
பரீட்சை முடிந்து மாற்றலில் வரும் வீட்டுக்காரர்கள் ட்ரான்ஸ்பரில் ஒரு ஊர்விட்டு அடுத்த ஊர் வருவது அனைத்தும் இந்த லீவு நாட்களில்தான் நடக்கும். இப்பொழுது அடுத்த மாநிலங்களில் இருந்து வருவது அதிகமாகி வருகிறது. அவர்களுக்கு மொழி பிரச்னை இருக்கும். ஆதலால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கலாம். எப்படி எல்லாம் உதவலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.
முதலாவதாக ஒரு பேப்பரில் கேஸ் ஏஜென்சியின் போன் நம்பர், பால்காரர், நியூஸ் பேப்பர் போடுபவர், இஸ்திரி போடுபவர், தண்ணீர் கேன் போடுபவர், காய்கறி, மளிகை சாமான் கடைகள், வீட்டுக்கு கேபிள் கனெக்சன் கொடுப்பவர், முக்கியமாக உதவி செய்யும் உங்களின் போன் நம்பர் என்று மிகவும் அத்தியாவசியமான இவர்களின் போன் நம்பரை எழுதி புதிதாக வந்திருப்பவர்கள் கையில் கொடுத்து அவர்களுக்கு உதவலாம்.
வந்திருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, பருகுவதற்கு ஏதாவது பானங்கள் சிற்றுண்டி கொடுக்கலாம். உணவு தயாரித்து ஒருவேளை வழங்கலாம். ஏனென்றால் கேஸ் சிலிண்டர் எதுவும் அப்பொழுது சமையல் செய்யும் விதத்தில் இருக்காது. அப்பொழுது சாப்பாடு செய்து கொடுத்தால் அவர்கள் கொண்டு வந்த சாமான்களை எடுத்து வைக்க எளிதாக இருக்கும்.
மேலும் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி போன்றவற்றின் விபரத்தையும் கூறலாம். முக்கியமாக டாக்டரின் விலாசத்தையும் போன் நம்பரையும் குறித்துக் கொடுப்பது ஆபத்துக்கும் உதவும்.
வேற்று மொழி பேசுபவராக இருந்தால் அவர்களுடன் உரையாடி அவர்களிடம் இருந்து நாம் ஒரு புது மொழியை கற்றுக்கொள்ளலாம். அதே வேளையில் நம் தாய் மொழியையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். இப்படி கற்றுக்கொடுத்து விட்டால் அவர்கள் அனைத்திற்கும் நம் உதவியை நாடாமல், மிகவும் தேவையான பொழுது மட்டும் நம்மை உதவிக்கு அழைப்பார்கள். இதனால் நேரம் மிச்சமாகும். செய்யும் வேலையை தொய்வில்லாமல் செய்து முடிக்கலாம்.
மாற்றலில் செல்பவர்கள் செய்ய வேண்டியது:
உடனடியாக நட்பு மற்றும் உறவினர்களுக்கும் புதிய முகவரியை போன் நம்பருடன் தெரிவிப்பது மிகவும் அவசியம். இதனால் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பது போன்றவற்றில் பிரச்னை ஏற்படாது.
போஸ்ட் ஆபீஸில் உங்கள் போன் நம்பரை கொடுத்து விபரமாக கூறி உங்களுக்கு வரும் கடிதங்களை புது வீட்டிற்கு அனுப்புவதற்கான கடிதத்தை எழுதி கொடுத்து விடுங்கள். வங்கி ஆவணங்கள், இன்சூரன்ஸ் ஆவணங்கள் போன்றவற்றை புதிய முகவரிக்கு மாற்றி விடுவதில் மும்முரம் காட்ட வேண்டும் .இல்லாவிட்டால் தவணை கட்டுவது போன்ற பல விஷயங்களில் தடுமாற்றம் ஏற்பட ஏதுவாகிவிடும்.
குடும்ப அட்டையை புதுப்பித்துக் கொள்வது அவசியம். வாக்காளர் அடையாள அட்டை , டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வாகனத்தின் நம்பர் பிளேட் போன்ற சகல ஆவணங்களையும் புதிய முகவரிக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கடைகளையும், ஆட்டோ ஸ்டாண்டையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அக்கம் பக்கத்தினரின் குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளையும் பள்ளிக்குச் செல்ல ஆட்டோவில் ஏற்றுவது பாதுகாப்பை அளிக்கும்.
குழந்தைகளை புதிதாக சேர்க்க இருக்கும் பள்ளியை வீட்டிற்கு அருகில் இருப்பதாக தேர்ந்தெடுத்து நன்றாகப் பார்த்து, விசாரித்து, தெரிந்துகொண்டு சேர்ப்பது நல்லது.
வேலைக்காரர்களை தேர்ந்தெடுக்கும் பொழுதும் அவர்களின் குடும்ப பின்னணியை நன்றாக தெரிந்துகொண்டு, அவர்களின் வீடு மிகத் தொலைவில் இல்லாததாக இருந்தால் வேலைக்கு அமர்த்துவது நல்லது. இதனால் அடிக்கடி விடுமுறை எடுப்பதை அவர்கள் தவிர்ப்பார்கள்.
வீட்டிற்கு புதிதாக வாட்டர் கேன் போட வருபவர்கள், நியூஸ் பேப்பர் போட வருபவர்கள், பால், மளிகை, காய்கறி கடைக்காரர்கள், போஸ்ட்மேன் என்று அனைவருக்கும் அவர்கள் பணியை முடித்து செல்லும் பொழுது நன்றி கூறுங்கள். அப்பொழுது உங்களை நன்றாக அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.