மின்சார சாதனங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கை!

Caution when using electrical appliances
Caution when using electrical appliances

ன்றைய பரபரப்பான உலகில், வீட்டு வேலைகளை எளிதாக முடிக்க உதவும் மின்சார சாதனங்களின் வரவு உண்மையில் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். சில நிமிடங்களில் சமையல், துணி துவைப்பது, பாத்திரம் தேய்த்தல், இட்லி மாவு அரைப்பது, வீடு கூட்டுவது போன்ற பணிகளை மிக எளிதாக செய்ய முடிகிறது இயந்திரங்களின் துணையுடன். ஆபத்பாந்தவனாக உதவும் அவற்றை சரியாக கையாள்வது அவசியம். ஆனால், சில சமயங்களில் கவனக்குறைவால் நாம் செய்யும் குளறுபடிகள், சங்கடங்களையும், தொல்லைகளையும் பரிசாகத் தருகிறது. வீட்டு உபயோகப் பொருட்களில் அசட்டையின் காரணமாகவோ, மறதியின் பொருட்டோ நான் செய்த சில தவறுகளைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

அடுக்களையில் இட்லிமாவுக் கோலம்: கிரைண்டரில் ஒரு நாள் உளுந்து அரைத்துக் கொண்டிருந்தேன். என் சிநேகிதி போனில் அழைத்ததும், பால்கனியில் வந்து நின்று பேசிக் கொண்டிருந்தேன். பத்து நிமிடங்கள் கழித்து உள்ளே போய் பார்த்தால் சமையலறை எங்கும் உளுந்து மாவு சிதறிக் கோலமிட்டிருந்தது. அது டேபிள் டாப் & டில்டிங் மாடல். அதன் பக்கவாட்டில் இருந்த ஸ்க்ரூ லூசாகி, நேராக இருந்த கிரைண்டர் கீழே சாய்ந்து மாவு அனைத்தும் வெளியில் வந்துவிட்டது. பிறகு, என்னையே நான் நொந்து கொண்டு அடுக்களையை சுத்தம் செய்தேன்.

வெள்ளக்காடாய் மாறிய படுக்கையறை: முன்பு நாங்கள் குடி இருந்த வாடகை வீட்டில் வாஷிங் மெஷினை இரண்டாவது படுக்கை அறையில்தான் வைத்திருந்தோம். ஒரு முறை வாஷிங் மெஷினை ஆன் செய்து விட்டு, தண்ணீர் வெளியேறும் அவுட்லெட் குழாயை எடுத்து பாத்ரூமில் விட மறந்துவிட்டு, மார்க்கெட் சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்தால் அந்த படுக்கையறை எங்கும் சோப்பு நுரை பொங்கும் வெள்ளக்காடு. அதை கிளீன் செய்து முடிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

கருகிய எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்: நான் உபயோகப்படுத்துவது மல்டி எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர். அதில் ஒரு நாள், நான் சாதம் வைத்து விட்டு ஏதோ வேலையாக வெளியே சென்று விட்டேன். சிறிது நேரம் கழித்து அதிலிருந்து கருகிய வாடை வருவதை உணர்ந்து, ஹாலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த என் மகள் ஓடிவந்து பார்த்தபோது அதனுடைய அடிப்பாகம் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து வர, அவர்கள் நீர் ஊற்றி அதை அணைத்து விட்டனர். நல்ல வேளை, அது ஒயருக்குப் பரவி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். எப்போதுமே மின்சார சாதனங்களை கையாளும்போது அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டும் என்ற அனுபவப் பாடத்தைக் கற்றுக் கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
எதற்கெடுத்தாலும் குறை சொல்பவர்களை எப்படி சமாளிப்பது?
Caution when using electrical appliances

விளையாடிக் (பொருட்களை) கலைத்த குட்டி ரோபோ: ஆறு மாதம் முன்பு வாங்கிய குட்டி ரோபோவும் மிக அழகாக வீடு கூட்டி துடைக்கிறது. ஒரு நாள் அது வேலையை முடித்ததும் தானாக தனது சார்ஜிங் ஸ்டேஷனில் சென்று சார்ஜ் ஏற்றிக் கொண்டிருந்தது. நானும் என் பிள்ளைகளும் வீட்டை பூட்டிக் கொண்டு ஷாப்பிங் சென்று விட்டோம். நான்கு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீடே அலங்கோலமாகக் கிடந்தது. ஹாலின் உள்ளே போட்டிருந்த டோர் மேட் சுருங்கி கசங்கிக் கிடந்தது. அடுக்களையில் வெங்காயக் கூடை உருண்டு, சில வெங்காயங்கள் நசுங்கிக் கிடந்தது. ஆனால், ரோபோவைக் காணோம். தேடிப் பார்த்ததில், ரோபோ குளியல் அறையில் சுற்றிக்கொண்டு இருந்ததைப் பார்த்த போது அதிர்ந்தே போனேன். ஆனால், ஈரமின்றி சுத்தமாக இருந்ததால் அது தப்பித்தது.

ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பாடம் சொல்லித் தந்தது. அதில் இருந்து அவற்றை அருகில் இருந்து, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com