நோயுற்றவர்களை சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் சேர்ப்பிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்களை கொண்டாடுவதற்கும், நன்றி சொல்வதற்குமான நாள் ஆகஸ்ட் 20. இன்று சர்வதேச மருத்துவ போக்குவரத்து பணியாளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மருத்துவ டிரான்ஸ்போர்ட்டர்களின் முக்கியத்துவம்: விபத்தில் அடிபட்டவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் மற்றும் இதய நோயாளிகளை குணப்படுத்துவதில் பெரும்பங்கு மருத்துவர்களுக்கு இருந்தாலும். அவர்களை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்து வரும் மிகப்பெரிய பொறுப்பை செய்யும் மருத்துவப் போக்குவரத்து பணியாளர்களான ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் தேதி சுகாதாரப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுபவர்களை அங்கீகரிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு செல்பவர்கள், சிகிச்சை அளிக்கும் இடங்களுக்கு அவர்களை நகர்த்துபவர்களை கௌரவிக்கிறது.
முதலாம் உலகப் போருக்கு முன்பு நோயாளிகளை எடுத்துச் செல்ல குதிரை வண்டிகள் இருந்தன. பின்னர் மோட்டார் வாகனங்கள் மற்றும் விமான சேவைகள் வந்தன. காலப்போக்கில் மருத்துவப் போக்குவரத்தின் வரம்பு விரிவடைந்து உடனடி கவனிப்பை வழங்குவதற்கும் நோயாளிகளை திறம்பட கொண்டு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தன.
மருத்துவப் போக்குவரத்து பணியாளர்களின் முக்கியப் பொறுப்புகள்:
1. மருத்துவ டிரான்ஸ்போர்ட்டர்கள் என அழைக்கப்படும் மருத்துவப் போக்குவரத்து பணியாளர்கள் நோயாளிகள் மற்றும் சில நேரங்களில் மருத்துவ உபகரணங்களை ஒரு மருத்துவமனைக்குள் அல்லது வெவ்வேறு இடங்களுக்கு இடையில் நகர்த்துவதற்கு உதவுகிறார்கள்.
2. நோயாளிகளை மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்குக் கொண்டு செல்ல உதவுகிறார்கள். அவர்களின் அறையில் இருந்து கதிரியக்க சிகிச்சைக்கு, ஸ்கேன் அறை, அறுவை சிகிச்சை அறை அல்லது சிறப்பு சிகிச்சைக்கு கொண்டு செல்ல உதவுகிறார்கள். சக்கர நாற்காலிகள் ஸ்ட்ரெச்சர்கள் அல்லது படுக்கைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நோயாளிகளுக்கு உதவுகிறார்கள். அவ்வாறு நோயாளிகளை கையாளும்போது ஜாக்கிரதையாக பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்திக் கொண்டு செய்கிறார்கள்.
3. அவர்கள் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகளில் பயிற்சி பெற்றவர்கள். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் ஸ்ட்ரெச்சர்கள், சக்கர நாற்காலிகள் போன்ற உபகரணங்களை சுத்தம் செய்வது, கிருமி நீக்கம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
திறன்கள் மற்றும் குணங்கள்:
1. மருத்துவர் டிரான்ஸ்போர்ட்டர்கள் பெரும்பாலும் வெவ்வேறு துறைகளுக்கிடையே ஒரு இணைக்கும் கருவியாக செயல்படுகிறார்கள்.
2. நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லும்போது, அதிக மன அழுத்த சூழ்நிலைகளில் வேலை செய்கிறார்கள்.
3. மருத்துவ டிரான்ஸ்போட்டர்கள் வேலைக்கு உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் தேவை. ஏனென்றால். பெரும்பாலும் அவர்கள் இயலாமையுடன் இருக்கும் நோயாளிகளையும் கனரக மருத்துவ உபகரணங்களையும் கையாளுகிறார்கள். கவலையுடனும் வலியுடனும் வேறுவிதமான மன உளைச்சலில் இருக்கும் நோயாளிகளுடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற இரக்கம் மற்றும் பொறுமையான நடத்தை அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
4. போக்குவரத்தின்போது நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்தல், அவர்களை முறையாகப் பாதுகாத்தல், உபகரணங்களை கவனமாகக் கையாளுதல் போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களுடன் மருத்துவப் போக்குவரத்து பணியாளர்கள் திறம்பட தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, இந்த நாளில் அவர்களை நன்றியுடன் நினைத்து பாராட்டுவோம்.