வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்கள் செய்யும் சமையல் மிகவும் பக்குவமாகவும், ருசியாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் இருக்கும். விதவிதமான பலகாரங்களைச் செய்து அசத்துவார்கள். இந்த ஃபாஸ்ட் ஃபுட் காலத்திலும் அவர்களின் சமையலை ருசிக்க விரும்பாதவர்கள் யாரும் கிடையாது.
உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட மருத்துவரைப் பார்ப்பதற்கு முன்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் தரும் கஷாயத்தை நிச்சயம் நாம் சாப்பிட்டு இருப்போம். பக்க விளைவுகள் ஏதுமற்ற எளிமையான கை வைத்தியம் செய்து தருவார்கள். நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. உலக அளவில் இன்று ஏழு பாட்டிகள் செய்யும் சமையல் பிரபலமாக பேசப்படுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
ஸ்வீட் காரம் காபி: ஸ்வீட் காரம் காபி ஜானகி பாட்டியின் கைவண்ணத்தில் உருவான நிறுவனம் ஆகும். இவர் செய்யும் தட்டை, கை முறுக்கு போன்றவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பேவரிட்டான உணவாகும். வெறும் 2000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று சக்கை போடு போடுகிறது. இவருடைய பேரக்குழந்தைகள் தங்களின் வேலையை விட்டுவிட்டு பாட்டியின் கைபக்குவத்துக்கு அடிமையாகி இந்த ஸ்வீட் காரம் காபியை தொடங்கினர்.
போஜூஸ் கிச்சன்: போஜூஸ் கிச்சன் என்றால் நேபாள மொழியில், ‘பாட்டியின் சமையலறை’ என்று பொருள். 87 வயதான மய்யா தாபா என்ற மூதாட்டி கோவிட் காலத்தில் இதைத் தொடங்கினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் சேர்ந்து இந்த கிச்சனை தொடங்கினார்கள். பல வகையான ருசியான மோமோஸ்களை தயாரிக்கின்றனர்.
அம்மிஜிஸ்: ராஜிந்தர் கவுர் சத்தா என்ற 96 வயதான பாட்டி அம்மிஜிஸ்ஸை தொடங்கினார். இதில் ஆரம்பத்தில் சுவையான மசாலா டீ தயாரித்து விற்றார். இவரது குட்மிர்ச்சி அச்சார் எனப்படும் வெல்லம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் ஊறுகாயும், பஞ்சாபி சிக்கன் ஊறுகாயும், பூண்டு, வேர்க்கடலை, வர மிளகாய் சேர்த்து செய்த டாப்பிங்கும் மிகவும் சுவையாக இருக்கும் என அவரது பேத்தி அமிர்தா சத்வால் கூறுகிறார். இன்றைக்கு கவுரின் தயாரிப்புகள் அனைத்தும் இந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது.
ஃபெர்ன்ஸ் பிக்கிள்ஸ்: 1937ல் கோவாவை சேர்ந்த நடாலின் பெர்னாண்டஸ் தனது கணவர் பெஞ்சமினுடன் சேர்ந்து இந்த பிக்கிள்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பல வகையான காய்கறிகளை வைத்து செய்த ஊறுகாய்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. கத்தரிக்காய் ஊறுகாய், மாங்காய் தொக்கு, காரமான மாங்காய் கசுண்டி எனப்படும் வங்காள ஸ்பெஷல் சட்னி, கோவா ஸ்பெஷல் விண்டாலு போன்றவை ஃபெர்ன்ஸ் பிக்கிள்ஸின் பிரபலமான உணவு வகைகளாகும்.
குஜ்ஜூ பென் நா நாஷ்டா: ஊர்மிளா ஆஷர் என்பவர் குஜ்ஜு பென் நா நாஷ்டா என்ற தயாரிப்பைத் தொடங்கினார். இதில் பலவகையான குஜராத்தி பலகாரங்களான தெப்லா, டோக்ளா, சாபுதானா கிச்சடி போன்ற குஜராத்தி பலகாரங்களை 80 வயதான ஊர்மிளா ஆஷர் தயாரித்து அசத்துகிறார். இவர் மாஸ்டர் செஃப் இந்தியா சீசன் 7ல் பங்கேற்று கலக்கியவர்.
பிக்கிள்டு வித் லவ்: கொரோனா காலத்தில் உஷா குப்தா என்பவர் தொடங்கிய பிக்கிள்ட் வித் லவ் வெளியே சென்று சாப்பிட முடியாமல் தவித்த பலரின் பசியை போக்கியது. கோவிட் காலத்தில் ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால் நிறைய பேருக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை. 88 வயதான உஷா குப்தாவின் கணவர் ராஜ்குமார் என்பவர் கொரோனா காலத்தில் காலமானார். சோகத்தில் இருந்த போதிலும் பசியால் வாடியவர்களுக்கு உதவ எண்ணி வீட்டில் சமைத்து வேண்டியவர்களுக்குக் கொடுத்து வந்தார். இவர் தனது பேத்தியுடன் சேர்ந்து பல வகையான ஊறுகாய்கள், சட்னிகளை தயாரித்து விற்கிறார். இதில் கட்டா ஆம், மாங்காய் துருவல் சட்னி, குலாபி மீட்டா அச்சார் போன்ற இனிப்பு ஊறுகாயும் மக்களிடையே மிகவும் பிரபலமானவை.
ஹர்பஜன்ஸ் பச்பன் பாத் ஆஜயே: சண்டிகரைச் சேர்ந்த 97 வயதான பாட்டியின் சமையல் மிகவும் பிரசித்தம். இவரது instagram பக்கத்தில் பார்த்து நமக்கு பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிடலாம். இவரின் ஸ்பெஷல் ஐட்டம் கோபி ஷல்கம் கஜார் கா அச்சார் என்ற ஊறுகாய். இவரின் சமையல் பக்குவம் பற்றிக் கேட்டால், ‘என் கையில் ஒன்றும் இல்லை. எல்லாம் சுத்தமான நெய்யின் மகிமைதான்’ என்று சர்வ சாதாரணமாகக் கூறுகிறார்.