உங்கள் பிள்ளைகள் தங்கள் பாடங்களை அன்றாடம் படித்துவிட்டால் எவ்வளவு பாடம் இருந்தாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும். அத்துடன் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போது கவனத்தை எங்கும் சிதற விடாமல் ஊன்றி கவனிக்க வேண்டும். மற்றும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் மனதில் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்துத் திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.
ஒரு கிராமத்தில் அறிஞர் ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே. எனவே நிதானமாகவும் அதேசமயம் மாணவர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக்கொடுத்து வந்தார். ஒரு நாள் தனது மாணவர்களைப் பார்த்து, ‘‘நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். ‘படிப்பது சுகமானதா? சுமையானதா?’ என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள். ஆனால், படிப்பதை சுகமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்.
ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் நன்கு கனமாக வளர்ந்த ஒரு பசுவை எந்தச் சிரமமுன்றி தனது தோள் மீது போட்டுக்கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை பிரம்மிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது. ‘எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது’ என்று பலரும் கேட்டனர்.
‘ரொம்பவும் சுலபம்’ என்றான் அவன்.
‘எப்படி?’ என்றார்கள் மற்றவர்கள்.
இந்தப் பசு கன்றுக் குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகி விட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை’ என்றான்.
இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்குச் சொல்லப்பட்ட கதை அல்ல. படித்தப் பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்” என்றார் அந்த அறிஞர்.
அனைத்துப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுப்படுத்தவே முடியவில்லை என்பதுதான். உங்கள் குழந்தையிடம் உள்ள உண்மையான பிரச்னை என்னவென்பதைக் கண்டறியுங்கள், அவர்கள் எதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர், என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும். அவர்களை சுலபமாக வழிக்குக் கொண்டு வந்து விடலாம்.