சோப்புக்கு ஜோடி சேர்ந்த உப்பு... கரெக்டா யூஸ் பண்ணா கறையெல்லாம் காலி!

Salt Cleaning Tips
Salt Cleaning Tips
Published on

தினமும் சமையலறையில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய போர், சாப்பிட்ட பிறகு பாத்திரங்களைக் கழுவுவதுதான். சமைப்பது கூட ஈஸி, ஆனால் இந்த பாத்திரங்களை தேய்ப்பதுதான் பெரிய தலைவலி என்று புலம்பாத இல்லத்தரசிகளே இல்லை எனலாம். குறிப்பாக எண்ணெய் பிசுக்கு, தீய்ந்துபோன அடிப்பிடித்த பாத்திரங்கள், முட்டை வாடை வீசும் தட்டுகள், இவற்றை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். 

விதம் விதமான லிக்விட் சோப்புகளை மாற்றினாலும், சில பிடிவாதமான கறைகள் போவதே இல்லை. ஆனால், நம் கைக்கு எட்டும் தூரத்தில், அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சாதாரண "உப்பு" இதற்கு ஒரு சூப்பர் தீர்வாகும். வாருங்கள், உப்பை வைத்து எப்படி பாத்திரங்களை பளபளப்பாக்கலாம் என்று பார்ப்போம்.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் டிஷ் வாஷ் லிக்விட் அல்லது சோப்பு, எண்ணெயை நீக்கும் தன்மை கொண்டதுதான். ஆனால், பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் காய்ந்த உணவுத் துகள்களை அதனால் முழுமையாக நீக்க முடிவதில்லை. இங்குதான் உப்பு ஒரு "ஸ்கிரப்பர்" போல செயல்படுகிறது.

உப்பின் துகள்கள் சொரசொரப்பாக இருப்பதால், அவை பாத்திரத்தில் படிந்திருக்கும் அழுக்கைச் சுரண்டி எடுக்க உதவுகின்றன. அதேசமயம், இது ஸ்டீல் ஸ்க்ரப்பரைப் போல அதிக கடினத்தன்மை கொண்டதல்ல என்பதால், பாத்திரங்களில் கீறல் விழும் வாய்ப்பும் குறைவு. இது ஒரு இயற்கையான உராய்வுப் பொருள் போல செயல்பட்டு, சோப்பின் சக்தியை இரட்டிப்பாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
நூறு ஆண்டு வாழ ஆசையா? இதைச் செய்தால் போதும்...
Salt Cleaning Tips

பயன்படுத்தும் முறை!

இதைச் செய்வதற்கு பெரிய மெனக்கெடல் எதுவும் தேவையில்லை. வழக்கமாக பாத்திரம் கழுவும்போது, சோப்பு தொட்ட ஸ்க்ரப்பரில் அல்லது பாத்திரத்தின் மீது அரை டீஸ்பூன் உப்பைத் தூவிவிட்டுத் தேய்த்தாலே போதும். குறிப்பாக, பொரியல் செய்த பாத்திரம் அல்லது காய்ந்து போன சாம்பார் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய இது கைமேல் பலன் தரும்.

அடிப்பிடித்த பாத்திரங்களுக்கு, பாத்திரம் லேசாக சூடாக இருக்கும்போதே, அதில் இரண்டு ஸ்பூன் உப்பைத் தூவி, சிறிது டிஷ் வாஷ் லிக்விட் மற்றும் சுடுதண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடம் ஊற விடுங்கள். அந்த உப்புக்கரைசல், தீய்ந்து போன உணவை மிருதுவாக்கிவிடும். பிறகு லேசாகத் தேய்த்தாலே அழுக்கு மொத்தமும் வந்துவிடும். மணிக்கணக்கில் ஊறவைக்கவோ, பலமாகத் தேய்க்கவோ வேண்டிய அவசியமில்லை.

பாத்திரம் மட்டுமல்ல!

உப்பின் பயன்பாடு பாத்திரங்களோடு முடிந்து விடுவதில்லை. நாம் காய்கறி வெட்ட பயன்படுத்தும் மரக்கட்டைகள் சில நாட்களில் நிறம் மாறி, ஒருவித வாடை வீசத்தொடங்கும். அதன் மீது உப்பைத் தூவி, எலுமிச்சை அல்லது சோப்பு வைத்துத் தேய்த்தால், கறையும் போகும், கிருமிகளும் அழியும். அதேபோல, சிங்க் குழாய்களில் எண்ணெய் படிந்து நீர் இறங்காமல் இருந்தால், உப்பும் சுடுதண்ணீரும் ஊற்றினால் அடைப்பு நீங்கிவிடும். கண்ணாடி டம்ளர்களில் படிந்திருக்கும் வெள்ளைத் திட்டுக்களை நீக்கவும் உப்பு சிறந்த தீர்வு.

இதையும் படியுங்கள்:
மௌனமாகக் கொல்லும் சிறுநீரக நோய்: உங்கள் உடல் சொல்லும் ரகசிய எச்சரிக்கை!
Salt Cleaning Tips

எச்சரிக்கை!

எல்லா பாத்திரங்களுக்கும் இந்த முறையைப் பயன்படுத்த முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். Non-stick பாத்திரங்களில் உப்பை போட்டுத் தேய்த்தால், அதன் கோட்டிங் உரிந்துவிடும் அபாயம் உள்ளது. அதேபோல, மிகவும் மெல்லிய கண்ணாடிப் பாத்திரங்கள் அல்லது வெள்ளிப் பாத்திரங்களில் உப்பைப் பயன்படுத்தும்போது கீறல் விழ வாய்ப்புள்ளது. எனவே, இரும்பு கடாய், ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் பீங்கான் தட்டுகளுக்கு மட்டுமே இந்த முறையைப் பயன்படுத்துவது சிறந்தது.

சமையலுக்கு சுவை சேர்க்கும் உப்பு, இனி உங்கள் சமையலறையின் சுத்தத்திற்கும் கைகொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com