உணவில் செயற்கை நிறங்களைச் சேர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள்!

Dangers of Adding Artificial Colors to Food
Dangers of Adding Artificial Colors to Food
Published on

நீங்கள் நினைப்பதுபோல் அனைத்து வகையான செயற்கை உணவு நிறங்களும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல. அவை நமது உணவில் எந்த அளவுக்குச் சேர்க்கப்பட வேண்டும் என வரம்புகள் இருக்கிறதோ அதுவரை அவற்றால் தீய விளைவுகள் எதுவும் இல்லை. மேலும், இவற்றால் மிகப்பெரிய தீங்குகள் உடலுக்கு ஏற்படாது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அவர்கள் யாரென்றால், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தான். இதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கைகள் உள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர். தற்போது நாம் உண்ணும் அனைத்து விதமான உணவிலும் இத்தகைய செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. அத்துடன் செயற்கை சுவையூட்டிகள், மனமூட்டிகள், கொழுப்புத்தன்மை மற்றும் அமிலத்தன்மைகள் கூட உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் நிச்சயம் உடலில் ஏதோ ஒரு வகையில் இருக்கும். அதனாலேயே இவற்றால் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகளை அறிவியல் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன.

இதுபோன்ற செயற்கை நிறம் அதிகம் கலக்கப்பட்ட உணவுகளை தொடர்ச்சியாக உண்பதால், உடல் உபாதைகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல அமைப்புகள் பல நூறு ஆய்வுகளைச் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ரெடிமேட் உணவுகளில் செயற்கையாகச் சேர்க்கப்படும் நிறங்களின் அளவு மற்றும் அவற்றின் தன்மை போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சுமார் 96 சதவீத மிட்டாய்கள், செயற்கை நிறம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 94 சதவீதம் பழ வாசனை மற்றும் பழச் சுவையுடன் இருக்கும் உணவுகளும், 89 சதவீதம் குளிர்பானப் பொடிகளும் இவற்றால் தயாரிக்கப்படுகின்றன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறக் கலவையிலும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் ஏற்படுவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நிர்ணயம் செய்திருக்கும் தினசரி அனுமதிக்கப்பட்ட அளவு வெறும் 10 கிராம் மட்டுமே. நாம் ஒரு நாளைக்கு பத்து கிராம் அளவில் செயற்கை நிறத்தை உட்கொள்ளலாம். ஆனால், 2014ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஒரு நாளைக்கு 52 கிராம் அளவுக்கு சிவப்பு நிறம் சேர்க்கப்பட்ட உணவு நமது உடலுக்குள் செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது நமது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, மூக்கில் நீர் ஒழுகுதல், ஒற்றைத் தலைவலி, தோல் எரிச்சல், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல, நீல நிறம் ஒரு நாளைக்கு 12 கிராம் மட்டுமே நாம் உட்கொள்ள வேண்டும். இந்த நிறத்தை அதிகமாக உட்கொள்வதால் நரம்பு பாதிப்புகள், தோல் ஒவ்வாமை, புற்றுநோய் கூட இதனால் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர். இறுதியாக, மஞ்சள் நிற இனிப்புகள், மஞ்சள் தூள், பருப்புகள், பழச்சாறுகள், சிப்ஸ் போன்றவற்றில் மஞ்சள் நிறமி கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதை நிர்ணயித்த வரம்பை விட அதிகப்படியாக உட்கொண்டால், தோல் அரிப்பு, தொண்டை வலி, கண் எரிச்சல், மூச்சிரைப்பு போன்ற உபாதைகள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com