நம் வீட்டில் பணிபுரியும் சமையல்காரர்களை பாராட்டும் வழக்கம் உண்டா?

அக்டோபர் 20, சர்வதேச சமையல்காரர்கள் தினம்
International Chefs day
International Chefs day
Published on

ற்போதைய காலகட்டத்தில் ஹோட்டல்களில் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வெளியூருக்கு சென்றால் மட்டுமே ஹோட்டல்களைத் தேடிய நாம், தற்போது உள்ளூரில் இருக்கும்போதே அடிக்கடி ஹோட்டல்களில் ஆர்டர் செய்தோ அல்லது நேரில் போயோ உண்கிறோம். சில வகையான உணவுகளின் ருசி நமக்குப் பிடித்து விட்டால் மீண்டும் மீண்டும் அதே ஹோட்டலையே நாடுகிறோம். ‘அந்த ஹோட்டல்ல என்னம்மா சமைக்கிறாங்க தெரியுமா? அங்க பிரியாணி செமையா இருக்கும். வத்தக் குழம்பு சூப்பரா இருக்கும். டிபன் வகைகள் எல்லாம் கேட்கவே வேண்டாம்’ என்று புகழ்ந்து தள்ளுவோம். அவற்றை சமைத்த சமையல்காரர்களை நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் மனதாரப் பாராட்டுவோம்.

நமது வீட்டில் பல வருடங்களாக சமைத்துக் கொண்டிருக்கும் சம்பளம் வாங்காத சமையல்காரர்களை, அதாவது அம்மாவையோ மனைவியையோ மனதார தினமும் பாராட்டுகிறோமா ? தினமும் இல்லை என்றாலும் வாரத்திற்கு ஒரு முறை? அல்லது மாதத்துக்கு ஒரு முறை? சட்னி, சாம்பாரில் உப்பு, காரம் சற்றே கூடிப்போய்விட்டால் உடனே முகத்தைச் சுழித்து, ‘எத்தனை உப்பைப் போட்டு வச்சிருக்க? ஒரே காரம்’ என்ற கமெண்ட்கள் தூள் பறக்கும். இன்னும் சிலர், ‘குழம்பா இது? வாயிலேயே வைக்க முடியலை’ என்று கடுமையாகக் கூறுவதும் உண்டு. எதிர்மறையான விமர்சனங்களை உடனடியாக முன் வைக்கும் நாம் நேர்மறையான விமர்சனங்களை சொல்வதில் காலம் தாழ்த்துகிறோம் அல்லது தயங்குகிறோம்.

லீவு நாட்களில் கணவனோ, அப்பாவோ, சகோதரனோ ஹாயாக சோபாவில் அமர்ந்து டிவி பார்த்தபடி அல்லது மொபைல் போன் பார்த்தபடி பொழுதைக் கழிப்பார்கள். ஆனால், வீட்டுப் பெண்களுக்கு என்றாவது ஓய்வு உண்டா? அவர்களுக்கு லீவு இருக்கிறதா? புகழ்பெற்ற எழுத்தாளரான அம்பை தனது ‘வீட்டின் மூலையில் சமையலறை’ என்ற சிறுகதையில் ஒவ்வொரு பெண்களும் தங்கள் வீடுகளில் வருடத்திற்கு எத்தனை ஆயிரம் தோசைகளை தயார் செய்கிறார்கள் என்ற கணக்கு சொல்லும்போது படிப்பவர்கள் மலைத்துப் போவார்கள். ஆனால், ஒவ்வொரு வீடுகளிலும் பெண்கள் சமையலறை என்ற போர்க்களத்தில் சிக்கி சுழன்று கொண்டிருக்கின்றனர் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை.

நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்திற்கு சமையல் வேலைக்கு ஆட்களை அமர்த்தினால் குறைந்தது பத்தாயிரம் ரூபாயாவது தர வேண்டி வரும். ஆனால், இலவசமாக எதையும் எதிர்பாராமல் வருடத்தின் எல்லா நாட்களும் சமைக்கும் பெண்களுக்கு பரிசாக அல்லது சம்பளமாக எதைத் தருகிறோம்? பண்டிகை நாட்களில் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம் என்றால் பெண்களுக்கு மட்டும் திண்டாட்டம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களும் தீர்வுகளும்!
International Chefs day

ஆனால், பெரும்பாலான பெண்கள் சமையலை சுமையாக நினைப்பதில்லை. அவர்கள் செய்யும் சேவைக்கு ஈடாக என்ன கொடுத்தாலும் தகும். ஆனால், பொருளாக அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவரது சமையல் நன்றாக இருக்கிறது என்கிற ஒரு சிறு பாராட்டு அவர்கள் முகத்தில் மலர்ச்சியையும் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். திருப்தியாக உண்டு முடித்த பின் சமையல் நன்றாக இருக்கிறது என்ற ஒற்றை வார்த்தையை தினமும் சொல்வோமே.

நாம் ஹோட்டல்களுக்கு உணவருந்த செல்லும்போது நாம் கேட்கும் உணவு வகைகளை பரிமாறும் பேரர்களுக்கும் சர்வர்களுக்கும் மலர்ந்த முகத்துடன் பில்லுடன் சேர்த்து டிப்ஸும் தருவது வழக்கம். அவர்களுக்குத் தரும் குறைந்தபட்ச மரியாதையை நம் வீட்டு பெண்களுக்கும் நாம் இனிமேலாவது கொடுக்க வேண்டும். இன்று சர்வதேச சமையல்காரர்கள் தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. நம் வீட்டுப் பெண்களை நாம்தான் கொண்டாட வேண்டும். அவர்களின் மனம் மகிழ வைக்கும் பாராட்டுக்களை சொல்வோமே? அத்துடன் அடுப்புச் சூட்டில் வேகும் அவர்களுக்கு உதவியாக ஆண்களும் சமையலில் உதவ வேண்டும். அதுதான் பெண்களுக்கு செய்யும் ஆகப்பெரும் மரியாதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com