வீட்டினுள் உட்புறச்செடிகளை வளர்ப்பதன் 12 நன்மைகள் தெரியுமா?

Indoor Plants
Indoor Plants
Published on

வீட்டின் வெளிப்புறத்தில் செடிகள், தாவரங்கள் வளர்ப்பது போல உட்புறத்திலும் செடிகளை (Indoor Plants) வளர்க்கலாம். மணி பிளான்ட், பீஸ் லில்லி, பாம்பு செடிகள், ஸ்பைடர் போன்ற செடிகளை வளர்ப்பது பலவிதமான நன்மைகளைத் தரும். அது பற்றி இந்தப் பதிவில்  பார்ப்போம்.

வீட்டினுள் உட்புறச்செடிகளை வளர்ப்பதன் நன்மைகள்:

1. காற்று சுத்திகரிப்பு: பீஸ் லில்லி, மற்றும் பாம்பு செடிகள் போன்ற தாவரங்கள் ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சீன் போன்ற மாசுக்களை உறிஞ்சி, உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.

2. ஈரப்பதம் கட்டுப்பாடு: டிரான்ஸ்பிரேஷன் எனப்படும் செயல்முறை மூலம், உட்புற தாவரங்கள் ஈரப்பதத்தை வெளியிடுகின்றன. அதனால் வீட்டின் ஈரப்பதத்தின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது மனிதர்களின் சருமம் மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

3. அழகியல்: வீட்டின் உட்புறத்தில் பசுமையான தாவரங்களை வளர்ப்பது பார்வையை ஈர்க்கும் விதத்திலும் சூழலை அழகாக வைப்பதிலும் உதவுகிறது. வீட்டிற்கு தனி அழகைக் கொடுக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

4. மன அழுத்தம் குறைதல்: பச்சை பசுமையான தாவரங்களை வீட்டினுள் எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். மனச்சோர்வை ஏற்படுத்தும் கார்டிசோலின் அளவை குறைத்து உற்சாகத்தை அளிக்கும். வீடுகள் மட்டுமின்றி அலுவலகச் சூழலுக்கும் இது மிகவும் ஏற்றதாக இருக்கின்றன.

5. மூட் பூஸ்டர்: பசுமையான சூழ்நிலை, சோர்ந்த மனது அல்லது உற்சாகமற்ற மனதைக் கூட சில நிமிடங்களில் மாற்றி விடும் தன்மை படைத்தது. இது உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துகிறது. நேர்மறையான சூழலுக்கு பங்களிக்கிறது. வீடு, அலுவலகம் எதுவாக இருந்தாலும் தனது பணியை மக்கள் செவ்வனே செய்ய ஏற்றவாறு மூட் பூஸ்டராக இவை செயல்படுகின்றன.

6. குறைந்த பராமரிப்பு: வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளுக்கு அதிகமான பராமரிப்புகள் தேவையில்லை. வெளியில் வளர்க்கப்படும் செடிகளால், காய்ந்த இலைகளை எடுத்து சுத்தம் செய்தல், முறைப்படி நீரூற்றி, தேவைப்பட்டால் உரம் வைத்து என பராமரிப்பின் தன்மை கூடுதலாக இருக்கும். ஆனால் உட்புறமாக வளர்க்கப்படும் செடிகளுக்கு குறைந்த அளவு பராமரிப்பே போதும். பிஸியான வாழ்க்கை முறைக்கு மிகவும் ஏற்றவை.‌

7. செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவை: வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு இவை மிகவும் உகந்தவை. அவை சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!
Indoor Plants

8. பொறுப்புணர்வு: உட்புறத்தில் தாவரங்களை வளர்ப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வை வளர்க்கிறது. மதிப்புமிக்க வாழ்க்கை திறன்களை கற்றுக் கொடுக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகள் இயற்கை ஆர்வலராக மாறுவதற்கு இந்தச் செடிகள் வழி வகுக்கும்.

9. மேம்படுத்தப்பட்ட கவனம்: பணியிடங்களில் உட்புற தாவரங்களை வைத்து வளர்ப்பது கவனம் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தும். இருப்பிடத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இவை எடுத்துச் சொல்கின்றன.

10. நல்ல தூக்கம்: பீஸ் லில்லி என்று அழைக்கப்படும் அமைதி அல்லிகள் காற்று மாசுபடுத்திகளை வடிகட்டுகின்றன. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. படுக்கையறையில் இந்த செடிகளை வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது. இவை ஆழ்ந்த உறக்கத்தை  தருவதில் சிறந்தவை.

11. இரவிலும் ஆக்ஸிஜன்: பல தாவரங்கள் பகலில் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. ஸ்நேக் பிளான்ட் போன்றவை இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இவை ஆரோக்கியமான உட்புற காற்றை ஊக்குவிக்கின்றன. எனவே இவற்றை ஹாலிலும், படுக்கை அறையிலும் வைத்து வளர்க்கலாம்.

12. இயற்கையுடனான இணைப்பு: உட்புற தாவரங்களை வைத்திருப்பது அமைதியான உணர்வையும் இயற்கையுடன் நேரடியான தொடர்பையும் அளிக்கும். நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கு தனிமை உணர்வை குறைக்க இது உதவுகிறது. அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com