
சமயலறையில் நீங்கள் தினம் தோறும் பயன் படுத்தும் சாதனம் மிக்சி. மிக்சியில் பயன்படுத்தப்படும் மிக்சி ஜார்கள் அழுக்காக உள்ளதா? இதை பெரும்பாலானோர் மற்ற பாத்திரங்களோடு சேர்த்து கழுவுவார்கள். அப்படிச் செய்யாமல் அதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் துர்நாற்றம் வீசாமல் கறையில்லாமல் சுத்தமாக பராமரிக்க முடியும்.
1. வினீகர்
மிக்சி ஜார்களை சுத்தம் செய்ய வீனீகர் போதுமானது. சிறிது நீரில் இரண்டு ஸ்பூன் வினீகரை சேர்த்துக் கலக்கி இந்தக் கலவையை ஜாடியில் ஊற்றி ஊற வைக்கவும். பிறகு அதை சுத்தம் செய்ய கறைகள் நீங்கி பளிச்சென்று ஆகும். இதை மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
2. எலுமிச்சை
எலுமிச்சையை ஜுஸ் பிழிந்த பிறகு தூக்கி எறியாதீர்கள். இதனால் பல நன்மைகள் உண்டு. இதற்கு அழுக்கு மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சிறப்புத் திறன் உள்ளது. மிக்சி ஜாரைக் கழுவிய பிறகு எலுமிச்சைச் தோலால் நன்றாகத் தேய்த்து ஊற வைத்துப் பிறகு கழுவவும். அனைத்து அழுக்குகளும் நீங்கும்.
3. பேக்கிங் பௌடர்
ஒரு பாத்திரத்தில் பேக்கிங் பௌடர் எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்யுங்கள். இதை மிக்சி ஜாடியின் உள்புறம் மற்றும் வெளிப்புறம் தேய்த்துக் கழுவ ஜாடி புதியது போல் மின்னும்.
4. கல் உப்பு
மிக்சி ஜாரில் கல் உப்பு சேர்த்து ஒருமுறை சுற்றி எடுத்தால் ப்ளேடு பகுதியில் இருக்கும் அழுக்கு நீங்கும் இதனால் ப்ளேடும் ஷார்ப்பாக மாறும்.
5. நியூஸ்பேப்பர்
பழைய நியூஸ்பேப்பரை துண்டுகளாக்கி கிழித்து கிண்ணியில் போட்டு அதில் க்ளீனிங் லிக்விட் சேர்க்கவும். இதை எடுத்து மிக்சியில் உள்ளும் புறமும் தேய்க்க மிக்சி பளிச்சென்று ஆகும்.
துளிகள்:
*மிக்சியை வைக்கும் போது அந்த இடம் ஈரமில்லாமல் இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் மின்சாரம் பாய வாய்ப்புண்டு.
*மிக்சியில் உள்ளே தண்ணீர் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளவும். இது மோட்டாரை சேதப்படுத்தும்.