மனிதனின் முகம், அகம் காட்டும் கண்ணாடி என்று சொல்வார்கள். மனதின் எண்ணங்களும், உணர்ச்சிகளும் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்து விடும். பொதுவாக, கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள் என்று விவரிக்கப்பட்டாலும் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் உதடுகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உள்ளத்து உணர்ச்சிகளைப் பற்றி உதடுகள் பேசும் மொழி பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பல்வேறு உணர்ச்சிகளை உதடுகள் வெளிப்படுத்தும் விதம்: உதடுகள் பேசுவதற்கும், உச்சரிப்பு மற்றும் தகவல் தொடர்புகளில் மட்டுமல்லாது உள்ளத்து உணர்ச்சிகளான மகிழ்ச்சி, சோகம், விரக்தி, அன்பு போன்றவற்றை அழகாக வெளிப்படுத்தும்.
மகிழ்ச்சி மற்றும் உற்சாகம்: பொதுவாக ஒருவர் சிரிக்கும்போது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது, உதடுகளை அழகாக விரித்து கண்களை சுருக்கி புன்னகை செய்கிறோம். இது எதிரில் நிற்பவர்களையும் தொற்றி அவரையும் புன்னகைக்க வைக்கிறது. அவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. கூட்டத்தில் ஒருவரிடம் பேச ஆரம்பிக்கும் முன்பே புன்னகை செய்யும்போது அந்த உற்சாகம் அவரிடமும் பரவி, உடனே அருகில் இருப்பவர்களையும் சென்றடைந்து விடுகிறது.
சோகம் மற்றும் ஏமாற்றம்: மகிழ்ச்சிக்கு நேர்மாறாக ஒரு மனிதர் சோகமாக உணரும்போது முகத்தை சுளிப்பார். துக்கம், ஏமாற்றம் அல்லது விரக்தி போன்ற உணர்வுகளுடன் தொடர்புடையது சோகம். ஒருவர் கண்ணீர் சிந்தும் போதும் மனம் கவலையில் இருக்கும்போதும் அவருடைய உதடுகள் நடுங்கலாம். இது ஆழ்ந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் அறிகுறியாகும். உதடுகளை கீழ்நோக்கிப் பிதுக்குவது போல செய்வது பிறரிடம் பச்சாதாபத்தை தூண்டுகிறது.
கோபம்: பொதுவாக ஒருவர் கோபமாக இருக்கும்போது உதடுகளை இறுக்கமாக மூடிக்கொள்ளலாம். பேச்சை நிறுத்திவிட்டு உணர்ச்சிக் கொதிப்பை அடக்க முயற்சி செய்யலாம். அவரது மனதின் உணர்ச்சிக் கொந்தளிப்பு உதடுகள் வழியாக வெளிப்படுவதைக் கண்கூடாகக் காணலாம். கோபத்தில் இருக்கும் ஒரு மனிதரின் உதடுகள் இறுக்கிப் பூட்டப்பட்டது போல மூடியிருக்கும்.
ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி: எதிர்பாராத விதமாக ஆச்சரியமான அல்லது அதிர்ச்சியான செய்திகளைக் கேட்கும்போது ஒரு நபர் தன்னை அறியாமலேயே உதடுகளைத் திறந்து கவனிப்பார். தன்னை மறந்த நிலையில் அதிர்ச்சியின் வெளிப்பாடாக உதடுகள் திறந்து கொள்ளும்.
வெறுப்பு மற்றும் அவமதிப்பு: ஒருவர் வெறுப்பான மனநிலையில் இருக்கும்போது அவர் உதடுகளை சுளித்துக் கொள்வார் . பிறரை அவமரியாதை செய்ய நினைக்கும்போது ஒரு சிறிய புன்னகை, அதாவது உதட்டின் ஒரு மூலையில் மட்டுமே புன்னகைப்பது போன்ற பாவனையை ஏற்படுத்தலாம். இது ஒரு இழிவான புன்னகை. பிறரை இழிவுபடுத்துவது போன்று அமைந்திருக்கும்.
கேலி, கிண்டல்: ஒருவரை கிண்டல் அல்லது கேலி செய்ய நினைக்கும்போது உதடுகள் ஒரு புறமாக மட்டும் புன்னகை செய்வது போன்ற நிலையில் இருக்கும். அது உண்மையான அல்லது உள்ளார்ந்த புன்னகை அல்ல என்று வெளிப்படையாகவே தெரியும்.
எனவே, வாயைத் திறந்து பேசாமலேயே, ஒருவர் தனது உள்ளத்தில் என்ன மாதிரியான எண்ணங்களை உணர்கிறார் என்பதை உதடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.