தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படும் காலங்களில், வேலைக்கு செல்லும் பெற்றோர்கள், வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் உட்பட அனைவருக்குமே குழந்தைகளை கையாள்வது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. ஏனெனில் விடுமுறை காலங்களில் அவர்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பது தொலைக்காட்சி பெட்டிகளும், செல்போன் கருவிகளுமே. அதி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த தொழில்நுட்ப பயன்பாடுகளில் இருக்கும் நன்மைகளைப் போலவே அதனால் ஏற்படும் ஆக்கிரமிப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன.
இத்தகைய செயல்பாடுகளில் இருந்து மாற்றுவதற்காக அவர்களை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு அவர்கள் புதிய காட்சிகளையும், புதிய சூழலையும் அனுபவிக்கும் போது மனதளையிலும் உடலளவிலும் மிகுந்த உற்சாகம் பெறுகிறார்கள். எனவே அத்தகைய சுற்றுலாவையே அவர்களுக்கு மிகவும் பயனுள்ள விதத்தில் அமைத்துக் கொடுத்தால் அது அவர்களைத் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டே இருப்பதோடு நாளடைவில் அத்தகைய செயல்பாடுகளின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்யும். அத்தகைய தொடர் இயக்கத்துக்கான சில சுற்றுலா மாதிரிகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நர்சரி கார்டன் :
விடுமுறை நாட்களில் குழந்தைகளை அருகில் உள்ள நர்சரி கார்டனுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு இயற்கையை பற்றிய அறிமுகத்தை வழங்கலாம். அங்கு வளர்க்கப்படும் பல்வேறு வகையான செடிகள், செடிகளை வளர்ப்பதற்கான மண் தயாரிப்பு முறைகள், அதற்கு இடப்படும் உரத்தைப் பற்றிய தயாரிப்பு முறைகள், செடிகளை வளர்ப்பதற்கான தொட்டிகளை பற்றிய விவரங்கள் போன்றவற்றை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு பிடித்த செடிகளை தேர்வு செய்ய செய்து அதற்குரிய செயல்முறைகளையும் கேட்டு அறிந்து வீடுகளில் வளர்க்கச் செய்வதன் மூலம் அவர்களை ஓய்வு நேரங்களில் பயனுள்ள வகையில் நம்மால் ஈடுபடுத்த முடியும்.
கோவில்கள்:
பெரும்பாலும் கோவில்களுக்கு செல்லும்போது நம்முடைய அதிகப்படியான கவனம் சாமியை தரிசனம் செய்வதிலே இருந்திருக்கும். ஆனால் விடுமுறை காலங்களில் கோவில்களுக்கு செல்லும்போது அங்கு நிறைய நேரம் செலவழித்து அந்த கோவிலை பற்றிய செய்திகளை அவர்களுக்கு விளக்கலாம். கோவிலின் கட்டிடக்கலை, பராமரிப்பு முறைகள், அங்கு உள்ள கலைநயம், சிற்ப வேலைப்பாடுகள் போன்றவற்றை நாம் அவர்களுக்கு பயிற்றுவிப்பதன் மூலம் அவர்களுக்கு வரலாற்று அறிவை மிக எளிதாக நம்மால் கடத்த முடியும்.
கடைவீதிகள்:
இன்றைய காலகட்டங்களில் ஒரு இடத்திற்கு சென்று பொருட்களை வாங்குவது என்பதே மிகவும் குறைந்து வருகிறது. அதிகமாக அனைவரும் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனது ஒரே இடத்தில் நிறைய கடைகள் இருக்கும் கடைவீதிகளுக்கோ அல்லது வார நாட்களில் சந்தைகள் செயல்படும் இடங்களுக்கோ அழைத்துச் செல்வதன் மூலம் நம்மால் அவர்களுக்கு பல்வேறு பொருட்களைப் பற்றியும், தொழில்களை பற்றியும், வாழ்வியல் முறைகளைப் பற்றியும் மிகவும் எளிமையாக அனுபவபூர்வமாக விளக்க முடியும்.
மிருக காட்சி சாலை:
அருகிலுள்ள வனவிலங்கு சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள் போன்றவற்றிற்கு அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு நாம் சார்ந்து வாழக்கூடிய பல்வேறு உயிரினங்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த முடியும். மேலும் இத்தகைய இடங்களுக்கு செல்லும்போது இத்தகைய உயிரினங்களால் புவிபரப்பில் ஏற்படும் சமநிலையைப் பற்றியும், இத்தகைய உயிரினங்களின் அழிவால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும், இத்தகைய உயிரினங்களை போற்றி பாதுகாப்பதில் மனிதர்களுக்கு உள்ள அக்கறையை பற்றியும் எடுத்துக்கூறி பல்வேறு உயிரினங்களின் முக்கியத்துவத்தை அனுபவபூர்வமாக நம்மால் அவர்களுக்கு புரிய வைக்க முடியும்.
கடற்கரைகள்:
குழந்தைகள் பரந்து விரிந்த கடற்கரையையும், துள்ளி வரும் அலைகளையும் பார்க்கும் போது மனதளவில் மிகவும் உற்சாகமாக மாறிவிடுகிறார்கள். அங்குள்ள பயமும் சாகசமும் நிறைந்த ஒரு உணர்வு அவர்களுக்கு ஒரு புதுவிதமான உற்சாகத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே விடுமுறை காலங்களில் அவர்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க அதிகமாக கடற்கரைகளுக்கு அழைத்துச் செல்லலாம். அவ்வாறு அழைத்துச் செல்லும் போது அவர்களை அதிகமாக மண்ணில் விளையாட விடுவது அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
பழங்கால நினைவுச் சின்னங்கள்:
நம் ஒவ்வொருவரும் வாழும் இடத்திற்கு அருகில் உள்ள தொன்மை வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். எடுத்துக்காட்டாக நகரில் இருக்கும் மிகவும் பழமையான ரயில் நிலையங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், மியூசியம், நூலகம், அறிவியல் சம்பந்தப்பட்ட ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களின் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்த உதவுவதோடு, அவை தொடர்பான நிறைய தேடல்களுக்கும் அவர்களை தூண்டும் விதத்தில் இத்தகைய பயணங்கள் இருக்கும்.
குறிப்பு:
எல்லா நாட்களிலும் அதிகப்படியான பணத்தை செலவழித்து அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது என்பது இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலும் இயலாத காரியம் ஆகும். பொருளாதார தேவைகளை காரணம் காட்டி அவர்களை வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்காமல் அவர்களின் தேடல் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப சிறப்பாக திட்டமிட்டு குறைவான செலவில் நிறைவான பயண அனுபவங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரலாமே!