
காலத்திற்கு தகுந்தாற்போல் சில மாற்றங்களை வாழ்வு தோறும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டியது இருக்கிறது. முன்பெல்லாம் குழந்தை பிறந்தால் மிகவும் நெருங்கிய உறவுகளும், நட்புகளும் மாத்திரம் குழந்தைக்கு துணி வாங்கி போடுவது, கையில் காசு பணம் வைப்பது என்று இருக்கும்.
ஆனால் இப்பொழுதோ அவர்கள் வைக்கும் பரிசுப் பொருட்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணமும் மிகவும் உபயோகமானதாக இருக்கிறது. அவற்றைப் பற்றி சில இதோ:
குழந்தை பிறந்துவிட்டது என்பதை கேள்விப்பட்டவுடன் மதர் ஹார்லிக்ஸ், லாக்டோஜன், பாலாடை, ஃபீடிங் பாட்டில் ,ப்ளாஸ்க், நாப்கின், எளிதாக குழந்தைக்கு போட்டு கழட்டும்படியான துணிமணிகள், அவர்களுக்கான பவுடர் சோப் போன்ற மேக்கப் செட் என்று வாங்கி வந்து கொடுத்து விடுகிறார்கள்.
இன்னும் 8,10 பேர் சேர்ந்து பார்க்க வருவதாக இருந்தால் அவர்களாக நன்றாக பேசி, முடிவெடுத்து வாங்கிய பொருளையே திருப்பி வாங்காத படிக்கு ஆளுக்கு ஒன்றாக வாங்கி கொண்டு வந்து கொடுத்துவிட்டு குழந்தையை தூக்காமல் சற்று தூரத்தில் நின்றபடியே பார்க்கிறார்கள்.
அதைத் திறந்து பார்த்தால் ஒரு வருடத்திற்கு தேவையான துணி மணிகள், துண்டுகள், வசம்பு, வளையல் என்று அழகாக அடுக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வளவு வாங்க வேண்டுமா? ஏன் உங்களுக்கு வீண் சிரமம் இல்லைய ? என்று கேட்டால் அவர்கள் அதற்கு அவர்கள் கூறும் பதில் குழந்தை பிறந்த வீட்டில் எப்பொழுதும் வேலை இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுதெல்லாம் உதவிக்கு என்று யாரையும் அழைக்க முடியாது.
அவரவர் வேலையை அவரவர்களே செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. அப்படி இருக்கும் பொழுது குழந்தைக்குத் தேவையானதை வாங்கி கொடுத்துவிட்டால், இதற்காக கடைகளில் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம்தானே. அதற்காகத்தான் இப்படி ஒரு ஏற்பாடு என்று கூறினார்கள்.
இன்னும் சிலர் பிரசவ லேகியம், பிரசவ மசாலா பவுடர், மஞ்சளில் ஊறுகாய், வீட்டிலேயே கண்மை தயாரித்தது, வீட்டிலேயே குழந்தைகளின் துணிமணிகளை வைப்பதற்காக ஒயர் கூடை செய்து எடுத்து வந்தது என்று இருந்தது.
இன்னும் சிலர் வரும்போது குழந்தைக்கான கிளுகிளுப்பைகள், விளையாட்டு பொம்மைகள், ஒருவர் இனிப்புகள், ஒருவர் காரம், ஒருவர் பழம் என்றும் வீட்டில் விளைந்த அவரைக்காய் போன்ற காய்கறிகள் என்றும் எடுத்து வந்து கொடுத்தனர்.
காசு, பணம், பொன், பொருள் என்றும் மட்டும் இல்லாமல் அன்றாடம் தாய்க்கும் சேய்க்கும் என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் திட்டமிட்டு பார்த்து பார்த்து வாங்கி வந்து கொடுத்ததை நினைக்கும்போது நாமும் மற்றவர்களுக்கு இது போல் செய்ய வேண்டும். அது அவர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
முன்பெல்லாம் திருமணம் நடக்கும் பொழுது உறவினர்கள் ஒன்றாகச் சேர்ந்து பேசி யார் யார் என்னென்ன பொருள் மணப்பெண்ணுக்கு வைக்க போகிறோம் என்பதை முன்கூட்டியே தகவல் கொடுத்து விடுவார்கள். அது பெண் வீட்டார் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.
அது ஒரு காலம். இப்பொழுது குழந்தை பிறந்த வீட்டில் இருக்கும் பணி சுமைகளுக்கு ஏற்றவாறு தேவையான பரிசு பொருட்களை மனமுவந்து அளிக்கிறார்கள். இதுவும் அவசரத்துக்கு உதவியாகத்தான் இருக்கிறது.
உலகத்தில் மாறாதது மாற்றம் மட்டுமே என்பதை இதன் மூலம் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் உறவு பலப்பட கொடுக்கல் வாங்கல் தேவையான ஒன்றுதான். மனம் உவந்து செய்பவர்களை வரவேற்று உபசரித்து, தக்க பதில் மரியாதை செய்து வழி அனுப்பி வைப்போமாக!