தட்டான் பூச்சிகள், தற்போது உள்ள தலைமுறைக்கு ஒரு அதிசயமான பூச்சியாகத்தான் கண்ணில் தெரியும். தட்டான் பூச்சி பிடித்து விளையாடிய காலங்கள் மறக்க முடியாத நிகழ்வுகள்.
டிராகன்ஃபிளைஸ் (Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான் பூச்சி, தட்டாரப்பூச்சி எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப் பூச்சியை தும்பி எனவும் தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். இந்த அழகான பூச்சிகளின் உடல் கண்ணைக் கவரும் நிறத்தில் மெல்லிய கம்பி போல நீண்டு காணப்படும்.
ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை சிறு குழந்தைகள் பிடித்து விளையாடக்கூடிய, குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு பூச்சியாக இது இருந்தது. தற்போது வந்துள்ள நவீன பொழுதுபோக்கு உபகரணங்கள் காரணமாக சிறுவர்கள் இதைப் பிடித்து விளையாடுவதை மறந்துவிட்டார்கள்.
இந்த தட்டான் பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள் உண்டு. இவற்றின் இறக்கைகள் வலை போல மிகவும் மெல்லிய கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலமாக இருக்கிறது. இந்த இறக்கைகளைக் கொண்டு தட்டான் பூச்சிகள் மிக வேகமாக, லாவகமாகப் பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்கக் கூடியது தட்டான் பூச்சிகள். இந்த தட்டான் பூச்சிகள் ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது.
உலகம் முழுவதும் இந்த தட்டான் பூச்சி இனங்களில் ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டைனோசர்களை விட மிகவும் பழைமையானவை.
தட்டான் பூச்சிகள் இறக்கைகள் 2.5 அடி நீளம் இருந்துள்ளது. தட்டான் பூச்சி நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் உலா வருகின்றன. இது அரை அங்குல நீளம் முதல் 5 அங்குல நீளம் வரையிலான அளவுகளில் இருக்கும். தட்டான் பூச்சிகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவை சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழவே பெரிதும் விரும்புகின்றன.
தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும். ஈக்கள் மற்றும் பிற சிறிய தட்டான் பூச்சிகளையும் சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் பறந்துகொண்டே வேட்டையாடும். பிடிபட்ட உணவை பறந்து கொண்டே சாப்பிடும். இந்தோனேசியாவில் உள்ள மக்கள் தட்டான் பூச்சிகளைப் பிடித்து பொரித்து சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள். தட்டான் பூச்சிகள் தலையில் அமர்ந்தால் அதிர்ஷ்டம் என்பது மக்களின் நம்பிக்கை. இன்றும் பல இடங்களில் இதை நம்புகிறார்கள்.