
காதல் தோல்வியும் தாடியும் பிரிக்க முடியாத இரட்டையர்களாக ஒரு காலத்தில் இருந்தன. ஆனால், தற்போது கல்யாண மாப்பிள்ளையே விதவிதமாக தாடி வைத்துக்கொண்டுதான் தாலி கட்டுகிறார். இந்த தாடி குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
தற்காலத்தில் தாடி வைத்திருக்கும் பையன்களையே பல பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஏனெனில், சிலர் தாடி வைத்திருக்கும்போது வசீகரமாகக் காட்சியளிப்பதுதான் முதல் காரணமாக இருக்கிறது. ஆனால், தாடி முகத்தில் வைத்திருக்கும்போது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை கிருமிகள் வாழும் இடமாக மாறிவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாக, மனித உடலில் உள்ள சருமப் பகுதி மற்றும் முகத்தில் உள்ள ரோமங்களில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், வைரஸ்கள் அதிகமாக இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுதான் ஏற்கெனவே தாடி அசுத்தமானது என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
சமீபத்தில், ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையில் கழிவறையில் உள்ள கிருமிகள் ஒருவர் தாடியில் இருப்பதை விட குறைவான அளவில் இருக்கின்றன எனக் கூறியுள்ளது. சாதாரண நபர்களை விட, சுகாதாரப் பணியாளர்களுக்கு தாடி வைத்து இருப்பதால் நோய்க் கிருமிகள் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் ஏற்படும் ஸ்டாபிலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) பாக்டீரியா கிருமித் தொற்று தாடி வைத்த மருத்துவர்களுக்குக் குறைவாகவும், தாடி வைத்த மருத்துவர்கள் முகமூடி அணிந்து சிகிச்சை அளித்தாலும் நோயாளிகளுக்கு ஏற்படும் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றது.
தாடி வைத்திருக்கும் சிலருக்கு இம்பெட்டிகோ (impetigo) என்ற தொற்று ஏற்படுவதோடு சில அரிதான சமயங்களில், இடுப்புப் பகுதியில் வாழும் அந்தரங்கப் பேன் (ப்யூபிக் லைஸ்) போன்ற ஒட்டுண்ணிகள் தாடி, புருவம் அல்லது கண் இமைகளிலும் தோன்றுவதால் சுகாதாரம் குறைவாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தாலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
தாடியை பராமரிக்கும் முறை: தாடிக்குக் கீழ் இருக்கும் சருமத்தில் ஏராளமான இரத்த நாளங்கள் இருப்பதால் எண்ணெய் பிசுக்கு, உணவு துகள்கள், இறந்த சரும செல்கள் தாடிக்குக் கீழ் படிந்து அதை சரியாகப் பராமரிக்காவிட்டால் அதில் அரிப்பு, எரிச்சல், தொற்று ஏற்படுவதோடு, சுற்றுப்புற அசுத்தங்களாலும் பாதிக்கப்படக் கூடும்.
தாடியை அன்றாடம் கழுவி சுத்தம் செய்வதோடு தாடியை சீவ பிரத்தியேக சீப்பு பயன்படுத்துவதால் அங்கிருக்கும் கழிவுகள் வெளியேறுவதோடு, தாடியை ட்ரிம் செய்வதும் தாடியை சுத்தப்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மேலும், முகத்தில் சரியான அளவில் ஈரப்பதத்தை பாதுகாப்பதால் வறட்சியை தடுக்கலாம் என்கின்றனர்.
தாடியை முறையாகப் பராமரித்தால் வசீகரமாகவும் முறையற்று வைத்தால் தொற்றுக்கு வழி வகுக்கும் என்பதை சுகாதார சீர்கேடு என்பதை நினைவில் கொண்டு தாடியை வையுங்கள்.