Do you know how to be a parent that children love?
Do you know how to be a parent that children love?

குழந்தைகள் விரும்பும் பெற்றோர் ஆவது எப்படித் தெரியுமா?

Published on

ற்காலத்தில் அம்மா, அப்பா இருவருமே வேலைக்கு செல்வதால், குழந்தைகள் தனிமையை அதிகம் சுவாசிக்க கற்றுக் கொண்டு விட்டார்கள். குழந்தைகள் வீட்டிற்கு வரும்போது வீட்டைத் திறந்து யாராவது வா என்று அழைத்துச் சென்றால் அவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள். ஏனெனில், சிறிதளவு வயது கூடிவிட்டாலே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சாவி வாங்கிச் சென்று, வீட்டைத் திறந்து உள்ளே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய குழந்தைகளுக்கு இருப்பது எல்லோரும் அறிந்ததே. அவர்கள் விரும்பும்வண்ணம் பெற்றோர்கள் நடந்துகொள்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

முன்மாதிரி: இருவரும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது முதல், நேரத்திற்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, நீங்களும் நேரம் தவறாமல் அலுவலகம் செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை முடிப்பது, எங்காவது வருகிறேன் என்று வாக்கு கொடுத்திருந்தால் சரியான நேரத்திற்கு புறப்பட்டுச் செல்வது, நேர்த்தியாக உடை அணிவது, வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உரிய முறைப்படி வரவேற்பது போன்றவற்றை நேர்த்தியாக செய்தால் குழந்தைகளும் அதைக் கற்றுக் கொள்வார்கள். இதனால் உங்கள் மீது பாசத்தைப் பொழிவார்கள்.

பங்களிப்பு: பள்ளி நாட்களில் நடக்கும் போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்று பரிசு பெற்றால் ,அதைப் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்கள் பரிசு பெறும் நாட்களில் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டு, குழந்தைகள் மற்ற குழந்தைகளிடம், ‘இது என் அப்பா, அம்மா’ என்று கூறும் அளவிற்கு  பரிச்சயப்படுத்திக் கொண்டால், குழந்தைகள் அதை மிகவும் பெரிய விஷயமாக எண்ணுகிறார்கள். இருவரும் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பில் இடம்பெற முடியாவிட்டாலும், ஒவ்வொரு மாதமும் ஒருவர் மாற்றி ஒருவர்  கலந்து கொள்ளலாமே.

நிதானம்: குழந்தைகள் எதை பேச வந்தாலும் காது கொடுத்துக் கேளுங்கள்.  ‘முக்கியமான வேலையாக இருக்கிறேன். அப்புறம் பேசு. சும்மா தொண தொணக்காதே’ என்று கூறாதீர்கள். அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால் சட்டென்று கோபத்தை வெளிப்படுத்தி அடிப்பது , முறைத்துப் பேசுவது போன்றவற்றை குழந்தைகள் அடியோடு வெறுப்பார்கள். ஆதலால்  உடல்நிலை சரியில்லை என்றால் மருந்து கொடுப்பதில் இருந்து சாப்பாடு ஊட்டுவது, பள்ளிக்குப் புறப்பட வைப்பது என்று எல்லாவற்றிலும் சில சிரமங்கள் இருக்கவே செய்யும். அவற்றை எதிர்கொள்வதற்கு இருவரும் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு நிதானம் மிகவும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
நல்லெண்ணெய் Vs தேங்காய் எண்ணெய்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
Do you know how to be a parent that children love?

நம்பகத்தன்மை: இரண்டு பேரும் வேலைக்குப் போகும் சில இடங்களில் சமைப்பதற்கு, வீட்டு வேலைகள் செய்வதற்கு என்று ஆட்களை தனித்தனியாக நியமித்திருப்பது போல், மூன்று மணி நேரம் ஐந்து முதல் எட்டு வரை இரவில் டியூஷன் அனுப்புவதற்கும் ஆசிரியர் பெருமக்களை அமர்த்தி இருக்கிறார்கள். அதன் பிறகு வீட்டுக்கு வந்து அவர்களுக்கு புரியாததை கேட்டால், அலுத்துக்கொள்ளாமல் சொல்லிக் கொடுங்கள். அதை விடுத்து, ‘என்னிடம் ஒன்றும் கேட்காதே. நாளைக்கு டியூஷன் டீச்சரிடம் கேள்’ என்று சொல்லாதீர்கள். பிறகு உங்களிடம் கேட்பதையே அவர்கள் நிறுத்திக்கொண்டு விடுவார்கள். உங்கள் மீது வைத்திருக்கும் நம்பகத்தன்மை இதனால் குறைந்து போகும்.

இந்த நான்கு செயல்களையும் சரியானபடி செய்து வந்தால் குழந்தைகள் உங்களை மிகவும் விரும்புவார்கள். நீங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க முன்வருவார்கள். உங்களுக்கும் பிரச்னை இருக்காது.

logo
Kalki Online
kalkionline.com