

மழைக்காலம் வந்து விட்டால் , வீட்டின் வாசலில் மற்றும் ஈரப்பதமிக்க பகுதிகளில் , ஒரு சில சிறியவகை புழுக்கள் வந்து விடும்.இவற்றைப் பார்ப்பதற்கு மிகவும் அறுவருப்பாகவும் இருக்கும் , மேலும் இதனால் ஏற்படும் அபாயம் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தட்டைப் புழுக்கள் (Planarian):
பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழும் தட்டைப் புழுக்கள் மழைக்காலத்தில் அதிகமாக தென்படும். இது ஈரல் தட்டையன், நாடாப் புழு போன்ற ஒட்டுண்ணிப் புழுக்களிலிருந்து மாறுபட்டது. இதன் உடல் முதுகு வயிற்றுப்புறமாகத் தட்டையாகவும், மற்ற இருபக்கமும் சமமான உடலமைப்பைக் கொண்டு இருக்கும். இந்த புழுவின் சிறப்பம்சம் எனனவென்றால் அதை எப்படி வெட்டினாலும் மீண்டும் உயிர் பிழைத்து வந்து விடும் என்பது தான்.
ஒரு தட்டைப்புழுவை இரண்டாக வெட்டினால், வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டும் மீண்டும் வளர்ந்து இரண்டு புதிய முழுமையான உயிரினங்களாக மாறும் திறன் கொண்டது. தலை இல்லாவிட்டாலும் அதன் உடலில் உள்ள சில மரபணுப் பொருள்கள் மூலம் 14 நாட்களுக்குள் மீண்டும் தலையை வளர்க்கும் ஆற்றலை பெற்றுள்ளது. இதில் நியுரோ டாக்சின் என்ற நஞ்சு உள்ளது , இது சிறிய வகை உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் , ஆயினும் மனிதர்களுக்கு எரிச்சல் , அரிப்பு அளவில் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சுத்தித்தலை புழு (Hammer head):
சுத்தியல் போன்ற வடிவத்தில் இதன் தலை இருப்பதால் இப்படி ஒரு பெயர் பெற்றுள்ளது. மழைக் காலத்தில் இந்த புழுக்கள் வீட்டு வாசல் மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களில், சில நேரங்களில் தென்படும். இதுவும் தட்டைப் புழு போன்று எத்தனை முறை வெட்டினாலும் மீண்டும் உயிர்பெற்று, தனி உயிரினமாக உருப்பெரும் தன்மை கொண்டது. இந்த புழுவிலும் நச்சுத் தன்மை உள்ளது , மனிதர்களுக்கு தோலில் அழற்சியை ஏற்படுத்தும் இது சிறிய உயிர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
நாடாப்புழு (Ribbon worms):
பொதுவாக இது நிலத்திலும் கடலிலும் காணப்படும் ஒரு புழு வகை. பார்ப்பதற்கு மெல்லிய, நீளமான நாடா போன்ற உடலைக் கொண்டிருப்பதால் இந்த பெயர் வந்தது. இந்த வகைப் புழுக்கள் ஈரப்பதமிக்க எல்லா இடங்களிலும் வசிக்கின்றன .மேற்கூறிய மற்ற புழுக்களை போன்று இதன் உடலை துண்டித்தால் , தனித்தனியாக உயிர் பெறும் தன்மை இதற்கு இல்லை. இதன் விஷம் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது இது.
மூன்று புழுக்களின் விஷத் தன்மை:
தட்டைப்புழு, சுத்தித்தலை புழு மற்றும் நாடாப்புழு ஆகிய உயிரினங்கள் உடல் அமைப்பில் வேறுபட்டாலும், வேட்டையாடுவதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் சக்திவாய்ந்த உயிரியல் நச்சுகளைப் (Biotoxins) பயன்படுத்துகின்றன. இந்த நச்சுகள் மனிதர்களுக்கு உடனடி ஆபத்தை விளைவிக்காவிட்டாலும், அவற்றின் செயல்பாட்டைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். இவை நரம்பு மண்டலத்தை பாதிக்கும் டெட்ரோடோடாக்சின் (TTX) என்ற சக்திவாய்ந்த நச்சுகளை வெளியிடுகிறது.
சில சமயம் பல்வேறு ஆல்கலாய்டு அடிப்படையிலான நச்சுகளையும் பயன்படுத்துகின்றன.இந்த விஷம் புழுக்களால் நேரடியாக உற்பத்தியாகமல் , மாறாக புழுக்களின் உடலில் வாழும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நஞ்சு, பாதிக்கப்பட்ட உயிரினத்தின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி நரம்பியல் தகவல்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துகிறது.
அழிக்கும் முறை:
இந்த புழுக்களை அழிக்க உப்பு , பிளீச்சிங் பவுடர் , பெட்ரோல் , டீசல் , வினிகர் ஆகியற்றை பயன்படுத்தலாம்.இந்த புழுக்களை பாதுகாப்பாக வெளியே எடுத்து வெயிலில் போட்டால் இறந்து விடும். எப்போதும் இவற்றை வெறும் கைகளால் தொடக் கூடாது. ஈரமான சுவர்களின் ஓரங்களில் கல் உப்பை கொட்டி வைத்தால் இது போன்ற புழுக்கள் மேலே ஏற முடியாமல் , அதன் காரத் தன்மையில் அழிந்து விடும்.