி இரண்டு தத்துவங்களையும் கொண்ட அர்த்தனாரீஸ்வரர் கிரிஸ்டல்களும் உண்டு.

குவார்ட்ஸ் கிறிஸ்டல்கள் தெய்வந்தன்மை பொருந்தியனவாதலால் அவை ஆன்மிகத்திற்குத் தொடர்புடையனவாகும். ஸ்படிக லிங்கங்கள், ஸ்படிக மணிமாலைகள், வினாயகர் சிலைகள் ஆகியவை குவார்ட்ஸ் கிறிஸ்டல்களினால் சமைக்கப்படுகின்றன.

குவார்ட்ஸ் கிறிஸ்டல்கள் தமது சக்தியை அதிர்வுகளாக வெளிப்படுத்தி, தம்மைச் சுற்றி ஒரு சக்திப்படலத்தை உண்டு பண்ணுகின்றன. ஒரு அங்குல நீளமுள்ள ஒருகுவார்ட்ஸ் கிறிஸ்டைல் தன்னைச் சுற்றி 3 அடி தூரத்திற்குத் தனது சக்தியை வியாபகம் செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. வெறும் கைகளைக் கொண்டு நோய்களைக் குணப்படுத்தும் “ரெய்க்கி” போன்ற சிகிச்சை முறைகளுக்கு குவார்ட்ஸ் கிறிஸ்டைல்கள் பெரிதும் உதவுகின்றன.

பிரபஞ்ச சக்தியை நமது உடலிலுள்ள சூட்சம சக்கரங்கள் வழியே நாம் கிரகிக்கவும், அவற்றின் சக்தியை பலமடங்கு அதிகரிக்கச் செய்யவும், கிறிஸ்டல்கள் உதவுகின்றன. தியானத்தின் போதும், ஆழ்மனப் பயிற்சிகளின் போதும் மனதை ஒரு முகப்படுத்திக்கொள்ள குவார்ட்ஸ் கிறிஸ்டல்கள் உதவுகின்றன. இக்கிறிஸ்டல்கள் மன ரீதியான, உணர்ச்சி ரீதியான பிரபஞ்ச சக்திகளைப் பற்றிய பிரக்ஞயை நமக்கு உண்டு பண்ணுகின்றன. குவார்ட்ஸ் கிறிஸ்டல்களை வைத்து தியானப் பயிற்சியில் ஈடுபடும்போது பிரபஞ்ச சக்திகளோடு நமக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றன.

பெரிய அளவுள்ள குவார்ட்ஸ் கிறிஸ்டல்களை நாம் பூஜை அறையில் வைத்து பூஜித்தும் வரலாம். நமது இஷ்ட தெய்வங்களை இவற்றில் பிரவேகிக்கச் செய்து அவை தங்குமிடங்களாகவும் கிறிஸ்டல்களை மாற்றலாம். சில தேர்ந்த கிறிஸ்டல் பயிற்சியாளர்கள் கிறிஸ்டல் பந்துகளை வைத்து எதிர்கால நிகழ்ச்சிகளை அவற்றில் கண்டு, வருங்காலப் பலன் உரைத்தலும்  உண்டு.

குவார்ட்ஸ் கிறிஸ்டல்களைப் பதக்கமாக அணிந்துகொண்டாலும், அல்லது நமது உடலில் படும்படி இவற்றை வைத்துக்கொண்டாலும் இவை நமது இரத்த அழுத்தத்தை சமன் செய்வதுடன் நமது மனதை அமைதிப்படுத்தவும் உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகளும் குவார்ட்ஸ் கிறிஸ்டல்களை அணிந்து குணமடைந்திருக்கின்றனர். சில எளிய பயிற்சிகளின் மூலம் குவார்ட்ஸ் கிறிஸ்டல்களைக் கொண்டு நமது உடலின் மின்காந்த அதிர்வுகளைச் சமன்படுத்தியும், நமது உடலில் உள்ள சூட்சும சக்ராக்களின் சுழற்சியை ஒழுங்குப்படுத்தியும் நம்மை நாமே உடல், மனரீதியாகக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

1558 – 1603 இங்கிலாந்து நாட்டின் அரசி எலிஸபெத் ராணியாரின் பிரத்தியேக வைத்தியர் டாக்டர் ஜான் டீ என்பவர் ராணியாரின் சிகிச்சைக்கு ஒரு குவார்ட்ஸ் கிறிஸ்டலை உபயோகப்படுத்தினார். அந்த கிறிஸ்டல் இன்றும் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு மியூசியத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கூறியது போல் குவார்ட்ஸ் கிறிஸ்டல் கற்கள் சூரிய பகவானுக்குரியவை. சூரிய ஒளியைத் தங்களுக்குள் வாங்கி தங்களின் உட்புறத்தில் அதை நிறப்பிரிகை செய்து வானவில்லின் ஏழு வர்ணங்களாக மாற்றும் சக்தி படைத்த குவார்ட்ஸ் கிறிஸ்டல்கள் நம்மை மிகுந்த வியப்பிலாழ்த்தும்.

- எஸ்.ஜி. ஜெயராமன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com