மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன. பெரும்பாலான நாப்கின்கள் பிளாஸ்டிக்கை அடிப்படையாக வைத்துப் பல வேதியியல் பொருட்களுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னைக்கு ஆர்கானிக் காட்டனால் செய்யப்பட்ட துணி நாப்கின்களே சரியான தீர்வு. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் பயன்படுத்திய துணி நாப்கின்கள் தற்கால நடைமுறைக்கேற்ப இப்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலை காப்பது மட்டுமன்றி செலவையும் குறைக்கின்றன.
பொதுவாக நாப்கின்களில் SAP (Super Absorbent Polymer) எனும் நச்சுப்பொருள் அதிக ஈரத்தை உறிஞ்சுவதற்காக சேர்க்கப்படுகின்றது. இந்த ரசாயனம் Toxic Shock Syndrome எனும் அபாயகரமான நோய்க்குக் காரணமாகிறது. பேடில் இருக்கும் வேதிப்பொருட்கள் அலர்ஜி, பூஞ்சைத் தொற்று, பலவீனமான கரு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் காரணமாகின்றன. துணி நாப்கின்கள் மேற்கூறிய நோய்களைத் தடுத்து மாதவிடாய் காலத்தில் சுகம் அளிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் ஒரு பெண் நாப்கின்களுக்காக ஏறத்தாழ ` 100 செலவழிக்கிறாள். ` 1000 - ` 2000 வரை செலவழித்து வாங்கும் கிளாத் பேட் 2 - 3 ஆண்டுகள் உழைக்கும். இதனால் சுமார் ` 1500 சேமிக்கப்படுகிறது.
சானிடரி பேட் மக்குவதற்கு 200 – 850 ஆண்டுகள் ஆகின்றன. 12.3 பில்லியன் டன் சானிடரி நாப்கின்கள் நிலப்பரப்பில் ஒவ்வொரு ஆண்டும் அடைக்கப் படுகின்றன. இவற்றை எரித்தால் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் மற்றும் Corbon-di-Oxide2, SO2, CO போன்றவை காற்றில் வெளியிடப்படுகின்றன. ஆனால், துணி நாப்கின்கள், உபயோகத்திற்குப் பின்பு சுலபமாக மக்கிவிடும். எனவே, தன்னலம் மற்றும் நாட்டின் நலத்தையும் கருதி துணி நாப்கின்களைப் பயன்படுத்துவோம்.