அனைத்துப் பிரச்னைகளுக்கும் தூக்கமே பெரிய தீர்வு. தூக்கத்தைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் எந்த மருத்துவமும் இல்லை என்பர். கவலைகளைப் போக்கி நிம்மதியைத் தரும் மாபெரும் நிவாரணி தூக்கம். நிம்மதியாக உறங்கினாலே போதும், நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துக் கெட்ட விஷயங்களும் கண்ணுக்கு மகிழ்ச்சியானதாகவே தெரியும். மன வேதனை, டிப்ரஷன், ஸ்ட்ரஸ் இவை அத்தனைக்கும் தூக்கமே நல்ல மருந்தாகும்.
இந்த வேகமான யுகத்தில் அனைவரும் வேலை வேலையென அவசரகதியிலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம்.இதனால் பெரும்பாலானோர் சரியான நேரத்துக்கு சாப்பிடுவதோ, தூங்குவதோ கிடையாது. ஒருவர் அவரவர் வயதுக்கு எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்து அதன்படி நடந்தாலே உடலுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. நல்ல தூக்கம் இருந்தால்தான் உடல் புத்துணர்ச்சியோடு திகழும். இள வயதினருக்கு உடல் உறுப்புகள் தூக்கத்தில்தான் வளர்ச்சி பெறும். எனவே, தூக்கம் ஒருவர் உடலுக்கும், மனதுக்கும் கட்டாயம் தேவை.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ( 0 - 3 மாதங்கள்) ஒரு நாளைக்கு சராசரியாக 14 - 17 மணி நேர தூக்கம் தேவை.
4 - 11 மாத குழந்தைகள் சுமார் 12 - 15 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
1 - 2 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு 11 - 14 மணி நேரம் உறங்க வேண்டும்.
ப்ரீஸ்கூல் வயது குழந்தைகளான 3 - 5 வயது குழந்தைகளுக்கு பொதுவாக ஒரு நாளைக்கு 10 - 13 மணி நேர தூக்கம் தேவை.
பள்ளி வயது குழந்தைகளான 6 - 13 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு 9 - 11 மணி நேரம் தூங்க வேண்டும்.
இளம் பருவமான 14 - 17 வயதுடையோர் பொதுவாக ஒரு நாளைக்கு 8 - 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, அதாவது 18 - 64 வயதுடையோருக்கு கட்டாயம் ஒரு நாளைக்கு 7 - 9 மணி நேரம் தூக்கம் தேவை.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 7 - 8 மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும்.