பெண் குழந்தைகள் குடும்ப மகிழ்ச்சியின் ஆதாரமாகத் திகழ்வது ஏன் தெரியுமா?

அக்டோபர் 11, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகள் குடும்ப மகிழ்ச்சியின் ஆதாரமாகத் திகழ்வது ஏன் தெரியுமா?
Published on

ரு குடும்பத்தில் குழந்தையின் பிறப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. அதிலும் பெண் குழந்தையின் வருகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் பெண் குழந்தைகள் கருணை, இரக்கம், மகிழ்ச்சி, அன்பு போன்றவற்றின் அடையாளங்கள்.

சிரிப்பின் சக்தி: பெண் குழந்தை தனது மயக்கும் சிரிப்பால் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் இதயங்களையும் வீட்டையும் சேர்த்தே மகிழ்ச்சியால் நிரப்புகிறது. அதனுடைய அப்பாவித்தனமும் குறும்புத்தனமும் கலந்த செயல்கள் ரசிக்க வைப்பதாக இருக்கும். அந்தக் குழந்தையின் சிரிப்பு வீட்டில் எதிரொலித்து மந்தமான நாட்களைக் கூட பிரகாசமான, இனிமையான நாட்களாக மாற்றும் சக்தி படைத்தது.

உறவு மற்றும் உணர்ச்சிப் பிணைப்பு: பொதுவாக ஆண்கள் தங்கள் மகள்களிடம் தங்கள் அம்மாவின் சாயலைக் காண்பார்கள். அவர்கள் வலுவான உணர்ச்சித் தொடர்புகளை குடும்பத்தில் ஏற்படுத்துகிறார்கள். அந்தக் குழந்தை வளரும்போது, தாயின் குணங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். உடன் பிறந்தாரை கவனித்துக்கொள்வது, அப்பா அம்மாவிடம் அன்பு காட்டுவது, வீட்டில் உள்ள பாட்டி தாத்தாவிடம் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவது, அனுதாபம் மற்றும் ஆழமான பிரியம் போன்றவை அர்த்தமுள்ள உறவு மற்றும் உணர்ச்சிப் பிணைப்புகளை உண்டாக்குகிறது. எத்தனை கவலை இருந்தாலும், ஒரு பெண் குழந்தை வீட்டில் இருந்தால் அத்தனையும் மறந்து மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.

படைப்பாற்றல்: பெண் குழந்தைகள் படைப்பாற்றல் மற்றும் கற்பனையின் தனித்துவமான சக்தியைக் கொண்டிருக்கிறார்கள். புதுவிதமான யோசனைகள், விளையாட்டுகள் மேலும் கலை மற்றும் கைவினைப் பொருள்களால் வீட்டை கலகலப்பாக்குகிறார்கள். ஆண் குழந்தைகளை போல அடிக்கடி சண்டை இடுவது, அழுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல், கதை சொல்வது, கோலமிடுவது, பூத்தொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

பொறுப்புணர்ச்சி: அப்பாவிற்கு தலைவாரிவிடுவது, பெரிய மனுஷி போல அம்மாவிற்கு சமையல் கட்டில் உதவுகிறேன் என்று வந்து உதவுவது போன்ற செயல்கள் மூலம் வீட்டை உயிரோட்டமாக மாற்றுகிறார்கள்.

பெண் குழந்தையை பார்க்கும்போது அதன் தந்தைக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும். இந்த குழந்தைக்காக நன்றாக சம்பாதிக்க வேண்டும், சேமிக்க வேண்டும், இதனுடைய எதிர்காலம் வளமாக அமைய வேண்டும் என்று கவலைப்பட்டு பொறுப்பில்லாத தந்தைகள் கூட பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாக மாறிவிடுவது அதிசயம்தான். அத்தகைய மாற்றத்தை நிகழ்த்துவது பெண் குழந்தைகள்தான்.

வாழ்க்கைப் பாடங்கள்: பாசத்தின் வடிவமாகத் திகழும் பெண் குழந்தைகள் பெற்றோருக்கு வாழ்க்கை பாடங்களைக் கற்பிக்கிறார்கள். ஒரு பெண்ணை வளர்ப்பதற்குரிய சவால்கள், அவளுடைய திறமைகளை கண்டறிந்து ஊக்கமளிப்பது, அவளுடைய சாதனைகளைக் கொண்டாடுவது போன்ற நுணுக்கங்களை பெற்றோர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அவள் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கு மாறும்போது ஏற்படும் அனுபவங்கள் நல்ல வாழ்க்கை பாடத்தை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
அவசரத்துக்குக் கைக்கொடுக்கும் சில எளிய பாட்டி வைத்தியக் குறிப்புகள்!
பெண் குழந்தைகள் குடும்ப மகிழ்ச்சியின் ஆதாரமாகத் திகழ்வது ஏன் தெரியுமா?

உத்வேகத்தின் ஆதாரம்: பொதுவாக பெண் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கும் சக்தியாக திகழ்கிறார்கள். அவர்களின் ஆசை, ஆர்வம், ஈடுபாடு போன்றவை பெற்றோரையும் குடும்பத்தில் உள்ளோரையும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றுகிறது. மேலும் அந்தப் பெண் குழந்தைகள் திறமையான தனிநபராக வளரும்போது அனைவருக்கும் நம்பிக்கையூட்டி, ஊக்கசக்தியாக விளங்குகிறாள்.

தந்தையின் கடமை: ஒவ்வொரு தந்தையும் தங்கள் பெண் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் ஆசைப்பட்ட துறையில் கல்வி பயிலவும் சாதிக்கவும் உறுதுணையாக இருக்க வேண்டும் வீட்டில் ஆண் குழந்தை இருந்தால் இருவருக்கும் இணையான வாய்ப்புகளை வழங்கி பாலின சமத்துவத்தை நிலவச்செய்ய வேண்டும். அப்போதுதான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com