தொட்டிகளில் மரம் வளர்க்க முடியுமா?

தோட்டக்கலை
தொட்டிகளில் மரம் வளர்க்க முடியுமா?
Published on

மாறி வரும் உலக சூழ்நிலைக்கு மிகவும் உகந்தது. தொட்டியில் தாவரங்கள் வளர்ப்பது. இம்முறையைப் பயன்படுத்தி வீட்டின் முன்புறம் உள்ள சிறிய காலியிடம், பால்கனி, மொட்டை மாடி போன்ற இடங்களில் செடிகளை வளர்க்கலாம். (நன்றாக சூரிய ஒளி கிடைக்குமிடம்.)

தொட்டியில் செடிகளை வளர்ப்பதன் மூலம் நேரம், நீர், உரம் ஆகியவை  சிக்கனமாகிறது. மேலும், மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பொழுதுபோக்காகவும் இது அமையும். நமது வீட்டின் காய்கறித் தேவையில் 40 சதவீதம் வரை தொட்டியில் வளர்க்கும் காய்கறிச் செடிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

புத்தம் புதிய காய்கறிகள் (Garden Fresh) கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான நேரத்தில் தேவைக்கேற்ப பறித்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சுற்றுப்புற சூழ்நிலை அறிஞர்களின் கூற்றுப்படி ஒவ்வொரு வீட்டிற்கு இரண்டு மரங்கள் வளர்க்க வேண்டும். இல்லையேல் தொட்டியில் இரண்டு செடிகளாவது வளர்த்து சுற்றுப்புற சூழலைத் தூய்மைப்படுத்த உதவிடுவோம்.

தொட்டியில் செடி வளர்க்க ஆரம்பிப்பதற்கு முன்பாக நாம் சில முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும். அவையாவன:

1. ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரித்தல்

ன்கு மக்கிய தொழு உரத்துடன் (மக்கிய சாணம்), சூப்பர் பாஸ்பேட் என்ற மணிசத்து தரக்கூடிய ரசாயன உரத்தை 6:1 என்ற விகிதத்தில் கலந்து காற்று புகாத பாலித்தின் பை அல்லது குழியிலிட்டு மூடி வைக்க வேண்டும். இந்த உரத்தை ஈரப்பதம் உள்ள நிழல் கிடைக்கும் இடத்தில் குறைந்தது ஒரு மாதம் சேமித்து வைக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து இந்தக் கலவை உரத்தை எடுத்து மண்ணுடன் கலந்து உபயோகிக்கலாம். இதன்மூலம் கரையாத மணிச்சத்து மண்ணில் உள்ள சில வகையான நுண்ணுயிர்கள் மூலம் கரையும் மணிச்சத்தாக மாற்றப்படுகிறது.

2. இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு உரம் தயாரித்தல்:

டலை பிண்ணாக்கு வேப்பம் பிண்ணாக்கு எலும்பு தூள் (Born Meal) ஆகியவற்றை 1:1:1 என்ற விகித்ததில் கலந்து, மிக்ஸியில் அரைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இக் கலவை உரத்தை செடிகளுக்கு மேலுரமாக பயன்படுத்தலாம். இந்த உரத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து செடி வளர்க்கும் தொட்டியின் ஓரத்தில் விட்டு நீர் ஊற்ற வேண்டும்.  இந்த இயற்கை கலவை உரத்தை செடிகளுக்கு இடுவதால் செடிகள் செழித்து வளர்கிறது. உரம் சற்று அதிகமாகிவிட்டால் கூட செடிகள் வாடுவது இல்லை. (இரசாயன உரம் (யூரிய DAP) சிறிது அதிகமானால் செடிகள் வாடி இறந்துவிடும்.)

தொட்டியில் செடி வளர்க்கும் முறை:

தொட்டியில் வளர்க்கும் தாவரங்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1. குறைந்த நாட்களில் பலன் கொடுக்கும் காய்கறி, கீரை, பூச்செடிகள் வளர்ப்பது.

2. நீண்ட கால பலன் கொடுக்கும் மரங்களை வளர்ப்பது.

தொட்டியில் காய்கறிச் செடிகள் வளர்ப்பதிலும் இரண்டு முறை உள்ளது.

1. இயல்பு (சாதாரண) முறையில் செடி வளர்ப்பது...

செடி வளர்க்கப் பயன்படும் மண்தொட்டியின் அடியில் உள்ள துவாரங்களை தேங்காய் நார் கொண்டு மூட வேண்டும். இத்தொட்டியில் நாம் முன்பே தயாரித்து வைத்துள்ள தொழு, உரம், செம்மண், ஆற்று மணல் ஆகியவற்றை சமவிகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்ப வேண்டும். (முக்கால் பாகம்)

இதில் நமக்குத் தேவையான செடிகளை நட்டு நீர் ஊற்றி வளர்க்கலாம். நாம் ஊற்றும் நீர் தொட்டியில் தேங்காமல் நன்கு வடியுமாறு (துவாரங்கள் மூலம்) பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் தண்ணீர் தேங்குவது போல் இருந்தால் மண் கலவையில் சிறிது அதிகம் ஆற்று மணல் கலந்து நிரப்ப வேண்டும்.

2. தந்துகி கவர்ச்சி என்ற அறிவியல் தொழில்நுட்பம் மூலம் செடி வளர்ப்பது:

ரண்டு லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு உள்ள புனல் வடிவ பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அடிப்பாகத்தை வெட்டி விட வேண்டும். டப்பாவின் புனல் வடிவ பாகம் கீழ்நோக்கி இருக்குமாறு (படத்தில் காட்டியபடி) ஒரு முக்கோண தாங்கியில் பொருத்த வேண்டும். புனல் வடிவ வாய் பாகத்தைத் தேங்காய் நார் அல்லது தேங்காய் நார் கயிறு கொண்டு அடைக்க வேண்டும். (நாரி்ன நீளத்தில் பாதி டப்பாவின் பக்கமும் மீதி கீழே நீட்டிக் கொண்டும் இருக்க வேண்டும்.)

டப்பாவில் முன்னர் குறிப்பிட்ட மண் கலவையை நிரப்ப வேண்டும். நமக்கு வேண்டிய செடிகளை இந்த டப்பாவில் நட்டு வளர்க்கலாம். நாம் செடிக்கு ஊற்றும் நீர் கீழே வழிந்து ஓடாமல் இருக்க டப்பாவின் புனல் வடிவ பாகத்தில் நல்ல தடிமனான பிளாஸ்டிக் பையை (ஆவின் பால் கவர்) கட்டி விட வேண்டும். நாம் செடிக்கு ஊற்றும் நீர் மண் உறிஞ்சியது போகத் தேங்காய் நார் மூலம் வடிந்து பிளாஸ்டிக் பையில் சேர்ந்துவிடும். இந்த நீர் செடிக்குத் தேவைப்படும்பொழுது தேங்காய் நார் மூலம் உறிஞ்சப் பட்டு மீண்டும் செடிக்குக் கிடைக்கும். இந்த அறிவியல் முறைக்கு தந்துகி கவர்ச்சி என்று பெயர்.

இந்த முறையில் கிடைக்கும் நன்மைகள்

நீர் மிகக் குறைந்த அளவே தேவைப்படும். நீர் கீழே வழிந்த இடத்தை அசுத்தப்படுத்தாது. நாம் செடிக்கு இடம் உரம் நீருடன் கரைந்தாலும் கீழே உள்ள பையில் சேர்ந்து திரும்பவும் செடிக்குக் கிடைத்துவிடும். குறைந்த இடமே போதும்.

இந்த முறையில் நமக்குத் தேவையான தாவரங்களை வளர்க்கலாம். (கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கொத்தவரை மற்றும் அலங்காரச் செடிகள்) மொட்டை மாடியில் செடி வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றது. நீர் கீழே வழிந்து, மாடியின் தரையை அசுத்தப்படுத்தாது. ஆரம்பத்தில் சிறிது அதிக செலவு செய்து (தாங்கி செய்வதற்கு) செடி வளர்க்க ஆரம்பித்து விட்டால், மீண்டும் மீண்டும் அதே உபகரணங்களை உபயோகித்து செடி வளர்த்து பயன் அடையலாம். இம்முறையில் சாதாரண முறையில் வளர்ப்பதை விட செடிகள் நன்கு வளர்ந்து அதிக பலன் கிடைக்கும்.

தொட்டியில் மரம் வளர்க்கும் முறை:

நாகரிக உலகத்தில் எல்லாமே ரெடிமேடாகக் கிடைப்பதால் குறைந்த நேரத்தில் அதிக பயன் அடைகிறோம். இந்த முறையில் ரெடிமேடாக மரங்களைக் கூட வாங்கி வளர்த்து விற்பனை செய்யலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள் ரெடிமேட் மரங்களை வாங்கி நட்டு சீக்கிரத்தில் பயன் அடையலாம். வாங்குவோர் நேரடியாகவே மரங்களின் வளர்ச்சி பழத்தின் சுவை, பருமன் இவைகளைப் பார்த்து வாங்கிச் செல்லலாம்.

மரங்கள் வளர்ப்பதற்கு 20 லிட்டர் காலியான பெயிண்ட் வரும் டின்கள் ஏற்றது. டின்னின் மேல் பாகத்தை வெட்டியெடுத்து விட்டு, அடிப்பாகத்தில் தண்ணீர் வெளியேற சிறு துளைகளை இட வேண்டும். இந்தத் துளைகளை தேங்காய் நார் கொண்டு மூடி ஊட்டமேற்றிய தொழு உரம் கலந்த மண் கலவையை டின்னில் முக்கால் பாகம் நிரப்ப வேண்டும்.

நாம் விரும்பும் மரக்கன்றுகளை இதில் நட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். நட்ட மரக் கன்றுகளின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பலன் தர ஆரம்பிக்கும்.

ஒட்டுச் செடிகள், பதியன் மூலம் எடுக்கப்பட்ட மரச் செடிகளை வாங்கி வளர்ப்பதன் மூலம் விரைவில் பலன், பயன் அடையலாம். கொய்யா, எலுமிச்சை, மாதுளை, சப்போட்டா, அகத்தி, சீமை, எலந்தை மற்றும் நிழல் தரும் மரங்களையும் வளர்க்கலாம். நடும்பொழுது டின்னை வெட்டியெடுத்துவிட்டு மரங்களைத் தனியாக எடுத்து தரையில் நட்டு விடலாம். உரமும் தண்ணீரும் தொட்டியில் வளர்க்கும் செடிகளுக் கிடுவதுபோல் இட்டால் போதும். பதியன் மூலம் எடுத்து வளர்க்கப்படும் எலுமிச்சை மரம் நன்கு வளர்ந்ததும் வருடத்திற்கு 60 பழங்களுக்குக் குறையாமல் கொடுக்கும்.

- ஆர். வைத்தியநாதன்   

(மே ’98 மங்கையர் மலர்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com