நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கும் நமது ஆளுமைத்தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நாம் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களின் வகைகள் பெரும்பாலும் நமது ஆளுமையின் அம்சங்களையும் நமது உணர்ச்சி ரீதியான விருப்பங்களையும் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு வகையான திரைப்படமும் வெவ்வேறு ஆளுமை பண்புகளுடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
திகில் படங்கள்: திகில் திரைப்படங்களை மிகவும் மிகவும் விரும்பிப் பார்த்து ரசிப்பவர்கள் திரில்லிங்கான அனுபவத்தை தேடுபவர்களாக இருப்பார்கள். திரையில் திகில் காட்சிகளை காணும்போது அவர்களது உடலில் அட்ரினல் சுரக்கும். அவர்கள் அதை மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் வாழ்வின் தெரியாத அல்லது இருண்ட அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறருடன் எளிதில் இணங்கிப் போக மாட்டார்கள். அவ்வளவு சீக்கிரம் எளிதில் பிறருடன் கலந்து பழக மாட்டார்கள். அனுதாபம் மற்றும் பச்சாதாப உணர்வு இவர்களுக்கு குறைவாகவே இருக்கும்.
காதல் படங்கள்: காதல் திரைப்படங்களை ரசிப்பவர்கள் லட்சியவாதிகளாகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். பிறரின் மேல் தீவிர அன்பு செலுத்துவார்கள். அரவணைப்பு, பாசம் மற்றும் கருணை போன்ற உணர்வுகளை கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கற்பனா சக்தி அதிகமாக இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவார்கள்.
சோகமான திரைப்படங்கள்: சோகமான திரைப்படங்களை ரசிப்பவர்கள் அனுதாபம், இரக்கம் மற்றும் பச்சாதாப உணர்வை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆழமான சிந்தனை உடையவர்கள், வாழ்க்கையில் அர்த்தமுள்ள அனுபவங்களை பெற விரும்புவார்கள். இவருடன் நன்றாகப் பழகக்கூடியவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வார்கள். பிறருடன் இணக்கமாகப் போகும் தன்மையுள்ளவர்கள்.
காமெடி: நகைச்சுவை திரைப்படங்களை ரசிப்பவர்கள் பெரும்பாலும் நல்ல நகைச்சுவை உணர்வை கொண்டிருப்பார்கள். பிறருடன் சுமூகமாக பழகுவார்கள். அன்றாட சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாழ்வை ரசிக்கவும் இவர்களுக்குத் தெரியும். கடினமான காலங்களில் கூட நகைச்சுவை உணர்வால் அதை சமாளிக்கும் மனப்பாங்கு உள்ளவர்கள்.
அனிமேஷன்: பெரும்பாலும் குழந்தைகளுக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். இளம் பெண்கள் மற்றும் வாலிபர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த மாதிரி படங்கள் பார்ப்பவர்கள் நெருங்கிய குடும்ப உறவுகளை மதிப்பார்கள். இவர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பிறர் மேல் அதிகமாக அனுதாபமும் பச்சாதாபமும் கொண்டவர்கள்.
பழைய திரைப்படங்கள்: இவர்கள் சவால்களை விரும்புவார்கள். படைப்பாற்றல் மிக்க மனத்தினர். சிந்திக்க வைக்கும் திரைப்படங்களை பார்க்க விரும்புவார்கள். அனுபவங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தருவார்கள்.
அறிவியல் திரைப்படங்கள்: இவர்கள் வாழ்க்கையில் புதிதாக ஏதாவது ஒன்றை சாதிக்க விரும்புவார்கள். புதிய அனுபவங்களுக்கு தயாராக இருப்பார்கள். உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் தராமல் அறிவுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதேசமயம் அழகியலையும் இவர்கள் விரும்புவார்கள்.
அதிரடி ஆக் ஷன் படங்கள்: ஆக் ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்கள் சாகச மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள். பிறரையும் உற்சாகமாக வைத்திருப்பவர்கள். அதிக ஆற்றலுடன் செயல்படுவார்கள். இவர்களிடத்தில் இயற்கையாகவே தைரியம், வலிமை போன்ற குணங்கள் இருக்கும். திரையில் ஆக் ஷன் படங்களைப் பார்க்க விரும்பினாலும் வாழ்க்கையில் இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படாதவர்கள். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். செயல்களை செய்யவே விரும்புவார்கள்.