
நிறைய பேருக்கு சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் பயமாகத் தான் இருக்கிறது. அதுவும் சித்திரை நட்சத்திரம் அன்று பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம், மனதிற்குள் பயம் பெருக்கெடுத்து ஓடும். இந்த காரணத்திற்காகத் தான் புதிதாக திருமணம் ஆன பெண்களை ஆடி மாதத்தில் அம்மா வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். இன்னும் இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஏன் இந்த பயம்? சற்று சிந்தித்து பாருங்கள், உலகத்தில் எத்தனையோ குழந்தைகள் சித்திரை மாதத்தில் பிறக்கவில்லையா? சித்திரை மாதம் பிறந்த காரணத்தால் எல்லா ஆண்குழந்தைகளின் அப்பாக்கள் இறந்து விட்டார்களா? இது முற்றிலும் தவறான நோக்கு.
உதாரணத்திற்கு ஒரு உண்மைக் கதையை கூறுகிறேன்:
ஒரே தெருவை சேர்ந்த இரண்டு பெண்களும் கர்ப்பவதியாக இருந்தார்கள்.
ஒருத்தி பெயர் ஹேமா. அவளுடன் கணவரும், கணவருடைய பாட்டியும் இருக்கிறார்கள். அவள் கணவர் அந்த தெருவிலேயே ஒரு கடை வைத்திருக்கிறார்.
இன்னொரு பெண்ணின் பெயர் மீனா. அவள், கணவர் மற்றும் மாமனார் மாமியாரோடு வசித்து வருகிறாள்.
இருவருக்கும் இதுதான் முதல் பிரசவம்.
மீனாவின் மாமியார் தினமும் மருமகளை கரித்துக் கொண்டே இருந்தாள். ஏற்கனவே சித்திரை மாசம் நடக்கிறது இதுல எங்கயாவது சித்திரை நட்சத்திரத்தில் பிள்ளை பிறந்துட்டா, போச்சு அவ்வளவுதான், எனக்கு இருக்கிற ஒரே மகனை பறி கொடுக்க வேண்டியது தான் என்று புலம்பி கொண்டிருந்தாள். என்னிக்கு குழந்தை பிறக்கவே கூடாது என்று நினைத்திருந்தாளோ, சரியா சித்திரை நட்சத்திரம் அன்னிக்கு காலங்காத்தால மருமகளுக்கு வலி ஆரம்பித்து விட்டது.
ஐயோ..மகமாயி..ஆத்தா..இது என்ன சோதனை ? இன்னிக்கு மட்டும் பையன் பிறந்துட்டா...நினைச்சாலே கதி கலங்குது என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள். பிறகு மீனாவின் கணவன் அம்மாவின் வாயை அடக்கி விட்டு மனைவியையும் அம்மாவையும் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றான். அதே நேரத்தில் கடைக்காரனின் மனைவிக்கும் வலி வந்து அவளும் வந்து இறங்கினாள்.
டாக்டர் மீனாவிற்கு உடனடியாக அறுவை சிசிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். ஆனால் அவளின் மாமியாரோ டாக்டரிடம் அரைமணி நேரமாக தகராறு செய்து கொண்டிருந்தாள். இன்னிக்கு பண்ணாதீங்க, எதாவது மருந்து கொடுத்து வலியை நிறுத்தி விட்டு நாளைக்கு ஆப்ரேஷன் செய்யுங்கள் என்று ஏடாகுடமாக பேசினாள். பிறகு டாக்டர் கண்டபடி கத்தவே மீனாவின் கணவன் ஆப்ரேஷன் பார்மில் சைன் போட்டான். ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. டாக்டர் சொன்னவுடனேயே மீனாவின் மாமியாரின் முகம் சுருங்கி போய் விட்டது. அந்த குழந்தையை தூக்க கூட இல்லை. போறாகுறைககு மகனை கண்டதெல்லாம் சொல்லி பயத்தை உண்டு பண்ணி விட்டாள். 'டேய், நீ இன்னும் ஆறு மாசத்துல கண்டிப்பா போய்டுவடா, சித்திரை மாசம், சித்திரை நட்சத்திரத்தில் பையன் பிறந்தா, அப்பா கண்டிப்பா போய்டுவான் டா, என்ன பண்ணுவேன் நான்?' என்று அழுது தீர்த்து விட்டாள். ஊரிலிருந்த வந்த சம்பந்தியையும் மனம் நோகும்படி பேசி, அவர்கள் அழுது கொண்டே வந்த வேகத்திலியே திரும்பி விட்டார்கள்.
கடைக்காரன் மனைவிக்கும் ஆண்குழந்தை தான் பிறந்தது. அவர்கள் வீட்டிலோ உறவினர்கள் உட்பட எல்லோருக்கும் அளவிலா சந்தோஷம்.
ஒரு வாரம் கழித்து மனமில்லாமல் மீனாவையும் குழந்தையையும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்தார்கள். மீனா வீட்டில் யாருமே அந்த குழந்தையை தூக்கவும் இல்லை, அவள் குளிக்கச் சென்றால் கூட பார்த்து கொள்ளவுமில்லை. அவள் கணவனோ அந்த குழந்தையை எமனாக கருதி விட்டான். தாய் அவன் காதில் ஓத ஓத இவனுக்கு தூக்கமே இல்லாமல் போய் விட்டது. சாப்பிடுவது கிடையாது. மனைவியிடம் எப்போதும் சிடு சிடுவென விழுந்தான். அவள் எத்தனை முறை கெஞ்சியும் குழந்தையை ஏறெடுத்து பார்க்கவில்லை. அவனின் அம்மாவோ அவனுக்கு இறப்பதற்கான தேதியையே குறித்து விட்டாள். இவனுக்கு பயம் அதிகமாக பதட்டமாகி பைத்தியம் போல் நடந்து கொண்டான். இல்லாத ஒன்றை அவன் தாய் தன் கற்பனையால் நிஜமாக்கி கொண்டிருந்தாள்.
இவனின் போக்கை பார்த்து கொண்டிருந்த கடைக்காரன் ஒருநாள் இவனை பார்த்து விசாரித்தான், 'இப்படி மெலிந்து போயிட்டீங்களே, ஏன்? என்ன ஆச்சு? வீட்ல யாருக்காவது உடம்பு சரியில்லையா?' என்று கேட்டான்.
அதற்கு இவன், 'அதெல்லாம் ஒண்ணுமில்லை, எல்லாம் என் குழந்தையால வந்த விதி, என் தலையெழுத்து, எமனா என் பையன் பிறந்துருக்கான், சித்திரை மாசம் சித்திரை நட்சத்திரம், அப்பாக்கு ஆகாது' என்று புலம்பினான்.
கடைக்காரன் சிரித்து கொண்டே, 'ஐயா, நீங்கள் என்னை விட அதிகம் படித்தவர். கொஞ்சம் கூட சிந்திக்காமல் முட்டாள் மாதிரி உங்க உடம்பை நீங்களே கெடுத்து கொண்டிருக்கிறீர்களே...' என்றான்.
ஆனால் 'உனக்கும் அதே கதி தான் ஆகப் போகிறது' என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
கடைக்காரர் எத்தனை முறை எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்படியே காலம் சென்றது. மனதிற்குள் இருந்த பயம் நாளுக்கு நாள் அதிகமாகி சாப்பிடாமலும் உறங்காமலும் இருந்தான். உடலோ காச நோய் வந்தவன் போல் ஆகி விட்டது. தீடிரென ஒரு நாள் மாரடைப்பால் இறந்து விட்டான். அந்த பெண்ணோ ஆதரவில்லாமல் கைக் குழந்தையை வைத்து கொண்டு தவித்தாள். அவளின் பெற்றோர் செய்தி கேட்டு ஓடி வந்தார்கள். மீனாவின் மாமியார் அவர்களை ரோட்டிலியே நிற்க வைத்து விட்டு மீனாவையும் குழந்தையையும் பெட்டி படுக்கையோடு துரத்தி விட்டாள்.
மீனாவின் கணவரின் மரணத்திற்கு கடவுளோ இல்லை அந்த குழந்தையோ கிடையாது. முழுக்க முழுக்க அந்த தாய் தான் காரணம். நடந்து விடும் நடந்து விடும் என்று சொல்லி அதிக பயத்தை உணடாக்கி விட்டாள். பயத்தின் காரணமாக அவன் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டு இறுதியில் உயிரையும் இழந்து விட்டான்.
ஹேமாவின் கணவன் நன்றாகத் தானே இருக்கிறார்.
வாஸ்தவத்தில் சித்திரை மாதம் கொளுத்தும் வெயிலில் குழந்தை பிறந்தால் கடும் வெயிலின் காரணமாக தாய்க்கும் சேய்க்கும் பல கடுமையான உடல் உபாதைகள் ஏற்படலாம் . இது தான் உண்மை. ஆகவே இதை கருத்தில் கொண்டு அப்பாவிற்கு ஆகாது அம்மாவிற்கு ஆகாது என்றெல்லாம் கற்பனையாக நினைக்கும் எண்ணத்தை விட்டு விடுங்கள்.
ஒரு பெண்ணிற்கு கர்ப்பம் தரிப்பது கடவுள் தந்த வரப்பிரசாதம், குழந்தை கடவுளின் பரிசு. ஆகவே இனிமேலாவது இது போன்ற எண்ணங்களை மனதிலிருந்து முழுவதுமாக நீக்கினால் நம் எல்லோருக்குமே நல்லது.