தங்கத்தில் முதலீடு என்பது இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இருந்து வரும் பாரம்பரியம். டீமானிடைசேஷனில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, கணிசமானவர்கள் பணத்திற்கு பதிலாக தங்கத்தை வாங்கி வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது 2000 நோட்டு திரும்பப் பெறுவதால் தங்கத்தின் மீது கவனம் திரும்பியிருக்கிறது.
வங்கியில் பணத்தை சேமிப்பது என்பது சமீபகாலங்களில்தான் அதிகரித்திருக்கிறது. முன்னர் வீடுகளில் பணமாகவோ, தங்க நகைகளாக சேமித்து வைப்பதுதான் பழக்கமாக இருந்திருக்கிறது. பல வீடுகளில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவோ, ஐநூறு ரூபாய் நோட்டுகளாகவோ மூட்டை கட்டி வைக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது.
டீமானிடைசேஷன், டிஜிட்டல் பரிவார்த்தனைகளின் காரணமாக மக்கள் மெல்ல வங்கிகளை தேடி வந்தார்கள். பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதும், எடுப்பதும் எளிதாகிவிட்டதால் வீட்டில் கட்டுக்கட்டாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.
ஒருவேளை அவசரத் தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருந்தால் அதையும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக வைத்திருந்தார்கள். இட நெருக்கடியை சமாளிப்பதற்காகவும் எளிதாக கையாள்வதற்கு வசதியாகவும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருந்தது.
இந்நிலையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த பின்னர், நகைகளின் விற்பனை மெல்ல உயர்ந்திருப்பதாகவும் நகை வியாரிகள் சங்கம் தெரிவிக்கிறது. டீமானிடைசேஷன் நேரத்தில் சட்டென்று உயர்ந்ததாகவும, அந்தளவுக்கு திடீர் ஏற்றம் தற்போது இல்லையென்றாலும் மக்கள் தங்கத்தின் முதலீடு செய்வது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெரிய அளவில் பிரபலமடைந்திருப்பதால் 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்டதில் பெரிய அளவில் தாக்கம் இல்லையென்கிறார்கள். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகவே தங்க நகைகளை வாங்குகிறார்கள். 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே கேஷ் கொடுத்து நகைகளை வாங்குவதாக சொல்லப்படுகிறது.
தங்கம் வாங்குவதிலும் மத்திய அரசு கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையில் தங்க நகைகள் வாங்கினால் கே.ஒய்.சி சமர்ப்பித்தாகவேண்டும். 2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் தங்க நகைகள் வாங்கினால் பான் கார்டு எண்ணை குறிப்பிட்டாக வேண்டும். பத்து லட்சத்திற்கு அதிகமான பரிவர்த்தனைகள் என்றால் நிதியமைச்சகத்தின் கீழ் வரும் பைனான்ஷியல் இன்டெலிஜென்ஸ் துறைக்கும் விபரங்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. டீமானிடைசேஷன் நேரத்தில் ஒரு பவுன் நகை, 30 ஆயிரமாக இருந்தது. தற்போது அதுவே இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. ஆறே ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றமும் மக்களை யோசிக்க வைக்கிறது. ஆனாலும் சாமானியர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் குறையவே இல்லை.