
லேசா மழை பெய்தால் போதும், வெளியில சில்லுனு இருந்தாலும், வீட்டுக்குள்ள புதுப் புது விருந்தாளிகள் வந்துடுவாங்க. ஆமாங்க, பூச்சிகளைப் பத்திதான் சொல்றேன். நம்ம கண்ணுக்குத் தெரிஞ்சும் தெரியாமலும் நம்ம வீட்ல ஏகப்பட்ட பூச்சிகள் பதுங்கியிருக்கும். ஈ, எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லி, சிலந்தி, ஏன் பூரான் கூட சில சமயம் கண்ணுல படும்.
இதெல்லாம் நம்மகிட்ட வராம இருந்துச்சுனா பரவாயில்லை. ஆனா, சில சமயம் இதுங்க தொல்லை ரொம்ப அதிகமாகி, நமக்கு பல பிரச்சனைகளைக் கொடுக்கும். இந்தப் பதிவுல, நம்ம வீட்ல இருக்கிற சில பூச்சிகள் என்னென்ன, அதனால என்ன ஆபத்துங்கறத தெரிஞ்சுக்கலாம் வாங்க.
1. சிலந்திகள்: சிலந்திங்க பெரும்பாலும் வீட்டு மூலைகள்ல, ஜன்னல் கிட்ட, சாமான்களுக்குப் பின்னாடி ஒளிஞ்சு இருக்கும். இதுங்க மனுஷங்ககிட்ட வராது. ஈ, கொசு, அந்துப்பூச்சி மாதிரி மத்த பூச்சிகளை சாப்பிடுறதுனால, இதுங்க நமக்கு ஒரு வகையில நல்லதுதான் செய்யுது. ஆனா, தவறுதலா நம்மள கடிச்சுட்டா, வலி தாங்க முடியாது. அதனால, வீட்ல சிலந்திங்க அதிகமா பெருகாம பாத்துக்கிறது நல்லது.
2. கரப்பான் பூச்சி: இந்த பூச்சிங்க நம்ம எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமான ஒண்ணு. கரப்பான் பூச்சிங்க பாக்டீரியாக்களோட இருப்பிடம்னே சொல்லலாம். முக்கியமா, சமையலறை, வடிகால் பக்கத்துல, குப்பைத் தொட்டி கிட்டன்னு ஈரமான, இருட்டான இடத்துலதான் அதிகமா இருக்கும். இதுங்க பல நோய்களுக்கு காரணமா இருக்குறதோட, ஆஸ்துமா பிரச்சனையை இன்னும் அதிகமாக்கும்னு சொல்றாங்க.
3. பூரான்: பூரான் பொதுவா மனுஷங்ககிட்ட வராம ஒதுங்கிப் போகத்தான் பார்க்கும். ஈரமான, அமைதியான இடத்துலதான் இதுங்க வாழும். உங்க வீட்டுக்குள்ள பூரான் வந்துச்சுன்னா, உங்க வீட்ல வேற பூச்சிகள் அதிகமா இருக்குன்னு அர்த்தமாம். ஏன்னா, பூரான் அந்த பூச்சிகளை தேடிதான் வீட்டுக்குள்ள வரும்.
4. எறும்புகள்: கோடைக்காலத்துல சூடு அதிகமா இருந்தா அல்லது மழை பெஞ்சதுக்கு அப்புறம் எறும்புங்க படையெடுக்கும். ஏன்னா, அதிக வெப்பத்தையும், ஈரப்பதத்தையும் இதுங்களால தாங்க முடியாது. சில சின்ன எறும்புங்க பிரச்சனை இல்லைனாலும், சில பெரிய எறும்புங்க வீட்டு மரச் சாமான்கள்ல ஓட்டை போட்டு சேதப்படுத்தும்.
5. குளவிகள், தேனீக்கள்: வீட்டு மாடியில, சுவர் இடுக்குல, ரூம் மூலைகள்ல இதுங்க கூடு கட்டி வாழும். இதுங்க குழுக்களா வாழ்றதுனால, கூட்டை ரொம்ப வேகமா கட்டிடும். நாம போற வழியில குறுக்க வராத வரைக்கும் இதுங்க நம்மள தொந்தரவு பண்ணாது. ஆனா, வீட்டுக்கு பக்கத்துல கூடு இருந்தா, அது ஆபத்துதான். ஒருவேளை தேனீக்கள் நம்மள கொட்டிட்டா, நிலைமை ரொம்ப சீரியஸா ஆயிடும்.
உங்க வீட்ல இந்த மாதிரி பூச்சிகளோட தொல்லை அதிகமா இருந்தா, உடனே அதை விரட்டணும். உங்க வீட்டை சுத்தமா வச்சுக்கிறது, குப்பைகளை அப்பப்ப வெளியேத்துறது, ஈரம் இல்லாம பாத்துக்கிறதுன்னு சில விஷயங்களை செஞ்சாலே பூச்சிகளோட தொல்லையில இருந்து தப்பிக்கலாம். உங்க ஆரோக்கியத்தை நீங்கதான் பாத்துக்கணும்.