
தன்னுடைய வார்த்தைகள் மதிக்கப்படவில்லை என்றால் நிச்சயமாக ஒரு மனிதருக்கு வருத்தமும் கவலையும் ஏற்படுவது சகஜம். ஆனால் பிறர் ஒருவருடைய வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை மதிப்பதில்லை என்றால் அதற்கு சில காரணங்கள் உண்டு. அவை என்ன அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பொய் வாக்குறுதிகள்;
சிலர் அடிக்கடி ‘நான் இதை செய்து தருகிறேன், அதை முடித்துத் தருகிறேன்’ என்று உறுதியாக வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். அப்படி வாக்குறுதி வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் போது சம்பந்தப்பட்ட நபர் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். அவர் என்ன பேசினாலும் அவரது வார்த்தைகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
தெளிவற்ற விளக்கம்;
தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை தெளிவாக முன் வைக்க வேண்டும். அவை தெளிவில்லாமல் இருக்கும்போது வார்த்தைகளின் தாக்கம் குறையும். இதனால் பிறர் அந்த வார்த்தைகளையும் அதை பேசுபவர்களையும் மதிக்கவோ லட்சியம் செய்யவோ மாட்டார்கள். ஒரு விஷயத்தை சொல்லும் போது பொருத்தமான உடல் மொழி, தொனி மற்றும் சரியான வார்த்தைகளை தெளிவாக வெளிப்படுத்துவது அவசியம்.
நேர்மையின்மை;
தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளத் தவறுவதும் நேர்மையில்லாமல் இருப்பதும் ஒருவருடைய நம்பகத்தன்மையை சேதப்படுத்தும். அதனால் அவருடைய வார்த்தைகளை பிறர் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவரைக் குறைவாக மதிப்பிடுவார்கள். அவருடைய செயல்கள் ஒவ்வொன்றையும் சந்தேகத்தோடு பார்ப்பார்கள்.
மோசமான நட்புக் கூட்டம்;
‘உன்னுடைய நண்பன் யார் என்று சொல். உன்னை பற்றி சொல்கிறேன்’ என்பார்கள். ஒருவருடைய நண்பர்கள் மோசமானவர்களாக இருக்கும்போது அவரை பிறர் மதிக்க மாட்டார்கள். நம்பவும் மாட்டார்கள். நண்பர்களைப் போலவே அந்த நபரும் மோசமான நடத்தை உள்ளவராக இருப்பார்கள் என்று நினைத்து அவரை ஒதுக்குவார்கள். அவர் பேச்சையும் நம்ப மாட்டார்கள்.
வதந்திகளை பரப்புதல்;
தொடர்ந்து வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை பரப்புதல், அற்பமான விஷயங்களைப் பற்றி எப்போதும் விவாதிப்பது போன்ற செயல்கள் ஒருவரை நேர்மையற்றவராக கண்ணியமற்றவராக பிறருடைய பார்வையில் தோன்ற வைக்கும். முக்கியமற்ற விஷயங்களை பற்றி பேசவும் விவாதிக்கவும் கூடாது. அவருடைய வார்த்தைகள் பிறரிடத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தாது.
சொல் ஒன்று, செயல் வேறு;
பேசுவது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்தால் அது அவருடைய குணத்தை சந்தேகிக்க வைக்கும். என்ன பேசுகிறோமோ அதைப்போலவே நடந்து கொள்வது மிகவும் அவசியம். அப்படியில்லாமல் போகும் போது, தான் சொல்வதை தானே கடைப்பிடிக்காமல் போகும் போது பிறர் கணிப்பில் தாழ்ந்து தான் போக வேண்டி வரும். இந்த நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவருடைய பெயரும் விரைவில் கெட்டுப் போகும்.
நிபுணத்துவம் இல்லாதது;
ஒரு விஷயத்தில் போதிய அறிவு மற்றும் திறமை இல்லாமல் அவை இருப்பது போல வெளியே நடித்துக் கொண்டிருந்தால் மக்கள் விரைவில் அவற்றை கண்டுபிடித்து விடுவார்கள். திறமையோ அறிவோ இல்லாமல் வெறுமனே இவர்கள் நடிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்து விடும். எனவே மிக எளிதாக உங்களை நிராகரிக்கவும் புறக்கணிக்கவும் செய்யலாம்.
எனவே இந்தக் குணாதிசயங்களை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை விலக்கி வைத்தால் மட்டுமே உங்களுடைய வார்த்தைகளுக்கு பிறர் மதிப்புத் தருவார்கள்.