உறவை வலுவாக்கும் அக்கறையும் பாராட்டும்!

Loving couple
Loving couple
Published on

‘உங்கள் துணையிடம் நீங்கள் காட்டும் அக்கறையும் பாராட்டும் அந்தக் கணங்கள்தான் மிகவும் முக்கியமானவை. ஒரு சிறு ‘நன்றி’ அல்லது ஒரு ‘துரித முத்தம்’ உங்கள் உறவை நீண்ட பயணத்தில் வலுவுள்ளதாக்கும். ஒரு அர்த்தமற்ற பணியில் இருந்தாலும், மூன்று குழந்தைகள் பெற்றவரானாலும் இதைச் செய்வது ஒன்றும் பெரிய காரியமல்ல’ என்கிறார் அமெரிக்க நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் மைக்கேல் இயன் பிளாக்.

ஒரு கணவன், மனைவி. இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து, நிற்க நேரமின்றி ஓடுபவர்கள். திடீரென அவர்களுக்குள் உண்டான கருத்து வேறுபாட்டால் வக்கீலைக் காண வந்தனர். அந்த வழக்கறிஞர் அப்படி ஒன்றும் பிரபலமானவர் இல்லை. ஆனால், ‘அவர் எடுக்கும் வழக்குகள் வெற்றியைத் தரும் என்றும், கொஞ்சம் வித்தியாசமானவர்’ என்றும் நண்பர்கள் சொல்ல, அங்கு வந்தனர். மணி ஒலித்ததும் லுங்கி அணிந்தபடி வந்து கதவைத் திறந்த அந்த நடுத்தர வயது வக்கீல், அந்தத் தம்பதியரை  வரவேற்று, "கொஞ்ச நேரம் அப்படியே அந்த சோபாவில் உட்காருங்கள்.  இதோ வந்துடறேன்" என்று சொல்லி வீட்டுக்குள் சென்றார்.

உள்ளே இருந்து சின்னச் சின்ன சிணுங்கல் கேட்டது. அவர் மனைவி போலும். "வெளியில் உங்களைத் தேடி வந்திருக்காங்க. இந்த நேரத்துல கூட உங்களுக்கு ரொமான்ஸ் வேண்டிக் கிடக்குது" எனும் குரல்.

"இருக்கட்டும், எப்படி இருந்தாலும் அவங்க என்னை பாக்காம போக மாட்டாங்க. ஆனா, நீ செஞ்ச இந்த நீர் தோசை இன்னிக்கு ரொம்ப சூப்பரா இருந்தது. அதை உடனே பாராட்டலேனா நான் மறந்து போய்டுவேன். உன் கைக்கு தங்க வளையல் போட ஆசையாத்தான் இருக்கு. ஆனா முடியலையே. அதனாலதான் ரெண்டு கையிலயும் அன்பு பரிசா முத்தம் வெச்சேன்” என்கிறார்.

"சரி சரி, போங்க" மனைவியின் குரலில் வெட்கத்துடன் கணவன்  பற்றிய பெருமையும் வழிந்தது.

இதையும் படியுங்கள்:
பெண்கள் வலுவான தசை பெற உட்கொள்ள வேண்டிய 8 உணவுகள்!
Loving couple

வெளியே அமர்ந்திருந்த தம்பதிக்கு எரிச்சல். "என்ன இந்த ஆளு? ரெண்டு பசங்க தோளுக்கு மேல வளர்ந்திருக்காங்க, (அங்கிருந்த புகைப்படம் பார்த்து) இப்பவும் நாங்க இருக்கிறோம்னு  கவனிக்காம பொண்டாட்டியக் கொஞ்சறாரு" இருவரின் எண்ணமும் ஒரே மாதிரியான சிந்தனையைத் தர வெளியே வந்த அந்த வக்கீல், "என்ன இரண்டு பேரும் அப்படிப் பாக்கறீங்க? உங்க மனசுல என்ன நினைக்கறீங்கன்னு புரியுது. என்னடா இவன் இந்த வயசுலயும் ரொமான்ஸ் பண்றான்னுதானே?

இது தப்புன்னு பாக்கற உங்க பிரச்னையே இதுதான். ரெண்டு பேரும் இதுவரைக்கும் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி பாராட்டிப் பேசியுள்ளீர்களா? துணையின் உறவு நிலைக்கணும்னா எத்தனை வயசானாலும் திருமணம் முடிந்த புதுக் கணவன் மனைவி மன நிலையிலேயே இருந்து ஒருவருக்கொருவர் அன்பு பாராட்ட வேண்டும். வேலை நெருக்கடி யாருக்குத்தான் இல்லை?

இதுவரை நீங்கள் செய்த  நல்லதை நினைச்சு மனசு விட்டு நன்றி சொல்லிப் பாருங்க.. அன்பான ஒரு சின்ன முத்தமும் நன்றியும் நிச்சயம் உங்க கருத்து வேறுபாடுகளை நீக்கும். உங்கக்கிட்ட ஒரு ரகசியம் சொல்றேன். மனைவியைப் பிடிக்கலைன்னு என் அப்பாவிடம் போய் நின்னப்ப, அவர் சொன்ன மந்திரம்தான் இது" என்றார்.

மேலும் அந்த வக்கீல் அவர்களிடம், "அடுத்த வாரம் வாங்க" என்று சொல்லிவிட்டு போய் விட்டார். அவருக்குத் தெரியும், மறுபடியும் அவர்கள் வரமாட்டார்கள் என்று. ஏனென்றால், வாழ்வியல் ரகசியம் அவர்களுக்குத் தெரிஞ்சாச்சே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com