இரவு நேரத்தில் நாம் தூக்கக் கலக்கத்தில் குளியலறைக்குச் செல்லும்போது அல்லது சமையலறையில் லைட்டைப் போடும்போது தரையில் வேகமாக ஓடும் ஒரு நீளமான பூச்சியைக் கண்டால் நிச்சயம் பதறிப்போவோம். பார்ப்பதற்கே அருவருப்பாகவும் பயமுறுத்தும் வகையிலும் இருக்கும் இந்தப் பூரான்கள் நம் வீட்டிற்குள் நுழைவது பலருக்கும் பிடிக்காத ஒன்று.
வானிலை மாறும்போது அல்லது மழைக்காலங்களில் இவை வீட்டிற்குள் தஞ்சமடைவது வழக்கம். இவை ஏன் நம்மைத் தேடி வருகின்றன மற்றும் இவற்றை எப்படி நிரந்தரமாக வெளியேற்றுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.
இலவச சாப்பாடு!
இந்தப் பூச்சிகள் நம் வீட்டிற்குள் வருவதற்கு மிக முக்கியமான காரணம் பசி. இவை சைவ உணவு சாப்பிடுபவை அல்ல, மற்ற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் அசைவப் பிரியர்கள். உங்கள் வீட்டில் ஏற்கனவே சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், எறும்புகளின் தொல்லை இருந்தால், அவற்றைச் சாப்பிடுவதற்காகவே இந்த பூரான்கள் மோப்பம் பிடித்துக்கொண்டு உள்ளே வருகின்றன.
அடுத்ததாக இவை விரும்புவது ஈரப்பதம். நம் வீட்டின் குளியலறை, சிங்க் அடியில் உள்ள பகுதி மற்றும் பேஸ்மென்ட் போன்ற இடங்களில் எப்போதும் ஈரம் இருந்துகொண்டே இருக்கும். இந்த ஈரப்பதம் இவற்றுக்கு ஒரு சொகுசு பங்களாபோல இருக்கும். மேலும் இவை இருட்டை அதிகம் விரும்புபவை. பகல் வெளிச்சம் பட்டாலே இவற்றுக்கு ஆகாது.
எனவே பகல் முழுவதும் இருட்டான இடுக்குகளில் ஒளிந்துகொண்டு, இரவானால் வேட்டையாடக் கிளம்பிவிடும். மழைக்காலங்களில் வெளியே அதிக குளிர் அல்லது அதிக வெப்பம் இருந்தால், தங்களைக் காத்துக்கொள்ள இவை வீட்டிற்குள் தஞ்சம் புகுகின்றன.
அறிகுறிகள்!
ஒன்று அல்லது இரண்டு பூச்சிகளைப் பார்த்தால் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் அடிக்கடி இவற்றைப் பார்க்க நேர்ந்தால் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இந்தப் பூச்சிகள் வளரும்போது தங்கள் தோலை உரித்துவிடும். பழைய கண்ணாடித் தாள்கள் போல உதிர்ந்து கிடக்கும் இவற்றின் தோல்கள் தரையில் தென்பட்டால், அவை குடும்பத்தோடு குடியேறிவிட்டன என்று அர்த்தம். அதேபோல, வீட்டின் மூலைகளில் இவை கூட்டமாகத் தென்பட்டால், அவை தங்குவதற்கு ஏற்ற இடத்தையும் உணவையும் கண்டுபிடித்துவிட்டன என்று புரிந்துகொள்ளலாம்.
விரட்டும் வழிமுறைகள்!
இவற்றை விரட்டத் தனியாக மருந்து அடிப்பதை விட, இவற்றின் உணவை அழிப்பதே சிறந்த வழியாகும். அதாவது உங்கள் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சி மற்றும் எறும்புத் தொல்லையை முதலில் சரிசெய்ய வேண்டும். உணவு இல்லையென்றால் இவை தானாகவே வீட்டை காலி செய்துவிடும்.
அடுத்ததாக வீட்டை ஈரம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். குளியலறையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, ஒழுகும் குழாய்களைச் சரிசெய்வது மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் கருவிகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். ஜன்னல் மற்றும் கதவு ஓரங்களில் இருக்கும் சிறிய விரிசல்கள் வழியாகத்தான் இவை உள்ளே நுழைகின்றன. அந்த ஓட்டைகளை சிமெண்ட், பசை கொண்டு அடைத்துவிடுவது இவற்றுக்கான வாசலை மூடிவிடும்.