சில நேரங்களில் எவ்வளவு பெரிய பிரச்னை நம் வாழ்வில் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்று தீர்க்கமாக நம்பியிருப்போம். அவ்வாறே நமக்கு நடந்திருக்கும். ஒரு விஷயத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைப்பதன் சக்தியை உணர்ந்தவர்களுக்கு இது புரியும்.
பாஸிடிவ் எண்ணங்கள், தன்னம்பிக்கை போன்றவற்றை வளர்த்துக்கொள்வது நமக்கு உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி பெரிய மாற்றத்தை கொடுக்கும். மருத்துவத்தில் இதற்கு ஒரு பெயர் உண்டு. அது தான் பிளாசிபோ எபெக்ட்டாகும்.
பிளாசிபோ எபெக்ட் என்றால், உடல் நலமின்றி இருக்கும் ஒருவருக்கு போலியாக செய்யப்படும் சிகிச்சை, அவர் மனதளவில் உண்மை என்று நம்பும்போது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு குணமாவதே பிளாசிபோ எபெக்ட்டாகும்.
நம்முடைய மனமே ஒரு பெரிய சக்தி வாய்ந்த குணப்படுத்தும் மருந்தாகும். இது நோயாளிக்கு, தனக்கு இருக்கும் பிரச்னைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகளை குறைக்கும்.
உதாரணத்திற்கு இப்போது நீங்கள் பச்சை நிற மாத்திரையை தலைவலிக்காக பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அதேபோல வேறு ஒரு பச்சை நிற மிட்டாயை கொடுத்தாலும் அது உங்கள் தலைவலியை போக்கும். எனெனில், பச்சை நிற மாத்திரை உங்கள் தலைவலியை போக்குமென்று உங்கள் மனம் நினைக்கிறது.
ஒரு நோயாளிக்கு எவ்வளவு தீவிரமான நோய் இருந்தாலும் சரி, மருத்துவர் அவரிடம் ஆறுதல் தரும் வார்த்தைகளைப் பேசி, ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை கொடுக்கும்போது அந்த நோயாளி, தனது நோய் பாதி குணமானது போல உணருவார். ஒரு குழந்தை தன்னுடைய தாயை எவ்வளவு கண்மூடித்தனமாக நம்புகிறதோ, அதுபோல நாம் ஒரு விஷயத்தின் மீது எந்த சந்தேகமும் இன்றி வைக்கும் நம்பிக்கையின் பலம் மிக அதிகமாகும்.
எப்படி பிளாசிபோ எபெக்ட் என்று ஒன்று உள்ளதோ, அதேபோல நோசிபோ எபெக்ட் என்றும் ஒன்று உண்டு. பிளாசிபோவில் எப்படி ஒன்றுமே இல்லாத விஷயம் நமக்கு நன்மையாக அமைந்ததோ, அதேபோல நோசிபோவில் ஒன்றுமேயில்லாத விஷயம் நமக்கு கெடுதலாக அமைந்துவிடும். இரண்டிற்குமே நமது எண்ணமே முக்கியக் காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் பாஸிட்டிவாக யோசிப்பது மிகவும் அவசியம் என்று கூறுகின்றனர்.
சில சமயங்களில் எந்த எதிர்பார்ப்புமின்றி நம்பிக்கை மட்டும் வைத்து நாம் செய்யும் செயலை பிரபஞ்சமே நமக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் என்று கூறுவதுண்டு. இதன் மூலம் என்ன தெரிய வருகிறது. நாம் ஏதாவது ஒரு செயலை செய்யப்போகும் முன்பு அதன் மீது எந்த சந்தேகமுமின்றி முழு நம்பிக்கை வைத்து செய்யும்போது நிச்சயம் அது நிறைவேறும்.
ஆகவே, இனி இன்டர்வியூ போன்ற முக்கியமான விஷயங்களுக்கு செல்லும்போது, ‘நாம் தேர்வாகுவோமா மாட்டோமா?’ என்ற குழப்பமான எண்ணத்தில் போகாதீர்கள். ‘நான் நிச்சயம் தேர்வாகி விடுவேன்’ என்று முழுமையாக நம்பி செல்லுங்கள். அந்த நம்பிக்கைக்கு பலம் உண்டு, அந்த எண்ணத்திற்கு சக்தி உண்டு. எண்ணம் போல் வாழ்க்கை என்று சும்மா சொல்லவில்லை. நிச்சயம் நினைத்தது எல்லாம் நடக்கும். அப்படி நினைப்பது எல்லாம் பாசிட்டிவாக இருக்கும்போது, அது இன்னும் நம்மை வாழ்க்கையில் மேம்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மையாகும். முயற்சித்துதான் பாருங்களேன்!