பெண்களுக்கு மருந்தாகும் சீரகம்!

பெண்களுக்கு மருந்தாகும் சீரகம்!

நான்கு தம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, 'சீரக குடிநீர்'  தயார் செய்துகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க, எலுமிச்சைப் பழச்சாற்றுடன் இந்த சீரக குடிநீரை சேர்த்துக் குடிக்கலாம். இதனால் வாந்தி படிப்படியாகக் குறையும்.

கர்ப்பிணிகள் தினமும் அரை டீஸ்பூன் சீரகத்தைப் பொடியாக்கி பாலிலோ அல்லது தேனிலோ கலந்து குடித்தால் மசக்கை வாந்தியோ, குமட்டலோ இருக்காது. பிள்ளைப் பேறும் வலி நிறைந்ததாக இருக்காது. பிரசவித்த பிறகு குழந்தைக்கு தாய்ப்பாலும் போதுமான அளவு சுரக்கும். பொதுவாக, பிரசவித்தப் பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் வாயுக் கோளாறு பிரச்னைக் கோளாறும் இருக்காது.

சீரகத்துடன் கொத்தமல்லி, சிறிது இஞ்சி சேர்த்து எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, நீரில் கொதிக்கவைத்து வடித்து வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்தால் சூடான சீரக டீ ரெடி! இதைப் பருகினால் பசியின்மை, வயிற்றுப் பொருமல், நாக்கில் சுவை இன்மை, நெஞ்செரிச்சல் போன்ற வயிற்றுப் பிரச்னைகள் தீரும். மசக்கை காலத்துக்கு சுகமான டீ இது.

மாதவிலக்கின்போது ஏற்படும் வலியை போக்கும் மாமருந்து சீரகம். ஒரு டீஸ்பூன் சீரகத்தை அரை தம்ளர் தண்ணீரில் காய்ச்ச வேண்டும். தண்ணீர் பாதியாகும் வரை காய்ச்சி அந்தத் தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்க்க வேண்டும். மாதவிலக்கு வரும் முன்பாக இதை தினமும் காலை, மாலை என இருவேளை உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனால் மாதவிலக்கின்போது வலி இருக்காது.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சை சாற்றில் போட்டு ஒரு நாள் முழுக்க ஊற வைக்கவும். இதை தினம் இருவேளை அரை டீஸ்பூன் என ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பித்தம் கட்டுக்குள் அடங்கும். வாந்தி, குமட்டல் நேரத்தில் இதை வாயில் போட்டு மென்றால் குமட்டால் உடனே நிற்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com